நாயாய் கடிக்கும் நோய்

சீனாவில் தோன்றிச் சிதறுண் டுலகெங்கும்
தானாய் பரவித் தலைத்தூக்கித் – தேனாய்
இனித்தநல் வாழ்வில் இழப்புகள் கூட்டி
மனிதரை மாய்த்தாய் மறைந்து.
**
பொல்லாக் கிருமிப் புகழோ உயர்வுற
எல்லா வழிகளும் ஈங்கிருக்க – சொல்லாத்
துயரின் விளிம்புகளில் தோய்ந்த மனிதம்
பயத்தி லுழல்வதை பார்.
**
போர்செய்தும் வீழாப் புகழுடம்பு மன்றாடம்
சீர்கெட்டு வீழும் செயல்தன்னை – யார்செய்து
விட்டனரோ பாரீர். விளைந்த பயிரனைத்தும்
பட்டழிந்து போகிறதே பார்,
**
தனித்திருக்க விட்டுத் தவிக்கவைத்திம் மண்ணின்
புனிதத்தின் மீதொரு போராய் – பனிபோல்
படர்ந்தே கொரோனா பரிணாமம் நீட்டித்
தொடர்கிற தின்னும் துணிந்து.
**
முகக்கவச மிட்டே முகம்மூடி வாழ்ந்தும்
நகக்கணுவி னூடே நுழையும். - சுகங்கெடுக்கும்
நோயால் தொழிலிழந்த நூற்றுக் கணக்காரை
நாயாய் கடிக்கிறதே நம்பு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Nov-20, 1:38 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 85

மேலே