கள்ளம் கதுவாமல் ஒழுகிவரின் இன்ப நலன்கள் பெருகி வரும் - கரவு, தருமதீபிகை 654

நேரிசை வெண்பா

கள்ளம் கபடு கதுவாமல் யாண்டும்தன்
உள்ளமே சான்றாய் ஒழுகிவரின் - வெள்ளமென
இன்ப நலன்கள் இனிது பெருகியுன்
முன்பு வருமே முனைந்து. 654

- கரவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உள்ளத்தில் கள்ளம் கபடுகள் புகாமல் பாதுகாத்து மனமே சாட்சியாய் நீ ஒழுகி வரின் அரிய இன்ப நலன்கள் எல்லாம் உன் எதிரே வெள்ளம் போல் விரைந்து பெருகி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பொல்லாத புன்மைகளைப் புறம் ஒதுக்கி நல்ல தன்மைகளை வளர்த்துவரின் அது அரிய பெரிய ஆன்ம பரிபாலனமாய்த் தழைத்து வருகிறது. அகம் புனிதமாக யாவும் இனிமையாகிறது.

நேர்மையும் சத்தியமும் மனிதனைத் தெய்வமாக்கி மாண்புகள் விளைக்கின்றன. கரவும் கபடமும் அவனைப் பிசாசு ஆக்கிப் பீழைகள் புரிகின்றன. வஞ்ச நினைவால் நெஞ்சம் கெட்டு, அந்த மனிதன் கெட்டவனாய்க் கேடுகள் செய்ய நேர்கின்றான். அதனால் அவலத் துயரங்கள் விளைகின்றன.

’சூதும் வாதும் வேதனை செய்யும்' என ஒளவையார் இவ்வாறு போதனை செய்துள்ளார். வஞ்சச் சூதுகள் ஒழிந்த பொழுதுதான் அந்த நெஞ்சம் நீதி நெறிகளில் நிலைத்து நேர்மையோடு நெடிது செல்லும். உள்ளம் நேரிய வழியில் ஒழுகின் அங்கே சீரிய மேன்மைகள் செழித்து வருகின்றன. கரவுறின் கடுங்கேடுகள் உறுகின்றன.

கள்ளம் நீங்கிய அளவு உள்ளம் ஒளிசெய்து மிளிர்கின்றது.

அறுகும் கரடும் நிறைந்த தரிசு நிலத்தில் நல்ல பயிர்கள் விளையா; அதுபோல் கரவும் கபடும் படிந்த உள்ளத்தில் தருமப் பயிர்கள் முளையாது.

நீ புண்ணியவானாகி உயர்ந்த இன்ப நலங்கள் அடைய வேண்டின் முதலில் உன் உள்ளத்தைப் புனிதமாக்கு; சித்த சுத்தியிலேதான் முத்தித் திரு என்றும் உவந்து நிற்கிறாள்.

நெஞ்சம் ஆகிய நிலத்தில் வஞ்சம் ஆகிய கொடிய கட்டை இல்லையானால் அங்கே தருமமாகிய கற்பகத் தரு செழித்து வளரும்; அதில் தெய்வீகமான இன்பக் கனி பழுத்து வரும் என ஆன்ம அனுபவமுடைய மேன்மையான ஒரு ஞானி தெளித்திருக்கிறார். ஞானமொழி வான ஒளியாய் வயங்கியுள்ளது.

நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை .
வேர்அற அகழ்ந்து போக்கித் துார்வைசெய்!

என்.று பட்டினத்தார் பரிந்து போதித்துள்ளார். புனித போதனை நுணுகி உணரவுரியது.

வஞ்சம் படிந்தபோது அந்த நெஞ்சம் நஞ்சமாய் நாசமே தந்து, ஈசன் அருளை இழந்து அது நீசமடைந்து நிற்கிறது. நெஞ்சம் புனிதமுறின் ஈசன் நிலையமாய் இனிமையுறுகிறது.

வஞ்சமிலார் நெஞ்சகத்தே மருவு முக்கண் மாமணியே! என இறைவனை இராமலிங்கர் துதித்திருக்கிறார்.

’வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கைமிகத் திரண்டானை’ என்று விநாயகர் துதிக்கப் பட்டுள்ளார்.

வஞ்சகம் இருந்தால் அந்த நெஞ்சில் தெய்வத் திருவருள் சேராது என்பதை இவற்றால் உணர்ந்து கொள்ளுகிறோம். வஞ்சகன், சூதன், பொய்யன், கபடன் என மனிதன் இழிபழி அடைந்த பொழுது அழிதுயரங்களையே காணுகின்றான்.

நெஞ்சில் நேர்மை ஒன்று இருப்பின் அங்கே எல்லா நீர்மைகளும் நிறைந்து நிற்கின்றன. நேர்மையாளனை யாவரும் மதித்துப் போற்றுகின்றனர். அஞ்சாமை, ஆண்மை, வீரம் முதலிய மேன்மைகள் எல்லாம் நேர்மையுடையானிடமே நீர்மையோடு நிலவி நிற்கின்றன. அரிய பல நன்மைகள் அவனுக்கு உரிமையாய் வருகின்றன.

கரதலா மலகம்போல் கருத்தியலும்
புறத்தியல்போல் காட்டு வார்க்கு
விரதம்மா தவம்பிறவும் வேண்டுமோ?
அவர்புகுதா வீடும் உண்டோ? - மெய்ஞ்ஞான விளக்கம்

தன் உள்ளத்தில் நேர்மையுடையவர்க்கு விரதமும் தவமும் வே.று வேண்டியதில்லை; பேரின்ப வீடு அவர்க்கு உரிமையாம் என இது உணர்த்தியுள்ளது.

ஆமலகம் - நெல்லிக்கனி. உள்ளங்கை நெல்லிக்கனி போல் உள்ளும் புறமும் ஒத்திருப்பர் என நேர்மையாளரை இங்கே குறித்திருப்பது உய்த்துணரத் தக்கது.

A man must really be what he seems or purports to be. - Character

'புறத்தே தோன்றுகிறபடியே அகத்தே உண்மையாய் இருக்கவேண்டும்' என்னும் இது ஈண்டு எண்ணவுரியது. செம்மையான மனிதத்தன்மையை இது உண்மையாக உணர்த்தியுள்ளது; உள்ளம் கரவு ஒழியின் உயிர் உயர்வாய் ஒளி பெறுகிறது.
.
உள்ளமே சான்றாயொழுகி வரின் என்றது நேர்மையின் நீர்மையைக் கூர்மையாக உணர்ந்து கொள்ள வந்தது.

தன் நெஞ்சையே சாட்சியாக நேர் நிறுத்தி யாண்டும் நெறியோடு ஒருவன் ஒழுகி வரின் அரிய பல மாட்சிகளை அவன் எளிதே அடைந்து கொள்ளுகிறான்.

’இன்ப நலன்கள் வெள்ளம் என வரும்’ உள்ள்த்தில் நேர்மையாளனுக்கு உளவாம் ஊதியங்களை இது உணர்த்தியுள்ளது. நேர்மை தெய்வத்தின் நீர்மையாதலால் அதனையுடையவன் தெய்வத் திருவருளைத் தனி உரிமையாக அடைந்து கொள்கிறான்.

நேரிசை வெண்பா

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்(கு) என்றுந்
தருஞ்சிவந்த தாமரையாள் தான். 21 நல்வழி

நெஞ்சில் வஞ்சனை இல்லாதவர்க்கு எல்லாச் செல்வங்களையும் திருமகள் உள்ளம் உவந்து அள்ளிக் கொடுப்பாள் என ஒளவையார் அருளியிருக்கிறார். வஞ்சம் ஒன்று இல்லையானால் எல்லாப் பாக்கியங்களும் அவனைத் தஞ்சமாக வந்து அடையும் என்பதை இதனால் அறிந்து கொள்கிறோம்.

கள்ளம் ஒழிந்த பொழுது அந்த உள்ளம் புனிதமாய் உயர்ந்து, உயர்ந்த தெய்வங்கள் உரிமையாய் உவந்து உதவிகள் புரிகின்றன. அரிய பேறுகள் வருகின்றன.

உள்ளத்தில் கள்ளம் ஒழியின் உயரின்ப
வெள்ளத்தில் நின்றான் அவன்.

இதனை நீ உள்ளத்தில் வைத்து ஒழுகி உயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Sep-20, 6:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

மேலே