மொட்டைமாடி

மொட்டை மாடி

எனக்கென தனி வானத்தை
வளைத்த பூமி
மனதை மையப்புள்ளியாக்கி
மையல் கொள்கிறது!

என் எண்ணக்கீற்றுகளில்
தோய்ந்த சாயங்கள்
வானெங்கும் வரைகின்றன
என் வாழ்வியல் வரைபடத்தை!

தூரத்து மரங்களுக்கு
மாலைகளாகி மகிழ்கின்றன்
அதன் தோள் அமர்ந்த
பல் வண்ணப் பட்சிகள்!

என் பார்வைகள்
பதித்த தடம் வழியே
தனியே பிரயாணிப்பதாய்
பிரியத்துடன் வெண்ணிலவு!

என் கனவுகளின் வித்துக்கள்
முளைவிட்டு ஒளிர்கின்றன
வானத்து வீதி எங்கும்
விண்மீனின் நாற்றங்கால்களாய்!

மேனிச் சிவப்பதனை
மேல் வானெங்கும் உரசி
அந்தியை அழகாக்கி
அஸ்தமிக்கின்றன
ஆதவக் கதிர்கள்!

அனுமதி ஏதுமின்றி
ஓடும் வாகனத்தின்
ஒலி பின் ஓடிய
என் பார்வைகள்
தப்பித்துச் சேர்வதாய்
மீண்டும் கண்ணோடு!

கலைந்து செல்லும்
மேகங்களின் மடிக்குள்
பொதிந்து ஊறுகின்றன
என் பொழுதுகளின்
இன்பங்கள்!

மொத்தத்தில்
மொட்டை மாடியதால்
வளர்கிறதே
என் கற்பனைக்கும்
கார் கூந்தல்!

சு.உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (7-Nov-20, 6:14 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : mottaimaadi
பார்வை : 141

மேலே