வஞ்சம் உளம்வைத்துப் பேசுவார் தஞ்சம் எனவரினும் சாரற்க - கரவு, தருமதீபிகை 655

நேரிசை வெண்பா

வஞ்சம் உளம்வைத்து வாயினிக்கப் பேசுவார்
தஞ்சம் எனவரினும் சாரற்க - நஞ்செனவே
அஞ்சி அகல்க; அகலாயேல் அல்லலெல்லாம்
மிஞ்சி எழும்பின் மிடைந்து. 655

- கரவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நெஞ்சில் வஞ்சனையுடையவர் நேரே இனிய வார்த்தைகளைப் பேசி அன்பு காட்டிவரினும் அவரை அனுகாதே; நஞ்சம் என்று அஞ்சி விலகிவிடுக; விலகாயேல் அல்லல் பல அடைந்து அலமரலுறுவாய், உள்ளதை உணர்ந்து உறுதி செய்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உருவத்தில் மனிதன் ஆயினும் உள்ளம் தீயதேல் அவன் கொடிய மிருகத்தினும் கடிய பாம்பினும் கொடியவனவான். புலி, கரடி, பாம்பு முதலியன எவ்வளவு கொடியனவாயினும் கேடுகளை எண்ணி ஆராய்ந்து குறி தப்பாமல் செய்யும் ஆற்றல் அவற்றினிடம் இல்லை. வஞ்சநெஞ்சன் நாச வேலைகளை நன்கு சூழ்ந்து நாடி நின்று எவ்வழியும் தப்பாதபடி செய்து விடுவானாதலால் அந்த நீசன் மிகவும் அஞ்சத்தக்கவன்.

உள்ளத்தில் வஞ்சனையுடையவர் உரை செயல்களில் அன்பும் பணிவுமுடையவர் போல் நன்கு நடிப்பராதலால் அந்த வஞ்சநிலைகளை நம்பலாகாது; நம்பினால் நாசம் நேர்ந்து விடும்.

கோவலன் மிகவும் நல்லவன்; பெருந்தன்மையுடையவன். தன் செல்வ நலங்களை இழந்து அல்லலுழந்து மதுரையை அடைந்து மனைவியின் கால் சிலம்பை விலைப்படுத்த விழைந்து வீதியிடையே சென்றான். கனகன் என்னும் தட்டான் ஒருவன் கண்டு,. அந்தச் சிலம்பை நல்ல விலைக்கு விற்றுத் தருவதாக நயமொழி புகன்றான். பொன்னகை செய்வோன் பொய் நகை செய்து இன்னுரையாடவே கோவலன்.அவனை நம்பினான். தனது அரிய அணியை அவனிடம் கொடுத்தான். அதனை வாங்கிக் கொண்டு போன அவ்வஞ்சன் அரசனிடம் போய்க் கோள் மூட்டினன்; அதனால் கோவலன் கொலையுண்டு மாண்டான். பின்பு உண்மை தெளிந்து அரசனும் உயிர்பதைத்து இறந்தான். அவலங்கள் பல விளைந்தன. ஒரு வஞ்சகன் செய்த தீமையால் நாடும் நகரமும் பாடழிந்து பரிந்து நொந்தன.

நெஞ்சில் வஞ்சனையுடையவர் எவ்வளவு கொடியவர்; அவரால் நாட்டுக்கு எவ்வளவு கேடுகள்! என்பதனை அந்த வஞ்சகக் கொல்லனால் உலகம் நேரே உணர்ந்து நெடிது வருந்தியது.

’அஞ்சி அகல்க’ என்றது வஞ்சனையாளரோடு பழகலாகாது; பழகினால் அழிவும் அல்லல்களும் விளையுமாதலால் அஞ்சி ஒதுங்குவது நலமாம், ஆகவே வஞ்சனையைக் கடப்பதற்கு அது ஒரு வழியாய் வந்தது. வஞ்சகனை நஞ்சகமுடைய கொடிய பாம்பாகக் கருதி ஒழுகவேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Oct-20, 8:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

சிறந்த கட்டுரைகள்

மேலே