இறைவன் அருளுக்கு இசைந்தபடி ஒழுகி வரின் உயர்வு - தீமை, தருமதீபிகை 689

நேரிசை வெண்பா

இறைவன் அருளுக்(கு) இசைந்த படியே
துறைதோறும் நீதி தொடர்ந்து - முறையே
ஒழுகி வரினோ உயர்வாம்; ஒருவி
வழுவின் இழிவே வரும். 689

- தீமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இறைவனுடைய அருளுக்கு இசைந்தபடியே வாழ்க்கையிலுள்ள எல்லா வழிகளிலும் நல்ல நீதிமுறைகள் தழுவி ஒழுகி வருக; அவ்வாறு வரின் உயர்நலங்கள் பல உன்னிடம் விளைந்து வரும்; வழுவினால் இழிவுகள் பல நுழைந்து விடும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உயிரினங்களுள் மனிதன் உயர்ந்தவன்; ஆயினும் குண நீர்மைகளை மருவியுள்ள அளவே அவன் பெரியவனாய் மிளிர்கின்றான். பெருமையும் சிறுமையும் தன் நடையால் வருகின்றன; இடையே எவரும் தருவன அல்ல.

தனது செயல் இயல்புகள் புனிதமாய் உயர்நலமுடையனவாயின் அந்த மனிதன் உயர்ந்து சிறந்த மேன்மைகளை அடைகின்றான். அவை மலினமாய் இழிந்துபடின் அவன் தாழ்ந்து தளர்ந்து அவலமுறுகின்றான்.

மேன்மையும் இன்பமும் நல்ல நினைவுகளின் விளைவுகளே;
கீழ்மையும் துன்பமும் தீய நினைவுகளின் பலன்களே.

இனிய எண்ணங்களையுடையவர் இன்ப நிலையங்களாய் விளங்குகின்றனர்; கொடிய நினைவுகளை உடையவர் துன்பங்களில் அழுந்தித் துடித்து உழலுகின்றனர். தமக்குத் தாமே அல்லல்களை விளைத்துக் கொண்டு அவலமடைந்து வருவது கொடிய மடமையாயுள்ளது. மூடம் ஏறப் பீடைகள் ஏறுகின்றன.

தன்னைப் புண்ணியவானாய் உயர்த்தி இன்பங்களை அடையவும், பாவியாய்த் தாழ்த்தித் துன்பங்களை நுகரவும் மனிதன் வல்லவனாயிருத்தலால் அவனது நிலைமை தலைமைகளை நன்கு உணர்ந்து கொள்ளலாம். இனிமையே தனி மகிமைக்குக் காரணமாகிறது.

பிற உயிர்களுக்கு இனிய இதநலங்களைச் செய்து வருபவன் தன் உயிர்க்கே எல்லா நன்மைகளையும் செய்தவனாகின்றான். அல்லல்களைச் செய்பவன் தனக்கே அவலங்களை விளைத்துக் கொள்ளுகிறான்.

தன் எண்ணம் நல்லதாக மனிதன் நல்லவன் ஆகின்றான்; அது தீயதாக அவன் தீயவனாகின்றான்; ஆகவே மேன்மைக்கும் கீழ்மைக்கும், சுகத்திற்கும் துக்கத்திற்கும் தானே மூலகாரணமாயிருத்தலைக் காலக்கழிவில் அவன் உணர்ந்து கொள்ள நேர்கின்றான். உயர்வும் தாழ்வும் அவனிடமே உள்ளன.

இன்னிசை வெண்பா

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான். 248 அறிவுடைமை, நாலடியார்

இந்தப் பாசுரம் இங்கே கூர்ந்து சிந்திக்கவுரியது.

மனிதனுடைய தத்துவங்களை இது உய்த்துணரச் செய்துள்ளது. அயலேயிருந்து யாதும் வராது; நினைவு செயல்கள் என்னும் தனது வினைகளினாலேயே யாவும் விளைந்து வருகின்றன; இவ்வுண்மையை உணர்ந்து கொண்டஅளவு மனிதன் உயர்ந்து கொள்கிறான். தன் நிலைகளுக்குத் தானே காரணனாயுள்ளான்.

இன்னிசை வெண்பா

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி. 151 அறநெறிச்சாரம்

தனக்கு உயர்வு தாழ்வுகளை உளவாக்குபவர் தன்னைத் தவிர வேறு யாரும் இலர் என உணர்த்தியிருக்கும் இது ஊன்றி உணரத்தக்கது. நல்வினை செய்பவன் தன் உயிர்க்கு இன்பத்தைச் செய்யும் நண்பன் ஆகின்றான்; தீவினையாளன் துன்பத்தை விளைத்தலால் தன் உயிர்க்கு அவன் கொடிய பகைவனாய் முடிகின்றான்.

ஆன்மாவை ஆன்மாவினால் உயர்த்துக; அதனைக் கீழே தள்ளி விடாதே, ஆன்மாவே ஆன்மாவுக்கு நண்பன், அதுவே தனக்குப் பகைவன்' எனக் கண்ணன் விசயனுக்குப் போதித்துள்ளான். போதனை ஆழ்ந்த சிந்தனையுடையது.

பொறிகளை அடக்கி நெறியே ஒழுகுபவன் தனக்கு இனிய உறவாய் அரிய மேன்மைகளை விளைத்துக் கொள்கிறான்; அல்லாதவன் தனக்கே கொடிய சத்துருவாய் அல்லல்களை ஆக்கிக் கொள்கின்றான் என்னும் உண்மையை இது இவ்வாறு உணர்த்தியுள்ளது. ஆன்ம நிலை உயர அதிசய மேன்மை வருகிறது.

கலி விருத்தம்

தானலது யாவர் தன்மேன்மை செய்தக்கார்?
தானலது யாவர் தன்கீழ்மை சமைப்பரா?
தானலது யாவர் தன்மெய்ப்ப கைஆவார்?
தானலது யாவர் தனக்குற(வு) ஆவார்? – பகவற் கீதை

நெறிதவறிக் கீழாயிழிந்து போகாமல் உயர்ந்து செல்பவனே உத்தம மகானாய் ஒளி பெற்று நிற்கின்றான்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

பெறலரும் பிறவியைப் பெற்று வந்துளாய்
உறலுறும் உய்தியை உறாது நிற்றியேல்
இறலுறும் இழிவுகள் எய்தும் ஆதலால்
திறலுடன் உயர்நிலை தேர்ந்து கொள்கவே.

’நீதிமுறை ஒழுகிவரின் உயர்வாம்: வழுவின் இழிவே’ இதனை விழியூன்றி நோக்கித் தெளிவோடு சிந்திக்க வேண்டும். இனிய வழிகளையே பழகி விழுமிய மேன்மைகளை அடைந்து கொள்வதே மனித சன்மத்தின் மாண்பயன் ஆகும். அரிய பிறவிக்கு உரிய பயனை உரிமையோடு மருவிக் கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-20, 10:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 152

சிறந்த கட்டுரைகள்

மேலே