பொலிவுடைய மானுடனாய் வந்தும் ஊனுண்ணல் ஈனமே - புலை, தருமதீபிகை 697

நேரிசை வெண்பா

புலிகடுவாய் செந்நாய் புலையூன் அருந்தி
வலிகடுங் காட்டுள் வசிக்கும் - பொலிவுடைய
மானுடனாய் வந்தும்,நீ மாறாகி ஊனுண்ணல்
ஈனமே அந்தோ இளிவு. 697

- புலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

புலி கடுவாய், செந்நாய், ஓநாய் முதலிய கொடிய காட்டு மிருகங்களே ஊனைத் தின்று வாழும் இயல்பின; இனிய மனிதர் அதனையுண்பது அந்தோ கொடிய ஈனம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இழிந்த பிறவிகள் பலவும் கடந்து மனிதன் மிகவும் உயர்ந்து வந்திருக்கிறான். அரிதாக அமைந்த இந்தப் பிறவி துயரங்கள் யாவும் நீங்கி உயர்கதியை அடையவே நேர்ந்துள்ளது. விதி விலக்குகளை அறிந்து மதிநலத்தோடு எவ்வழியும் செவ்வையாக அவன் ஒழுகிவரும் உரிமையைத் தழுவி வந்துளான். அல்லல் யாதும் படியாமல் நல்லதை நாடிச் செய்பவனே நலம் பல பெறுகிறான்,

’பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்’ (ஒளவையார்) என்றது மனித சமுதாயத்துக்கு ஒரு நல்ல போதனையாய் வந்துளது. கொல்லா விரதத்தில் எல்லா நலமும் இசைந்திருக்கிறது.

இவ்வாறு அல்லது கடிந்து நல்லது செய்யவந்த மனிதன் பொல்லாத புலாலை உண்பது போதம் இழந்த ஏதமாய் நின்றது. மதிகேடான பழக்கம் எப்படியோ புகுந்து ஈனப்படுத்தியிருக்கிறது. மடமையில் மருவியது கொடுமையாய்த் தொடர்ந்துளது.

உண்ணும் உணவை மனிதன் உணர்வோடு சுவை செய்து உண்கிறான்; மிருகங்கள் அவ்வாறு உண்ணமுடியா; கண்டவற்றைத் தின்று அவை காலம் கழிக்கின்றன. உயர்ந்த அறிவுடைய மனிதன் இழிந்த விலங்குகள் போல் ஈன ஊனைத் தின்பது எவ்வழியும் இழுக்கேயாம்.

நேரிசை வெண்பா

நாய்கழுகு கூகை நரி,காகம் ஈஎறும்பு
பேயிவைகள் ஆவி பிரிந்தவூன் - நேயமொடு
தானருந்தல் அல்லாது சற்கா ரியமனிதர்
தானருந்தல் ஆவதோ தான். - புலால் மறுத்தல்

விதி நியமங்களை உணர்ந்து ஒழுகவுரிய மனிதன் ஊனை அருந்துவது ஈனமாம் என இது உணர்த்தியுள்ளது. இழிபிராணிகள் தின்பதை உயர்மனிதன் உண்ண நேர்ந்தது துயரப் பழியாய்த் தொடர்ந்து வந்தது. பாவத் தீமையான புலாலை உண்பதால் மேலான கதிநிலைகளை அவன் இழந்து விடுகின்றான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

தவகதியை வேண்டுபவர் உயிரில்சடம் தினல்தவிர்க
..தவம ழித்தாங்(கு)
அவகதியை வேண்டுபவர் கழுகுகரி செயும்தொழிலை
..அயரா நாட;
சிவகதியும் திருமால்தன் திகழ்கதியும் அயன்கதியும்
..தெய்வ லோகத்
துவகதியும் இகந்தெரியும் துர்க்கதியின் வீழ்வர்பரஞ்
..சோதி ஆணை.

ஊன் உண்பதால் மனிதன் உயர்கதிகளை இழந்து துயரமான நரக வேதனைகளில் விழுகிறான் என இது குறித்துள்ளது. குறிப்புகள் யாவும் புலைப்புசிப்பின் தீமைகளை விளக்கி நிற்கின்றன. வழுவான இழிவுகளை நீங்கி விழுமியனாய் மேலான நிலைகளில் மேலும் செல்லவுரிய மனிதன் கீழான ஈன ஊன் தின்று இழிந்து உழலுவது வருந்தி இரங்கத் தக்கதே.

’மானுடனாய் வந்தும் என்றது’ அவனது ஞான நிலையை உணர்ந்து கொள்ள வந்தது. எதையும் கருதியுணர்ந்து உறுதி நலங்களை அடையவுரிய உயர்பிறவியாதலால் மனித சன்மம் மகிமை மிக வாய்ந்தது. அரிய நிலையில் அடைந்தயிதனால் உரிய பயனை அடைந்தவனே உய்தி பெற்றவனாகிறான். பெறாதவன் பிழையாளனாயிழிந்து பெருந்துயரங்களை உறுகின்றான்.

தரவு கொச்சகக் கலிப்பா

பெறலரிய பேறாகப் பெற்றவுடம்(பு) இதுகொண்டே
உறலரிய உயர்நிலையை உறவேண்டும் உறாமலே
இறலரிய புலைநிலையில் ஈனமாய் இழிந்துநின்று
மறமலிய உழலுவது மதிகேட்டின் அதிகேடே.

மதிமானாய் வந்த மனிதன் விதிமுறைகளை உணர்ந்து தெளிந்து மேலான கதிநலங்களை அடையவில்லை யானால் அவன் தோற்றம் பழுதுபட்டுப் பாழாய் முடிகின்றது. தன்னைப் பாழ்படுத்தாமல் வாழ்பவன் தலைமையாய் உயர்ந்து வருகிறான்.

ஊன் உணவு தீமையாய் வருதலால் அதனை உண்பவர் உயர்நிலையை எய்த முடியாமல் இழிவுறுகின்றனர். பாவ அழுக்குப் படியாமல் பாதுகாத்து வருகிறவரே திவ்விய கதியை எய்துகின்றனர். புனிதம் வளரப் புண்ணியம் வளர்கிறது.

துறவி நிலையை மருவி விரத சீலராயிருப்பவரே உயர்கதியை அடைய உரியவராகின்றார். புலாலை எவ்வழியும் வெவ்விய புலையாகவே கருதி அவர் யாண்டும் நிலையாய் விலகுகின்றனர். மறதியால் மருவினும் அது அவர்க்குக் கொடிய கேடாம்.

நேரிசை வெண்பா

விடலரிய துப்புடைய வேட்கையை நீக்கிப்
படர்வரிய நன்னெறிக்கண் நின்றார் - இடருடைத்தாய்ப்
பெற்ற விடக்கு நுகர்தல் கடனீந்திக்
கற்றடியுள் ஆழ்ந்து விடல். 26 பழமொழி நானூறு

ஒருவர் ஐம்புல ஆசைகளையும் வென்று அரிய தவநிலையில் இருந்தார்; இடையே உடலில் சிறிது நோய் தோன்றியது; அந்தப் பிணியை நீக்குவதற்குக் கோழி ரசம் பருகவேண்டும் என்று மருத்துவர் குறித்தார்; அவரது உரையை மறுத்து விரத நிலையிலேயே அவர் வீறுற்று நின்றார். அந்நிலையைக் குறித்து வந்த பாடல் இது. கடலை நீந்திக் கரை ஏற நேர்ந்தவர் ஒரு பசுவின் கன்றின் கால்டியில் தங்கிய நீரைத் தாண்டாமல் ஆழ்ந்தது போல் உடல் நோய்க்கு விடக்கு உண்டு உயிரைப் பாழாக்கலாகாது என்பது இதன் குறிப்பாம். பிணிக்கு மருந்து என்ற நிலையிலும் கூட விடக்கைத் தீண்டலாகாது; புனித உணவையே மனிதன் உண்டுவர வேண்டும். உண்மையைக் கண்டு தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Nov-20, 6:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

சிறந்த கட்டுரைகள்

மேலே