குமரேச சதகம் – நூலின் பயன் - பாடல் 100

பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வன்னமயில் ஏறிவரு வேலாயு தக்கடவுள்
மலைமேல் உகந்தமுருகன்
வள்ளிக் கொடிக்கினிய வேங்கைமரம் ஆகினோன்
வானவர்கள் சேனாபதி

கன்னல்மொழி உமையாள் திருப்புதல்வன் அரன்மகன்
கங்கைபெற் றருள்புத்திரன்
கணபதிக் கிளையவொரு மெய்ஞ்ஞான தேசிகக்
கடவுள்ஆ வினன்குடியினான்

பன்னரிய புல்வயலில் வானகும ரேசன்மேல்
பரிந்துகுரு பாததாசன்
பாங்கான தமிழாசி ரியவிருத் தத்தினறை
பாடலொரு நூறும்நாடி

நன்னயம தாகவே படித்தபேர் கேட்டபேர்
நாள்தொறும் கற்றபேர்கள்
ஞானயோ கம்பெறுவர் பதவியா வும்பெறுவர்
நன்முத்தி யும்பெறுவரே. 100

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்


பொருளுரை:

அழகிய மயிலின்மேல் எழுந்தருளும் வேலாயுதம் ஏந்திய பெருமான், மலைகளில் வாழ்வதை விரும்பிய முருகன், பூங்கொடிபோன்ற வள்ளியம்மையாரை மணக்க அழகிய வேங்கைமரம் ஆகிநின்றவன், அமரர் படைத்தலைவன்,

கரும்பைப் போன்ற மொழியை உடைய உமையம்மையாரின் திருமகன், அரனார் திருமகன், கங்கையின் திருப்புதல்வன், விநாயகருக்குப் பின் பிறந்த ஒப்பற்ற மெய்ஞ்ஞான குரு, ஆவினன் குடியில் வாழ்வோன்,

(ஆகிய) புகழ்தற் கடங்காத திருப்புல் வயலில் வாழும் பால குமரக்கடவுள் திருவடிக்கு விரும்பிய, அழகிய தமிழில் ஆசிரிய விருத்தமென்னும் பாவினத்தால் குருபாததாசன் என்னும் அடியேன் பகர்ந்த நூறு செய்யுளையும்,

ஆராய்ந்து விருப்பத்துடன் படித்தவர்களும், கேட்டவர்களும், ஒவ்வொரு நாளும் பிழையறப் படித்தறிந்தவர்களும் ஞானத்தை நல்கும் யோகத்தை அடைவார்கள்; எல்லாப் பதவிகளையும் அடைவார்கள்; நல்ல வீடுபேற்றையும் அடைவார்கள்.

கருத்து: குமரேச சதகத்தைப் படித்தவர் முருகனருளால் எல்லா நன்மைகளையும் இனிதே பெறுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-20, 7:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 110

சிறந்த கட்டுரைகள்

மேலே