பூசுணிக்காய் கறி

கொண்டத்தூரில் ஒரு வீட்டில் உணவருந்தினார் கவிஞர். பூசுணிக்காய்க் கறி மிகவும் சுவை கேடாயிருக்க, அதனைப் பழித்து இப்படிப் பாடுகிறார்.

நேரிசை வெண்பா

கண்டக்காற் கிட்டுங் கயிலாயம்; கைக்கொண்டுட்
கொண்டக்கால் மோட்சம் கொடுக்குமே! - கொண்டத்தூர்
தண்டைக்கால் அம்மை சமைத்துவைத்த பூசுணிக்காய்
அண்டர்க்காம் ஈசருக்கும் ஆம். 195

- கவி காளமேகம்

பொருளுரை:

"கொண்டத்துரிலே இருக்கும், தண்டை அணிந்த கால்களையுடைய இந்த அம்மை சமைத்து வைத்த பூசுணிக்காய்க் கறியினைப் பார்த்த பொழுதிலோ கயிலாயத்தை அடைவதாகத் தோன்றும்; கையிலெடுத்து உண்டுவிட்டாலோ மோட்சத்தையே கொடுத்து விடும்; இது தேவர்களுக்கும் ஈசர்க்குமே பொருத்தமானதாகும்.”

“பார்த்தாலே உயிர் போய்க் கொண்டிருப்பது போன்ற பிரமை ஏற்படும்; உண்டாலோ உயிரே போய்விடும்; தேவர்கள் பாற்கடலை விரும்பிக் கடைய, அங்கே ஆலகால விஷம் எழுந்தது; அதனால், அவர்கட்கு ஒருவேளை இது பிடிக்கலாம்; அந்த நஞ்சை உண்டானே ஈசன். அவனுக்கும் இது பிடிக்கலாம்' என்பது கருத்து.

கறியை வியந்து பாடியதாகவும் சிலர் இதற்குப் பொருள் கொள்வதுண்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-20, 8:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே