கோழைத்தனம்

வேலைக்கு புறப்படும் சமயம் .வெளியே ஒருவர் வந்து நின்றார் .சார் ..சார்
வெளியே வந்து பார்த்தேன் பக்கத்து தெரு சதாசிவம் .
வாங்க வாங்க சார் என்ன காலங்காத்தால .
ஒன்னுமில்ல நம்ம வீட்டு பக்கத்துல இருக்கும் ரங்கசாமி ராத்திரி ரெண்டு மணி சுமாருக்கு போயிட்டாரு .அதான் சொல்லலாம்னு வந்தேன்.
சரி முன்னால போங்க .இதோ வந்துடுறேன் என்று சொல்லி விட்டு வீட்டில் போட்டுக்கொடுத்த காப்பி தண்ணியை வாயில் ஊற்றிக் கொண்டு வெளியே வந்து செருப்பை மாட்டிக் கொண்டு புறப்பட்டேன் .
ரங்கசாமி அவ்வளவு ஒன்றும் பழக்கமில்லை. ஏதோ மில்லில் வேலை செய்பவர் என்று நினைக்கிறேன் .கோயில் நன்கொடை குடிசை நன்கொடை என்று வருவார் .இரண்டொரு முறை பார்த்திருக்கிறேன். எனது தெருவிற்கு அடுத்தத்தெருவில் இருக்கிறார். வீட்டுக்கு முன் ஷாமியானா போடப்பட்டிருந்தது .ஒரு சிலர் உட்கார்ந்து இருந்தார்கள் .சிலர் ஆங்காங்கே சிறு குழுவாக நின்று கொண்டிருந்தார்கள். வீட்டுக்கு முன்னாள் இருந்தவரிடம் துக்கம் விசாரித்தேன் . ரங்கசாமியின் தம்பியாக இருக்கலாம் .பக்கத்தில் 12 வயது மதிக்கத்தக்க பையன் நின்று அழுது கொண்டிருந்தான் .
இவன்... இவன்.. இவனை நான் பார்த்திருக்கிறேன். எங்கே ?எப்போது? மனம் கேள்வி கேட்ட வண்ணம் இருந்தது. போடப்பட்டுஇருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தேன்.
சதாசிவம் பக்கத்தில் வந்து அமர்ந்தார். என்ன ஆச்சு சார் என்றேன்.
ஏதோ காய்ச்சல் என்று படுத்தாராம் .நேற்று சாயந்திரம் பையன் மெடிக்கல் ஸ்டோரில் டாக்டர் சீட்டு காட்டி மருந்து வாங்கி வந்து கொடுத்து இருக்கான் . ரெண்டு மூன்று முறை சாப்பிட்டு இருக்கிறார். ராத்திரி ரெண்டு மணி வாக்கில் நெஞ்சி எரியுது வயிறு எரியுது என்று காத்திருக்கிறார் .ஆஸ்பத்திரி போறதுக்குள்ள போயிடுச்சு.
சே பாவம் என்று வாய் சொன்னாலும் நேற்று நடந்தது என் நினைவுக்கு வந்தது. என்ன தவறு செய்து விட்டோம். என்னுடைய கோழைத் தனத்தால் சுயகௌரவத்தால் போலிகௌரவத்தால் ஒரு உயிர் போய்விட்டது .பாவம் இந்த சிறிய பாலகன் பரிதவித்து நிற்கிறான் .நினைத்துப் பார்த்தேன்.
நேற்று மாலை நானும் மெடிக்கல் ஸ்டோரில் மருந்து வாங்க போயிருந்தேன். இதோ அழுதுகொண்டு நிற்கும் இந்த பையன் மருந்து வாங்கிக் கொண்டு இருந்தான். இவன் யார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது .மருந்து பாட்டிலை எடுத்து தயாரித்த தேதி முடிந்த தேதி பார்த்தேன் .அந்த மருந்து காலாவதியாகி மூன்று மாதம் ஆகியிருந்தது. தூக்கி வீச வேண்டிய மருந்தை கொடுக்கிறானே என்று நினைத்து "ஏம்பா இது எக்ஸ்பைரி ஆகிடுச்சு என்றேன்".
அடுத்த வினாடி இடி இடித்தது .
மருந்து கொடுக்கும் கடைக்காரன் யோவ் உனக்கு என்ன வேணுமோ அத வாங்கிட்டு போ... அதிகப்பிரசங்கித்தனம் உனகெதுக்கு . நீ வந்த வேலைய பாத்துக்கிட்டு போவியா தேதி கண்டுபிடிக்க வந்துட்டான் என்று சத்தமிட்டான்.
எனக்கு சங்கடமாக போய்விட்டது. எல்லோரும் என்னையே பார்ப்பது போல் ஒரு கூச்சம். என்னை எல்லோரும் என்ன நினைப்பார்கள் என்று ஒரு ஈகோ என் நெஞ்சிலே தோன்றியது. அதேசமயம் எனக்கு ஏன் இந்த வீண் வம்பு என்று தோன்ற மருந்து வாங்காமலேயே வந்துவிட்டேன் .
இதோ ஒரு உயிர் போய்விட்டது .அப்போதே அங்கேயே பையனை நிறுத்தி கடைக்காரனிடம் பேசி சுய கவுரவம் பார்க்காமல் மருந்தை மாற்றியிருந்தால் இந்த உயிர் பிழைத்திருக்கும் .
ஆம் எனது கோழைத்தனம் ஒரு உயிரை பலிவாங்கி விட்டது. ஒன்று புரிந்தது எல்லோரும் நாணயமானவர்கள் இல்லை .இனி நமக்குத் தேவையானது எதுவாக இருந்தாலும் நல்ல பொருள் தானா சரியான தேதிதானா என பார்த்து வாங்க வேண்டும் .மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும் நாம் இனி கோழைத்தனமாக இருந்து விடக்கூடாது என்று முடிவு செய்துகொண்டேன்.
தவறு நடக்கிறது என்று தெரிகிறது .ஆனாலும் தன்மானம் அதிலிருந்து தப்பிக்க சொல்லுகிறது. மாற வேண்டும் நான் மட்டுமல்ல எல்லோரும் மாற வேண்டும்.

எழுதியவர் : சு.இராமஜோதி (2-Oct-20, 6:12 am)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 341

மேலே