வஞ்சம் புரிகின்றீர் எமன்கனன்று கண்டறுத்தல் காணீர் கதி - தீமை, தருமதீபிகை 687

நேரிசை வெண்பா

வஞ்சம் புரிகின்றீர்! வாதுமிகச் செய்கின்றீர்;
நஞ்செனவே நின்று நலிகின்றீர் - நெஞ்சிலருள்
கொண்டெவர்க்கும் இன்பம் குறியீர்! எமன்கனன்று
கண்டறுத்தல் காணீர் கதி. 687

- தீமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நெஞ்சில் அருளின்றி வஞ்சனைகளைச் செய்து வாயில் தீயவாதங்களைப் பேசி யாவரும் அஞ்ச நஞ்சம்போல் நலிவு செய்து வருகின்றீர்! எமன் வெகுண்டு உம்மைக் கொன்று கொண்டு போய்க் கொடிய நரகதுயரத்தில் அழுத்தி வருத்துவதை ஒருசிறிதும் நீர் கருதி உணரவில்லையே என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனமே மனிதனை இயக்கி வருகிறது. அகம் என்று அதற்கு ஒரு பெயர். புறம் வெளியே விளங்கித் தோன்றுகிறது; அகம் உள்ளே மறைந்திருக்கிறது. உள்ளேயுள்ள உள்ளத்தின்படியே உயிர் உருவாய் நிலவி வருதலால் உலகக்காட்சிகள் பெருகி வருகின்றன. புறத்தை அறம்ஆக்கிப் புகழ் இன்பங்களைத் தரவும், அதனை மறம் ஆக்கிப் பழி துயரங்களை விளைக்கவும் அகம் வல்லதாயிருத்தலால் அதன் அதிசய நிலையை அறிந்து கொள்ளலாம்.

தனிமையாக நோக்கும் போது மனிதன் இயல்பாக நல்லவன். அயலே சூழ்ந்துள்ள சூழல்களின் படியே பெரும்பாலும் அவன் உருவாகி வருகின்றான்; பண்பாடில்லாத கொடியவர்கள் கூட்டுறவால் கொடியவன் ஆகின்றான், நல்லவர்கள் தொடர்பினால் நல்லவனாய் மிளிர்கின்றான்.

தீவினையாளர்கள் யாண்டும் மிகுதியாயுள்ளமையால் அவரது சேர்க்கை, நோக்கு யாவும் தீயவனாதற்கு ஏதுவாய் வருகின்றன. தோய்ந்தபடியே தொடர்பு வாய்ந்து விடுகிறது.

கொலை, களவு முதலிய இழிதொழில்களைச் செய்தவர்களே பெரும்பாலும் சிறைச்சாலையில் நிறைந்திருக்கின்றனர்; அது போல் தீயவினைகளைச் செய்தவர்களே பிறவி ஆகிய சிறைச்சாலையில் பெருகியுள்ளனர். பழகிய வாசனைகள் வழிவழியே தொடர்ந்து வருதலால் இழிநிலைகளை நாணாமல் அவர் களிமிகுந்து உழலுகின்றனர்.

இந்த வெவ்விய கூட்டங்களின் தொடர்புகள் எவ்வழியும் இடர்களுக்கே ஏதுவாகின்றன. ஆகவே பாபகாரியங்கள் படிந்து வர நேர்கின்றன. அவ்வரவால் அவலங்கள் அடர்கின்றன.

பொய் பேசுவது எவ்வளவு இழிவு! எத்துணைத் தீமை! அதனை யாதும் கூசாமல் யாவரும் பேசுகின்றனர்; எத்தனை இடர்கள் நேர்ந்தாலும் சத்தியத்தைப் பேணி உத்தம நிலையில் உயர்ந்து நின்ற அரிச்சந்திரனது சரிதையைக் கேட்டு எல்லாரும் உள்ளம் வியந்து உவந்து புகழ்ந்து வருகின்றார்,

உள்ளத்தால் பொய்யா(து) ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன். 294 வாய்மை

என்ற பொய்யாமொழிக்கு மெய்யான சான்றாய் மேவியுள்ள இந்த ஐயனை வையம் முழுவதும் வாழ்த்தி வருகின்றது; வரினும் பொய்யை விடாமல் மனிதர் பேசி வருகின்றனர்.

மெய் தெய்வீகமானது; கடவுளுக்கு மெய்யன் என்று ஒரு பெயர். ஆகவே பொய் பேசுகின்றவன் தெய்வ விரோதியாய் வெய்ய பாவத்தை அடைகின்றான். ஒரு பொய்யால் பல பிழைகள் விளைகின்றன; பழி துயரங்கள் வருகின்றன.

He that does one fault at first,
And lies to hide it, makes it two. - watts

"ஒரு குற்றத்தைச் செய்தவன் அதை மறைக்கப் பொய் சொல்கிறான், சொல்லவே இரண்டு பிழைகளைச் செய்தவனாகிறான்’ என வாட்ஸ் என்னும் ஆங்கில அறிஞர் இவ்வாறு கூறியிருக்கிறார். பொய் புகப் புலைகள் புகுகின்றன.

பொய் தீயதாதலால் அதனைத் தோயாதவர் தூயர் ஆகின்றார்,

கலி விருத்தம்
(மா கூவிளம் மா கூவிளம்)

வாய்மை என்னுமீ(து) அன்றி, வையகம்,
தூய்மை என்றுமொன்(று) உண்மை சொல்லுமோ?
தீமை தானதில் தீர்தல் அன்றியே,
ஆய்மெய் யாகவே(று) அறையல் ஆவதே? 116

- திருவடி சூட்டு படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்

வாய்மையே தூய்மை, அதனை நீங்குவது தீமையேயாம் என இராமன் இன்னவாறு பரதனை நோக்கி அருளியுள்ளான். இதனால் பொய்யின் புலைநிலை நன்கு புலனாம்.

நேரிசை வெண்பா

நீசனோ நீசன் நினையுங்கால் சொல்தவறும்
நீசனே நீசன் அவனையே - நீசப்
புலையனாம் என்றுரைக்கும் புல்லியனே மேலாம்
புலையனாம் என்றே புகல். 24 நீதி வெண்பா

பொய் பேசுபவன் புலைநீசன் என இது குறித்திருக்கிறது.

செம்மை நெறிதழுவிச் சீர்மையுடன் வாழ்ந்துவரின்
இம்மை மறுமை இனிது.

வஞ்சனை, பொய் முதலிய தீமைகளோடு பழகாமல் ஒருவன் தூய்மையாய் ஒழுகிவரின் அரிய பல மேன்மைகள் அவனுக்கு உரிமைகளாய் வருகின்றன. உறுதி நலனைக் கருதி உயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Nov-20, 6:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

சிறந்த கட்டுரைகள்

மேலே