நரகாசுரா

நரகாசுரா... நீ
நல்லவனா கெட்டவனா?
நானறியேனின்று வரை..

நாட்டுக்கு நீ தந்தாய்
பிரதி வருட
தித்திக்கும் தீபாவளி...
நரகாசுரா.. நீ
நல்லவனா கெட்டவனா?

பிறந்த நாளறியானும்
புத்தாடை உடுத்துகிறான்
நீ மரித்த அந்நாளில்..
நரகாசுரா.. நீ
நல்லவனா கெட்டவனா?

பெற்றோர் திதி தேதியறியானும்
எண்ணெய் நீராடுகிறான்
உனக்காக இன்று வரை..
நரகாசுரா.. நீ
நல்லவனா கெட்டவனா?

நாட்டின் வர்த்தகம்
நால் மடங்குயர்த்துகிறாய்
நீ மரித்த இத்திங்களில்...
நரகாசுரா.. நீ
நல்லவனா கெட்டவனா?

ஏழையுமின்று வரை
எளிமையுடன் கொண்டாட
இத்திருநாள் நீ தந்தாய்..
நரகாசுரா.. நீ
நல்லவனா கெட்டவனா?

பட்டாசும் மத்தாப்பும்
வசதியான வாசல் சேர
பலர் பசி நீ தீர்த்தாய்..
நரகாசுரா.. நீ
நல்லவனா கெட்டவனா?

யாசகன் ஓட்டிலும் இனிப்பு
காரம் கிடைக்கச் செய்தாய்
நீ மரித்த அந்நாள் மட்டும்...
நரகாசுரா.. நீ
நல்லவனா கெட்டவனா?

கோடிகள் செலவிட்டு களமிறங்கும் திரைப்படங்கள் பல
தந்தாய் பலரும் களிப்புற...
நரகாசுரா.. நீ
நல்லவனா கெட்டவனா?

இறந்துமின்று வரை
நன்மைகள் பல செய்கின்றாய்
எங்கிருந்தோ எல்லோருக்கும்..
நரகாசுரா... நீ
நல்லவனா கெட்டவனா?

கோடித்துணி கூட
தன்னுடன் வாராறென்றதறியா
கோடிகள் களவாடும்
கேடிகள் கோடி..
அக்கேடிகள் வாழும்
இக்கலியுகத்தில் நீ
மட்டும் வாழ்ந்திருந்தால்
கோடி கிருஷ்ணர்கள்
இவ்வுலகில் பிறக்கக்கோரி
கிருஷ்ணனிடமே வேண்டியிருப்பாய்..

நல்லது மட்டும் இக்கால
மக்கள் உணர்வதால்
நரகத்தில் நீயிருந்தால்
மீட்டெடுத்து சொர்க்கத்தில்
நான் இடுவேன்
என்னருமை நரகாசுரா..

கோட்ஸேவையும் கொண்டாடும்
பக்குவத்தில் என்னாட்டு
மக்கள் இந்நாளில்..
அது போல்
உன்னை கொண்டாடும் நாள்
வெகு தொலைவில் இல்லை
என்னருமை நரகாசுரா..
-----------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (20-Aug-20, 11:19 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 75

மேலே