திருந்திய மனம் - பாகம் 4 

வெளியே வந்த இலக்கியா அப்போதுதான் இன்னும் Mediclaim இருவருமே எடுத்து கொள்ளாமல் இருப்பதை உணர்ந்து அதை பெற்றோரிடம் தெரிவித்தாள் . அதற்கு அவளின் அப்பா ஏதாவது வழி கிடைக்கும் ஒன்றும் கவலைப்படாதே என்று ஆறுதலாக கூறினாலும் , அவர் மனதிலும் குழப்பம் என்பதால் யோசிக்க ஆரம்பித்தார் . 


அப்போதுதான் ஒரு குரல் கேட்டது . என்னமா இலக்கியா , எங்கே இந்தப்பக்கம் ...ஏன் இங்கு நிற்கிறாய் ..உடல்நலம் சரியில்லையா ...பாரி நலமா என்று சரமாரியாக கேட்க ஆரம்பித்தார் . முதலில் சற்று தயங்கி ஒன்றும் புரியாமல் விழித்தவள் , பின்பு சுதாரித்துக் கொண்டு , சார் நீங்கள் ..என்று ஆரம்பித்தாள் . அதற்குள் அவர் முந்திக்கொண்டு , என்னம்மா அதற்குள் மறந்து விட்டாய் . ஊட்டி செல்லும் பஸ்ஸில் சந்தித்த்தோமே ...நான் ஹனீபா என்றார். அவள் உடனே நினைவுக்கு வந்தவளாக சுதாரித்துக் கொண்டு , ஆமாம் சார் சாரி ...ஞாபகம் வந்துவிட்டது என்றாள் . அதன்பிறகு நடந்தவற்றை அனைத்தையும் கூறினாள் . அவர் உடனே நம்ம பாரிக்கு இப்படி நிகழ்ந்து விட்டதா என்று மிகவும் வருந்தினார் . கவலைப்படாதே இலக்கியா . நல்லபடியாக சீக்கிரம் குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று ஆறுதல் கூறினார் . இந்த ஆஸ்பத்திரியின் முதலாளியான,  தலைமை டாக்டர் எனக்கு உறவினர்  . ஒன்றும் கவலை இல்லை . ஏதாவது உதவி தேவையா என்று பரிவுடன் கேட்டார் . அதற்கு இலக்கியாவும் அவள் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் . ஹனீபா அவர்கள் உடனே அவர்களின் நிலையை புரிந்து கொண்டு ஏதாவது பணம் தேவைப்படுகிறதா என்றதும் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர் . அதற்கு பதிலை இலக்கியா மென்று முழுங்கி மெல்லிய குரலில் ஆமாம் என்றாள் . 


இதற்கு ஏம்மா இப்படி தயங்குகிறாய் ...நான் வசதியா இருக்கிறேன் என்று உனக்கே தெரியும் . நீயும் என் மகள் மாதிரிதான் . இந்த நேரத்தில் தான் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும் . நாம் இறுதியில் எதை எடுத்து செல்லப்போகிறோம் . கொஞ்சம் இரு ...எனது டெபிட் கார்டு மூலம் கட்டுகிறேன். பிறகு உன்னால் எப்போது முடியுமோ அப்போது கொடும்மா ...முதலில் பாரியை காப்பாற்றுவது தான் நமது கடமை . அதுமட்டுமல்ல டாக்டரிடம் பேசுகிறேன் ...முடிந்த அளவு குறைத்து வாங்க சொல்கிறேன் . எனக்கு மிகவும் வேண்டியவர் என்றார் .  நானே அவரிடம் பேசி கட்டி விட்டு வருகிறேன் என்று விரைந்து சென்றார் . அப்படியே இலக்கியாவும் அவள் அப்பாவும் உறைந்து நின்றார்கள் அசைவின்றி .  
அவர் கூறியபடியே திரும்பி வந்தார் . இலக்கியா,  அறுவை சிக்கிச்சை இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாக போகிறது . நான் டாக்டரிடம் பேசி 50,000 ரூபாய் குறைத்து, மிச்ச பணத்தை செலுத்தி விட்டேன் என்றதும் இவளுக்கு கைகால் ஓடவில்லை . அப்படியே அவரின் காலில் விழப்போனவளை தடுத்து நிறுத்தி அதெல்லாம் வேண்டாம் . பாரி முதலில் நன்கு குணமாகட்டும் என்றார் . இங்கு அட்மிட் ஆகியுள்ள எனது உறவினர் ஒருவரை பார்க்க வந்தேன் . நான் மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து வருகிறேன் என்றவர் வெளியே சென்றார் .

அவரை ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் பார்த்தாள் ..இப்படி கூட நடக்குமா என்று . அதுமட்டுமல்ல , அன்று ஊட்டியில் பாரி , இவர் முஸ்லீம் என்பதால் அவர் வீட்டில் தங்கிட யோசித்தார் , ஆனால் அவரோ அதெல்லாம் பார்க்காமல் எப்படி வலிய வந்து உதவி செய்கிறார் என்று நினைத்தாள் .
இப்போதெல்லாம் தனியார் மருத்துவ மனைகளில் தெரிந்தவரென்றால் ஒரு தொகையும், மற்றவர் என்றால் வேறு தொகையும் வாங்கப்படுகிறது . இதை கண்கூடாக பார்க்கவும் முடிகிறது . இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை . அப்படியெனில் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் நிலை என்ன ஆவது ? 

எழுதியவர் : பழனி குமார் (20-Aug-20, 9:41 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 24

மேலே