ஊனருந்தி வாழ்வார் வானருந்தும் வாழ்வை வறிதிழந்தார் - புலை, தருமதீபிகை 696

நேரிசை வெண்பா

ஊனருந்தி வாழ்வார் உயிரழிந்தார் உற்றுப்போய்
வானருந்தும் வாழ்வை வறிதிழந்தார் - ஆன
உறுதி முழுதும் ஒழிந்தார் உணரார்
இறுதி இழிவை எதிர். 696

- புலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஊனைத் தின்று வாழ்பவர் தமது உயர்வான உயிர்நிலை அழிந்தார்; துறக்க வாழ்வை இழந்தார்; முத்திப்பேறு முதலிய அரிய நலங்கள் யாவும் ஒழிந்தார்; மேவிய பாவ இழிவுகளை யாதும் உணராமல் பாழே அவர் பழிபடலாயினார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
-
புலால் உணவால் விளையும் புலைநிலைகளை இது புலன் தெரிய விளக்கியுள்ளது. உடலைக் கொழுக்க வளர்க்க விரும்பி உயிரைப் பாழாக்கிக் கொள்வது பெரிய துயரக் காட்சியாய் நின்றது. எதனை இனிது பேண வேண்டுமோ அதனை இகந்து விட்டு அவமே யிழிந்து ஈனமாயுழல்வது ஞான சூனியமாய் நேர்ந்தது.

தன்னுடைய செயல்களில் தீமைபடியாமல் பாதுகாத்து வருகிறவனே உயர்நிலையை அடைகிறான். ஊன் உண்பதில் தீமை படிந்து வருதலால் அந்த உயிர் துயர நிலைகளுக்கே தொடர்ந்து செல்கிறது. தான் செய்த வினைப்பயனை எப்படியும் அனுபவித்தே தீரவேண்டும். கரும தருமங்கள் அதிசய மருமங்களாய் மருவி விதி முறைகளில் விரவியிருக்கின்றன.

கொன்றன. அனைத்தும் அனைத்தும் நினைக்கொன்றன;
தின்றன. அனைத்தும் அனைத்தும் நினைத்தின்றன:

என்றபடி வினைப்பயன் விளைந்து வருதலால் புலைப்புசிப்பின் விளைவை உணர்ந்து கொள்ளலாம். வினையின் விளைவுகளை துணுகி அறியாத மடமையினால் மனிதன் அவலக் கேடுகளைச் செய்து கொள்ளுகிறான். தீய செயலால் நோயுழந்து தவிக்கிறான்.

தொட்ட பழக்கம் கெட்டதாயினும் அதனை விட்டுவிட முடியாமல் தட்டழிகிறான். தன்னுடைய செயல்கள் எல்லாம் நல்லவை என்று சாதிக்கின்றான். சார்ந்த சார்புகளில் ஆர்ந்த ஆர்வங்கள் யாண்டும் சூழ்ந்து கொள்ளுகின்றன.

ஊனுக்கு ஊன் என்பது ஆதிகாலத்துப் பழமொழியாதலால் இந்த மாமிச தேகத்துக்கு மாமிசம் உண்பதே தகுந்ததாம் என ஓர் அசைவன் ஒரு நாள் வாதாடினான். அதனைக் கேட்ட அறிஞர் ஒருவர் அதற்குத் தக்க பதிலை உரைத்தார். ’ஊன் உடலுக்கு ஊனே உரிமை என்றது ஈனமாம். உன் வயிற்றில் மலம் இருத்தலால் அதற்குத் தக்கபடி நீ மலத்தையே புசிக்க வேண்டும்; அவ்வாறு புசியாமல் வெவ்வேறு உணவுகளை உண்டு வருகிறாய்; அது பெரிய விபரீதமாம்; இனிமேலாவது அதனை உண்டு உன் கடமையைச் செய்!” என்றார். அவனது மடமையை இகழ்ந்து கூறிய இவ்விநய மொழிகளைக் கேட்டு அவன் மாறு வேறு கூற முடியாமல் மறுகிப் போனான்.

நேரிசை வெண்பா

ஊனுக்(கு)ஊன் உண்ண உரியதெனின் உன்வயிற்றில்
ஈனமலம் உள்ள இயல்பினால் - ஈனமலம்
தின்னாமல் வேறு சிறந்த உணவருந்தல்
அன்னோ அவலம் அறி.

முன்னே நிகழ்ந்த நிகழ்ச்சியை இது விளக்கியுள்ளது.

மதுவும் மாமிசமும் இழிந்த எண்ணங்களை வளர்த்து மனிதனை ஈனப்படுத்துமாதலால் அவற்றை உண்ணலாகாதென முன்னோர் ஒதுக்கியுள்ளனர். பெறுதற்கரிய பிறவியைப் பெற்ற மனிதன் உறுதற்குரிய உயர்ந்த கதியை அடைந்து கொள்ள வேண்டும் ஆதலால் உணவு முதலிய நிலைகளில் ஊனங்கள் சேராமல் ஞானங்களைப் பேணி வரவேண்டியவனாகின்றான்.

மனம் போனபடி எதையும் உண்டு பொறிவெறிகள் மீறிப் புலன்களில் இழிந்துபடின் அவன் உயர்ந்த நிலைகளை அடைய முடியாது. அருந்தலிலும் பொருந்தலிலும் திருந்திய சீர்மையுள்ளவரே பெருந்தகையாளராய் உயர்ந்து விளங்குகிறார், ஒருவனுடைய உயர்வு அவனது ஒழுக்கத்தில் ஒளி பெற்றுள்ளது. இழிந்த நிலைகளை ஒதுக்கி உயர்ந்த நலன்களைத் தழுவி ஒழுகுபவரே தெளிந்த மேலோராய்த் திகழ்ந்து மிளிர்கின்றார்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258 புலால் மறுத்தல்

குற்றம் நீங்கிய உயர்ந்த அறிவினையுடையார் ஊனை உண்ணார் என வள்ளுவர் இவ்வாறு உறுதி கூறியுள்ளார். உண்மையைக் கண்டு தெளிந்த மேலான ஞானிகளைக் காட்சியார் என்றது. எதைக் கண்டால் எல்லாம் கண்டதாமோ அதைக் கண்டவரே காட்சியார் என்னும் மாட்சியை உரிமையாக மருவியவராவர்.

அத்தகைய சிறந்த காட்சிக்கு அடையாளம் இழிந்த ஊனை உண்ணாமையேயாம் என ஈண்டு உணர்த்தியுள்ள நுட்பம் ஊன்றி உணரத் தக்கது. தூய உணவு தூயவர்க்கு ஆயது.

’உயிர் பிரிந்த ஊன்‘ என்றது செத்த பிணம் என அதன் இழிநிலையை உய்த்துணர வந்தது. புனித உணவாளர்க்கே புண்ணிய உணர்வு பொலிந்து வருமாதலால் ஈன ஊனை அவர் யாண்டும் தீண்டார்; இனிய தூய உணவையே வேண்டி வருவர்.

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே. 2 ஐந்தாம் தந்திரம் - 6, கிரியை, திருமூலர் திருமந்திரம், பத்தாம் திருமுறை

நீச ஊனினை நீக்கினவரே ஈசனைச் சேரலாம் என இது உணர்த்தியுள்ளது. சிவனை அடைய வேண்டுமானால் சீவன் பரிபூரண சைவன் ஆகவேண்டும் என்னும் உண்மை ஈண்டு உய்த்துணர வந்தது. உறுதி நலனைக் கருதி உய்தி பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Nov-20, 7:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 74

மேலே