பொய்யிருக்கும் புன்மைதனைப் போற்றி வையமய்யல் பூண்டு மனிதர் - தீமை, தருமதீபிகை 686

நேரிசை வெண்பா

மெய்யிருக்க நல்ல வினையிருக்க மேவாமல்
பொய்யிருக்கும் புன்மைதனைப் போற்றியே - வையமய்யல்
பூண்டு மனிதர் புலையாடி ஓடியே
மாண்டு மடிகின்றார் மண். 686

- தீமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சத்தியமும் நல்ல உத்தம கருமங்களும் எத்திசையிலும் செய்யவுரியனவாய் இருக்கின்றன; இருந்தும் அவற்றைப் பேணி ஒழுகாமல் வீணே பொய்யும், புலைகளும் புரிந்து வெய்ய நிலைகளில் இழிந்து மனிதர் அநியாயமாய் மாய்ந்து மடிகின்றனர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

சத்தியத்தைத் தழுவி வரும் அளவே மனிதனுடைய வாழ்வு புனிதமாய் மருவி வருகிறது. மெய் ஒன்று சிதைந்தால் மேன்மைகள் யாவும் சிதைந்து போகின்றன. போக்கின் புலை தெரியாமையால் பொய்யராயிழிந்து வெய்ய நிலையில் மக்கள் மறுகி உழலுகின்றார்,

உண்மை, வாய்மை, மெய்மை என்பன மனம் மொழி மெய்களை இனமாய்த் தழுவி வந்துள்ளன. வாயாலும், மனத்தாலும், உடலாலும் மெய்யைப் பேணி வரவேண்டும் என்பதை இந்தப் பரியாய நாமங்கள் பாங்காயுணர்த்தி யுள்ளன.

உண்மையால் உள்ளம் தூய்மை ஆகின்றது.
வாய்மையால் வாக்கு மகிமை அடைகின்றது.
மெய்யால் மேனி மேன்மை யுறுகின்றது.

கள்ளம் யாதுமின்றி உள்ளம் தூய்மையாய் உள்ளதை உள்ளபடி பேசி வருவதே சத்தியம் என ஒத்துணர்ந்து வருகிறோம். நீரால் உடம்பு சுத்தம் ஆதல் போல், சத்தியத்தால் உயிர் புனிதமாய் உத்தம நிலையை அடைகின்றது. நீரால் கழுவாவிடில் உடல் அழுக்குப் படிந்து இழுக்குப் படும்; வாய்மை தோயாவழி உயிர் தூய்மை இழந்து தீமையாயிழிவுறும். மெய் மேலான மேன்மையை அருளுகிறது. பொய் கீழான தாழ்மையையே தருகிறது.

சந்தக் கலிவிருத்தம்
(காய் காய் காய் மா)

மெய்யுரைவி ளங்குமணி மேலுலக கோபுரங்க
ளையமிலை நின்றபுகழ் வையகத்து மன்னு
மையல்விளை மாநரக கோபுரங்கள் கண்டீர்
பொய்யுரையும் வேண்டாபு றத்திடுமி னென்றான். 271

- பிறவிகள் அறவுரை, முத்தி இலம்பகம், சீவகசிந்தாமணி

மெய்யால் புகழும் பொன்னுலக வாழ்வும் வரும்; பொய்யால் பழியும் நரகமுமே கிடைக்கும் என இது உணர்த்தியுளது. எவ்வழியும் இன்பநலங்களை அருளவல்ல மெய்யைக் கைவிட்டுப் பொய்யைப் பேசி மனிதன் புலையாயழிவது தொலையாத துன்பமாய்த் தொடர்ந்து நிற்கிறது. இழிவான பழக்கங்களைப் பழகி வருபவர் ஈனமாயிழிந்தே போகின்றார்.

பொய்ம்மைமொழி புகன்றறியேம் புகலமனம் எண்ணுகினும்
மெய்ம்மையல(து) உரையாகா வேதம்நவில் பயிற்சியால். - நைடதம்

நல்ல வழியில் பழகி வந்துள்ள நா பொல்லாத பொய்யைச் சொல்லாது என இது குறித்துள்ளது. பொய்யால் அல்லலே விளையும்; ஆன்மசக்தி அழிந்து இழிந்து போகும். மெய்யால் எல்லா மகிமைகளும் உளவாம்; சத்தியவான் அதிசய ஆற்றலுடையனாய் எத்திசைகளிலும் இசைமிகப் பெறுகின்றான். புகழும் புண்ணியமும் உடையதை இழந்து பழியும் பாவமும் தருவதைத் தழுவி இழிவது முழுமடைமையாய் உள்ளது. பொய் பேசுவது பிழையான பேடித்தனமேயாம்.

Dare to be true, nothing can need a lie. - Herbert

'உண்மையாகத் துணிந்து நில்; பொய் பேச வேண்டிய அவசியமேயில்லை' என ஜார்ஜ் ஹெர்பெர்ட் என்பவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Truth is as impossible to be soiled by any outward touch as the sunbeam. - Milton

'உண்மையை எதுவும் பழுதுபடுத்த முடியாது; சூரிய கிரணம் போல் அது யாண்டும் ஒளி வீசியுள்ளது.” என ஆங்கிலக் கவிஞராகிய மில்ட்டன் இங்ஙனம் குறித்திருக்கிறார். சத்தியத்தைக் கைப்பிடித்தவன் எத்தகைய இடர்களையும் வென்று நித்திய ஆற்றலுடன் நிலவி நிற்கிறான்.

வாயால் ஒரு பொய்யைச் சொல்லும்படி எவ்வளவோ கொடிய இடையூறுகளைச் செய்தும் சத்தியசீலனான அரிச்சந்திரன் யாதும் வழுவாமல் மெய்யையே பேணி மேன்மை மிகப் பெற்றான். தேவதேவர்களும் அவன் முன் வந்து நின்று ஆவலோடு புகழ்ந்து மகிழ்ந்தனர். இன்றும் அவனை உலகமெல்லாம் உவந்து போற்றி வருகின்றன.

சாபாலி என்னும் பெரியவரிடம் ஒரு வாலிபன் படிக்க வந்தான். அவனது நிலைமையை அம்முனிவர் வினவினர். உள்ளதையெல்லாம் அவன் ஒளியாமல் சொன்னான். உன் தந்தை பெயர் என்ன? என்றார். நான் யாருக்குப் பிறந்தேனே எனக்குத் தெரியாது; என் தாயை மாத்திரம் தெரியும்’ என்றான். அந்த வார்த்தையைக் கேட்டதும் அம்மாதவர் மனம் மிக மகிழ்ந்தார். நீயே உத்தமமான சத்தியவான்; உனக்கு எல்லாக் கலைகளும் எளிதே தெளிவாம்; உன்னிடமிருந்தே அரிய தவசிகளும் பெரிய உண்மைகளை உணர்ந்து கொள்ளுவார்' என உவந்து புகழ்ந்தார். அதன்பின் சத்தியகாமன் என்னும் பெயரோடு உயர் மகிமை பெற்று அவன் ஒளிசிறந்து நின்றான்...மருவிய ஒர் உண்மையால் அரிய பல நன்மைகள் வரலாயின.

இவ்வாறு சத்தியத்தைப் பேணி எத்திசையும் இசைபரப்பி நின்ற உத்தமர்களைப் பெற்றிருந்த இந்நாடு இப்பொழுது எவ்வளவு கேடு அடைந்திருக்கிறது! பொய்யர்களைப் புலையாய்ச் சுமந்து வையம் நொந்து வருந்தி வருகிறது.

எல்லாத் தீமைகளுக்கும் பொய் மூலகாரணமாயுள்ளது. அது ஒன்று இல்லையானால் அங்கே எல்லா நன்மைகளும் பெருகி என்றும் இசை வளர்ந்து நிற்கும்.

’புலையாடி மடிகின்றார்’. என்றது பொய் முதலிய தீமைகளைச் செய்து நீசமாயிழிந்து நாசமடைந்து வருதலை நினைந்து வந்தது. தீய செயல்கள் மனிதனைத் தீயனாக்கி விடுகிறது; அவை நீங்கிய அளவு தூயனாயுயர்ந்து மிளிர்கிறான்.

நேரிசை வெண்பா

தான்கெடினும் தக்கார்கே(டு) எண்ணற்க தன்உடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத்(து) உண்ணற்க - வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோ(டு) இடைமிடைந்த சொல். 80 பொறையுடைமை, நாலடியார்

இந்த உறுதி நலங்களை உள்ளம் கொண்டு ஒழுகி உய்யவேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Nov-20, 7:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே