பெரியார்

கரத்தில் அவர் பிடித்து நடந்தது
கைத்தடியா, இல்லை
சமூகத்தின் சாதிவெறி சாய்க்க
வந்த கோடரியா?

தாடி மட்டும்தானே வெண்ணிறம்
உனக்கு.
இடி கொட்டும் உன் பேச்சு, அது
வெந்நீரன்றோ?

எரிமலை உன் வாய்வழி
வெடித்தபோது, அன்று
தெறித்த பொறியில் உன்தாடி
வெண்தாடி ஆனதோ?
சிந்திப்போர் தங்கள் சிந்தையிலும்
சிரசிலும் வைத்துக் கொண்டாடும்,
சீர்பெற்ற வைக்கம் வீரனல்லவா நீ.

பெண் உரிமைக்கு வீரிய விதை
போட்ட உத்தமன்.
பெண்ணின் சிறுமை களைய சீறிச்
சினந்த பெருமகன்.

சாதி ஒழிப்பு, பெண்உரிமை, இதை
சத்தான அடித்தளமாய் வைத்து,
கருத்தை வித்தாய் நீ போட்டதாலே
பெருத்துக் கூடியது திராவிடக்கழகம்.
இல்லை. இல்லை.
அது திராவிடக் கழகம் இல்லை.
அது திராவகக் கழகம்.
அநியாயம் கண்ட நொடிகளிலே,
அந்த
அநீதியை அமிலமாய் அரிக்கும்
கழகம்.

தனியாய் வாழ்ந்த வனிதயரையும்,
திசை மாறிய பறவைகளையும்,
துணை இழந்த அணங்குகளையும்,
முதல் மாநாட்டுக்கழைத்து
முதல் மரியாதை தந்தவன்.

பாவையர்க்கு நல்ல கல்வி தர,
சமயங்களும் எண்ணாத சமயம்,
உச்சமான கல்வி வேண்டுமென,
எச்சமயமும் கேட்ட தலைவன்.

தனித்து வாழ்ந்திடும் பாவையர்க்கு,
தங்கவொரு விடுதி கொடுத்தவன்.
பாவையர் நலம் காக்க தினம்,
பாரில் ஒரு விதி சமைத்தவன்.

விதியின் சதி என்று விதவையை
விலக்கி வைத்த வீணர் மத்தியில்,
மறுகரம் சேர்த்து வைத்து,
சதியின் நெற்றிக்கு
முற்றுப் புள்ளியும்,
விதியின் நெற்றிக்கு
மங்கலப் புள்ளியும்
வைத்த மகான்

எண்ண விதைகளை விதைக்க
மட்டும்தானே செய்தாய்.
உண்ண அப்பழம் கனியும்வரை
நீ காத்திருந்ததில்லை.
மனிதனை மனிதனாய் மாற்ற
தனியாய்ச் சுமந்த எதிர்ப்புகள்,
ஏசல்கள், ஏளனங்கள், ஏமாற்றங்கள்
எத்தனை? எத்தனை? எத்தனை?

தாலியென்பது அடக்கியாளும்
வேலியென கேலி செய்தாய்.
விதவைப் பெண்கள் வாழ்வுக்கு
விளக்கொளி காட்டிய வித்தகன்.

மேல் நரகத்தில் நான் மனிதனாக
மதிக்கப்பட்டால்,
கீழே வாழ்வதினும் நான் நரகத்தில்
மகிழ்வேனென,
ஆணித்தரமாய் அறைகூவிய
சுயமரியாதைச் சிங்கம்.

ஆண்டாண்டாய் நீ இடித்துரைத்தும்
மீண்டெழா மிச்சம் மீதமுண்டு இங்கே.
மீண்டு வந்து மெய் உரைத்து
ராட்டை தந்த சுதந்திரத்தை,
சாட்டை கொண்டு மீட்டுத்தர
எழுந்து வாருங்கள் ஐயா

ச.தீபன்.
நங்கநல்லூர்.
94435 51706.

எழுதியவர் : தீபன் (9-Nov-20, 9:53 am)
சேர்த்தது : Deepan
Tanglish : periyaar
பார்வை : 246

மேலே