உண்டநஞ்சு கொல்லுமுன்மீன் வெள்ளம் குளிக்கும் விதம் - தீமை, தருமதீபிகை 688

நேரிசை வெண்பா

தீய வினைஎன்னும் தீயை மடியின்கண்
நேயமாய் வைத்து நெடிதோங்கி - நோயைவிளைத்(து)
உள்ளம் களிக்கின்றார் உண்டநஞ்சு கொல்லுமுன்மீன்
வெள்ளம் குளிக்கும் விதம். 688

- தீமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தீயவினை என்னும் தீயை மடியில் வைத்து நோயை விளைத்துக் கொண்டு தீவினையாளர் அவமே அழிகின்றார், உண்ட நஞ்சு கொல்லும் முன் உள்ளம் களித்து வெள்ளம் குளிக்கும் மீன் போல் அவர் அழிவு நிலையில் களிமிகுத்து வருகிறார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நல்ல எண்ணங்களை எண்ணுகின்றவன் அமுதத்தை உண்ணுகின்றவன் போல் எவ்வழியும் இன்பங்களையே எய்துகின்றான், தீய நினைவுகள் கொடிய துயரங்களாய் மனிதனைப் பீடித்து யாண்டும் அல்லலுறுத்தி வருதலால் அவை கொடிய நஞ்சு, நெடிய தீ என அஞ்ச நேர்ந்தன.

வறுமை, பிணி முதலிய துன்பங்கள் எல்லாம் தீவினைகளாலேயே விளைந்து வருகின்றன; ஒரு பிறவியில் செய்தன மறுபிறவிகளிலும் மருவி வெய்ய துயரங்களை விளைத்து வருதலால் தீவினை எவ்வளவு கொடியது என்பதை எளிதே தெளிந்து கொள்ளலாம்.

தன் உயிர்க்கு இதத்தை நாடுகின்றவன் தீமையை எவ்வழியும் யாதும் செய்யலாகாது; இந்த விதிமுறையைப் பழகி வருபவன் அதிசயமான இன்ப நலங்களை அடைந்து கொள்ளுகிறான்.

எரிகின்ற விளக்கில் கையை வைத்துச் சிறுகுழந்தைகள் துடித்து அழுவது போல் அறியாமையால் தீவினைகளைத் தழுவி மனிதர் பரிதாபமாய்ப் படுதுயரடைகின்றனர்.

வெய்ய துயரங்கள் எல்லாம் தான் செய்த தீமைகளாலேயே வருகின்றன என்னும் உண்மையை ஒரு சிறிது உணர்ந்தாலும் எவனும் உய்திபெற நேர்வான். மடமை மருள்களால் கொடுமைகளைச் செய்து கொண்டு கடுமையான தண்டனைகளைச் சீவகோடிகள் அனுபவித்து வருகின்றன. மதிகேடான இந்த மாய மயக்கங்களில் உழன்று சீவர்கள் பாவகாரிகளாய் இழிந்து வருதலை நினைந்து நினைந்து மகான்கள் பரிந்து இரங்கி, ஆனவரையும் ஞான போதனைகளை அவர் செய்து வரினும் மனிதர் ஈனமாகவே இழிந்து போகின்றனர். ஆயினும் விடாமல் தூயவர் போதித்தருளுகின்றார்.

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால். 209 தீவினையச்சம்

தனக்கு இன்னல் இழிவுகள் நேராமல் இருக்க விரும்புகின்றவன் பிறவுயிர்கட்கு யாதொரு தீமையும் செய்யலாகாது என வள்ளுவர் இவ்வாறு உண்மையை உரிமையோடு உணர்த்தியிருக்கிறார், உயிர் துயரின்றி உயரும் வழி விழி தெரிய வந்தது.

நெஞ்சில் தவறான எண்ணங்கள் சிறிது தோன்றினாலும் பெரிய துன்பங்களை அவை விளைத்து விடுகின்றன. தன் உள்ளத்தையும் உரையையும் நல்ல நெறிகளில் பழக்கி வருபவன் எல்லா வகைகளிலும் இன்பநலங்களைக் காணுகின்றான்; பொல்லாத பழக்கங்களுடையவன் யாண்டும் அல்லல் அவலங்களையே அடைய நேர்கின்றான்.

The thought of foolishness is sin: and the scorner is an abomination to men. - Bible

'மதிகேடான தீய எண்ணங்கள் பாவம் ஆகின்றது; பழிமொழி கூறுவோன் எல்லாராலும் அருவருத்து வெறுக்கப்படுகிறான்’ எனச் சாலமன் என்னும் நீதிமான் இங்ஙனம் கூறியிருக்கிறார். எண்ணமும் சொல்லும் இனிமையுறின் இன்பமாம்.

இழிவான நினைவுகள் மனிதனை இழிந்தவனாக்கி விடுகின்றன; அந்த உண்மையை உணர்ந்து கொள்ளாமையால் புன்மையில் களித்து அவன் புலையாடித் திரிகின்றான்.

’உண்ட நஞ்சு கொல்லும்’ என்றது தான் கொண்ட தீமை எப்படியும் தன்னைக் கொன்றே விடும் என்பதைக் கூர்ந்து ஓர்ந்து கொள்ள வந்தது. பழி வினைகளைத் தழுவிக் கொண்டு அழிதுயரங்களுக்கே ஆளாகி வருவது அறிவீனமாய் வளர்ந்து வருகிறது.

வயது முதிர்ந்தும் நல்ல வழிகளைப் பழகிக் கொள்ளாமல் அவலமாயுழலும் முதியரை நோக்கி நரிவெரூஉத்தலையார் என்னும் புவவர் ஒருநாள் மதிநலம் கூறினார். அவரது அறிவுரை பரிவு தோய்ந்து வந்துள்ளது அயலே காண்க.

நேரிசை ஆசிரியப்பா

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
5 பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே. 195 புறநானூறு

புலவருடைய உள்ளப் பரிவும் உணர்வு நலனும் இதில் ஒளி புரிந்துள்ளன. பொருள் நிலைகளைக் கருதி உணரவேண்டும். காலன் வந்து உயிரைக் கவரும் போது சாலவும் வருந்துவீர்! நன்மையைச் செய்யாது போயினும் தீமையையாவது செய்யாதிருங்கள் என்னும் உய்தியுரை உள்ளத்தை உருக்கியுள்ளது என்கிறார் கவிராஜ பண்டிதர் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Nov-20, 6:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

மேலே