வேறு விழையின் விளிகாமியாயிழிந்து மாறுபடுவாய் - காமம், தருமதீபிகை 644

நேரிசை வெண்பா

காதலிபால் நீதியொடு காதல் புரிந்தொழுகின்
காதலன் ஆகிக் கவின்பெறுவாய் - பேதையாய்
வேறு விழையின் விளிகாமி யாயிழிந்து
மாறு படுவாய் மருண்டு. 644

- காமம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

முறையே மணந்து கொண்ட மனைவி மேல் காதல் புரியின் நல்ல காதலனாய் விளங்கி நிற்பாய்; அல்லாத வேறு மாதரை விழையின் வீணக் காமியாய் இழிந்து விளிந்து படுவாய் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அன்பு, காதல், காமம் என்பன பெண் போகங்களின் பாகங்களாய் மேவியுள்ளன. கலவியின்பம் ஒன்றையே கருதியிராமல் பலவகைப் பண்புகளும் படிந்து நிலை உயர்ந்துள்ளது அன்பு என வந்தது. தலை சிறந்த குலமக்களிடம் இது குலாவி மிளிர்கிறது. மக்கட் பேறு கருதி மருவி அதனைப் பெற்ற பின் பொறி நுகர்வை ஒருவி உரிமை கூர்ந்து உயர்ந்த பரிசுத்த நிலையில் வாழ்ந்துவரும் சதிபதிகளிடம் நேர்ந்து நிலவும் இது ஆன்ம நேயமாய்ப் பான்மை சுரந்து மேன்மை நிறைந்துள்ளது.

நெறிமுறையே மணந்த மனைவியோடு விழைந்து நுகர்ந்து வரும் உள்ளக் கனிவு காதல் என வந்தது. இது விழுமிய நிலையில் உயரும் பொழுது உழுவலன்பாய் ஒளிபுரிகின்றது.

காமம் என்பது இழிந்த இச்சையில் அழுந்தி உழல்வது; உத்தமம், மத்திமம், அதமம் என இம்மூன்றும் முறையே கருதப்படும். நிலைமைகள் நினைந்து சிந்திக்கவுரியன.

அன்பன், காதலன் என்னும் அளவில் இன்ப போகங்களை நுகர்ந்து வருபவன் பண்பும், பயனும் படிந்து நன்கு மதிக்கப் படுகின்றான். நெறிமுறையுடையது நீதியாய் நின்றது.

புனிதமான இந்தப் படிகளைக் கடந்து நசை மீதுார்ந்து பொறிவெறியனாய்த் திரியின் அவன் கழிகாமியாய் இழிவுறுகின்றான். மையல் மயக்கம் வெய்ய துயரமாய் விரிகிறது.

நல்ல அறிவு படைத்த மனிதன் வரம்பு மீறிப் போய்ப் பொல்லாத இச்சையால் புலை புரிவது அவலக் கவலையாயுள்ளது. அறநெறி பிறழாமல் ஒழுகி வருவதே ஒழுக்கம் என வந்தது. இந்த ஒழுக்கத்தை உயிரினும் ஓம்ப வேண்டும் என்று வள்ளுவர் உரிமையோடு போதித்துள்ளார். இவ்வாறு போதித்திருந்தும் அதனைப் பேணி வருபவர் அரியராயிருப்பது அதிசயமாயுள்ளது. உரிய மனைவி வீட்டிலிருந்தும் மதிகேடனாய் ஒருவன் அயல் மனைவியை விழைவது அதிபாதகமாகின்றது.

நேரிசை வெண்பா

பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணஞ் செய்து கடிப்புக்க - மெல்லியற்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு. 86 பிறர்மனை நயவாமை, நாலடியார்

தன்னுடைய மனைவி தகுதியாய் வீட்டில் இருக்கப் பிறனுடைய மனைவியை விரும்பிப் போகின்றானே அந்த மனிதனது மடத்தனம்தான் என்னே! என்று பண்டைப் புலவர் ஒருவர் இங்ஙனம் பரிந்து வருந்தியிருக்கிறார்.

நேரிசை வெண்பா

திருவினு நல்லாள் மனைக்கிழத்தி யேனும்
பிறர்மனைக்கே பீடழிந்து நிற்பார் - நறுவிய
வாயின வேனும் உமிழ்ந்து கடுத்தின்னும்
தீய விலங்கிற் சிலர். 80 நீதிநெறி விளக்கம்

தன் மனைவி இலட்சுமிபோல் இருந்தாலும் அவளை விட்டு அயலான் மனைவியை விழைந்து இழிந்து போவது ஈன மிருகத்தின் இழிசெயல் எனக் குமரகுருபரர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

மனிதன் மதிகெட்டு இழிந்த பொழுது மாடு, பன்றி என்று இகழப்படுகின்றான். நெறியோடு நிலையில் நிற்கும் வரையே தலைமைத் தன்மை நிலைத்து நிற்கிறது. நிலை குலைந்தால் தலையிலிருந்து உதிர்ந்த மயிர்போல் அவன் இழிந்து கழிகிறான்.

சூட்டுமுகந் திருத்தி வேட்டுநறு நீரின்
மயிரும் இறகுஞ் செயிரறக் கழீஇக்
110 கோனெய் பூசித் தூய்மையு ணிறீஇப்
பாலுஞ் சோறும் வாலிதி னூட்டினும்
குப்பை கிளைப்பறாக் கோழி போல்வர்
மக்க ளென்று மதியோர் உரைத்ததைக்
கண்ணிற் கண்டேன் என்று கைந்நெரித்(து)
115 ஒண்ணுதன் மாதர் உருகெழு சினத்தள்
தம்மால் வந்த தாங்கரும் வெந்நோய்
தம்மை நோவ(து) அல்லது பிறரை
என்னது நோவல் ஏத முடைத்து. 14. நலனாராய்ச்சி, 3. மகத காண்டம், பெருங்கதை

(கோழியானது தன்னை வளர்ப்போர் பெரிதும் விரும்பி அதன் தலையிலுள்ள சூட்டினை அழகுறத் திருத்தி நன்னீரில் அதன் மயிரையும் இறகையும் அழுக்ககலக் கழுவித் தூரியக் கோலால் நறு நெய்யைத் தடவித் தூய இடத்தில் வைத்து நாடோறும் பாலுஞ் சோறும் தூயனவாக ஊட்டி, வளர்த்தாலும் தனக்கியல்பான குப்பை சீக்கும் தொழிலை விடாது. அந்தக் கோழியை ஒப்பாரும் மாந்தருட் சிலர் உளர், என்று அறிவுடையோர் கூறிய உண்மையை இன்று யான் என் கண்ணாலேயே கண்டுணர்ந்தேன் என்று அவன் கேட்கும்படி கூறினாள் பதுமாவதி)

தன்னுடைய கணவன் வேறு ஒருத்தியை விரும்பி மாறுபாடு புரிந்தான் என்று தெரிந்தபோது பதுமாபதி என்னும் தலைவி இப்படிப் புலந்து வருந்திப் புலம்பி யிருக்கிறாள்.

நல்ல நீராட்டிப் பாலும் சோறும் ஊட்டி இனிது பேணி வரினும் குப்பையைக் கிளைக்கப் போகும் கோழிபோல மக்கள் சிலர் ஈன நிலைகளில் இயல்பாகவே இழிந்துள்ளனர் எனக் கொங்குவேளிர் என்னும் புலவர் ஒரு மங்கை வாயிலாக இங்ஙனம் உள்ளம் பரிந்து உரைத்துள்ளது ஈங்கு ஊன்றி நோக்கி உணரவுரியது.

நேரிசை வெண்பா

கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைப்போவாக் கோழிபோல், - மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும்.. 341 கீழ்மை, நாலடியார்

நல்ல அறிவுரையை எவ்வளவு போதித்தாலும் தன் மனம் போனபடி இழி வழிகளில் செல்வானே அன்றி உள்ளம் திருந்தி உயர்ந்து நில்லான் எனக் கீழ்மகனது ஈன நிலையை இது உணர்த்தியுள்ளது. நெறி அழிய நிலை இழிந்தது.

மனிதன் இழிபழக்கங்களில் இழிந்தபொழுது விலங்கு பறவைகளினும் கீழாக இகழ்ந்து பேச நேர்ந்தான். பிழையான வழிகளில் பழகிய பின்பு அவற்றின் பழி நிலைகளை உணர முடியாமையால் அவன் களி மிகுத்துத் திரிகின்றான்.

இவ்வகையான இளி களிப்பில் வளர்ந்து பலர் கிளர்ந்து நிற்கின்றார். சிறுமைகளைப் பெருமைகளாய் எண்ணிச் செருக்கி வருவது இழி கூட்டத்தின் இயல்பாயுள்ளது.

'கூத்தியாள் இல்லாதவன் கோமாளி' என இப்படி ஒரு இழிமொழி பழமொழியாய் இந்த நாட்டில் எழுந்துள்ளது. காமக் களிப்பில் கடையராய் மூழ்கியுள்ளவரது வாயிலிருந்து இது வந்திருக்கிறது.

’வேறு விழையின் விளி காமி’ என்றது மாறு முகம் பாராதே என மதியூட்டி நின்றது.

உரிய மனைவியோடு பிரியமாய் உவந்து வாழ்; வேறே பாராதே; பார்த்தால் பழியும் பகையும் பாவமும் துயரும் வழி வழியே தொடர்ந்து படர்ந்து அடர்ந்து வருத்தும்.

காதல் கடந்து கழிகாமி ஆயினால்
நோதல் தொடர்ந்து வரும்.

அதனை அறிந்து நோதலை ஒழித்து வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Sep-20, 4:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே