குமரேச சதகம் – திருநீறு அணியும் முறை - பாடல் 88

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பத்தியொடு சிவசிவா என்றுதிரு நீற்றைப்
பரிந்துகை யாலெடுத்தும்
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு
பருத்தபுய மீதுஒழுக

நித்தம்மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடுவினை அணுகாது தேகபரி சுத்தமாம்
நீங்காமல் நிமலனங்கே

சத்தியொடு நித்தம்விளை யாடுவன் முகத்திலே
தாண்டவம் செய்யுந்திரு
சஞ்சலம் வராதுபர கதியுதவும் இவரையே
சத்தியும் சிவனுமென்னலாம்

மத்தினிய மேருஎன வைத்தமு தினைக்கடையும்
மால்மருகன் ஆனமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 88

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மேருமலையை அழகிய மத்தாகக்கொண்டு அமுதைக் கடைந்த திருமாலின் மருகனான முருகனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

பேரன்புடன் சிவசிவா என்று வழுத்தி விருப்பத்துடன் திருநீற்றைக் கையினால் அள்ளி, நிலத்திற் சிந்தாதவாறு மேல் நோக்கியவாறு காதுகளின் மீதும் தோள்களின் மீதும் படியும் வண்ணம்,

நெற்றியிற் பதியும்படி மூன்று விரல்களால் ஒவ்வொரு நாளும் (சிவ) நினைவுடன் அணிபவர்க்கு, நீண்ட நாளைய பழவினை நெருங்காது; மெய் தூயது ஆகும்;

அவர்களிடமிருந்து பரம்பொருள் விலகாமல் உமையம்மையாருடன் எப்போதும் விளையாடுவான்; முகத்திலே திருமகள் நடம்புரிவாள்; மனக்கலக்கம் உண்டாகாது; மேலான வீடு தரும்; இவர்களையே சத்தியும் சிவனும் என விளம்பலாம்.

கருத்து:

திருநீற்றை அன்புடன் அணிவோர் இம்மை மறுமையின்பங்களை எளிதின் எய்துவார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Sep-20, 8:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

சிறந்த கட்டுரைகள்

மேலே