யார்வாழ்வார் நாவிதனை யுண்டபின் நாடு - தீமை, தருமதீபிகை 690

நேரிசை வெண்பா

தான்செய்த நல்வினையால் தார்வேந்தாய்ச் சூரபன்பன்
வான்செய் புகழோடு வாழ்ந்துவந்தான்; - ஊன்செய்த
தீவினையால் பாவியெனத் தீர்ந்தழிந்தான்; யார்வாழ்வார்
நாவிதனை யுண்டபின் நாடு. 690

- தீமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தான் பண்ணிய புண்ணிய கருமத்தால் பெரிய சக்கரவர்த்தியாய்த் தேவரும் தொழுது ஏவல் புரியச் சூரபன்மன் சிறந்து வாழ்ந்து வந்தான்; பின்பு செய்த.தீவினையால் அடியோடு இழிந்து அழிந்து போனான்; நஞ்சை உண்டவர் துயரமாய் மாள்வரேயன்றி இனியராய் உயிர்வாழ முடியாது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதன் செய்கிற இனிய கருமம் தருமமாய் வருகிறது. இன்னாதது பாவமாய் விரிகிறது. முன்னது இன்ப நலங்களை அருளுகிறது; பின்னது துன்பங்களைக் கொடுக்கிறது.

அரசர், தேவர் என வரிசை பெற்று உயர்ந்துள்ளவர் எல்லாரும் தரும நீர்மையினாலேயே பெருமை அடைந்திருக்கின்றனர். ஒரு சிறு புண்ணியத்தால் அரிய பல மேன்மைகள் உளவாமாதலால் அதன் அதிசய மகிமையை மேலோர் வியந்து துதி செய்துள்ளனர்.

கலிவிருத்தம்
விளம் விளம் மா விளம்

புண்ணியம் அணுவினால் புகழும் இன்பமும்
எண்ணிய மலையென எய்தும் ஆதலால்
விண்ணியல் அமரரும் விரத சீலரும்
நண்ணிய அதனையே நாடி நின்றனர்.

இதனால் புண்ணியத்தின் மகிமை புலனாம்.

கடவுளுக்குப் புண்ணியன் என்று ஒரு பெயர் அமைந்திருத்தலால் அது எவ்வளவு மேன்மையுடையது என்பதை எளிதே தெளிந்து கொள்ளலாம்.

நேரிசை வெண்பா
.
என்பணிந்த தென்கமலை யீசனார் பூங்கோயில்
முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் - அன்பென்னாம்
புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்
மண்சுமந்தார் என்றுருகு வர். 14 திருவாரூர் நான்மணிமாலை

ஈசனைத் தெரிசனை செய்யத் தேவர்கள் திரண்டு நெருங்கினர்; அப்பொழுது அங்கே வாயில் காவலராய் நின்ற நந்திதேவர் பிரம்பால் அடித்துக் கூட்டத்தை ஒழுங்கு செய்து விடுத்தார். அடிபட்ட அமர முனிவர் தமக்கு நேர்ந்ததை நினைந்து வருந்தவில்லை; மதுரையில் பிட்டுக்கு மண்சுமந்த போது எம்பெருமானைப் பாண்டியன் பிரம்பால் அடித்தானே! அந்த அடி பரமனை எப்படி நோகச் செய்ததோ? என அதனை எண்ணி அவர் உருகினார் என இது உணர்த்தியுளது. இதில் புண்ணியனார் என்று சிவபெருமானைக் குறித்திருத்தல் கூர்ந்து சிந்திக்கவுரியது.

விண்ணுலக வாழ்வையும், மேலான தெய்வ நிலையையும், முத்தி இன்பத்தையும் புண்ணியத்தால் அடையலாம் என்பதை இதனால் எண்ணியுணர்ந்து கொள்கிறோம்.

தான் செய்கின்ற நல்வினை ஆகிய புண்ணியம் எண்ணரிய பெருமைகளை மனிதனுக்கு விளைத்து வருகிறது. தேவர் முதல் யாவரும் அதனாலேயே அதிசய மேன்மைகளை அடைந்து கொள்கின்றனர்.

Well may your hearts believe the truths I tell;
'T is virtue makes the bliss, where'er we dwell. - William Collins

’நான் சொல்லுகிற உண்மைகளை உங்கள் இதயம் நன்கு நம்பலாம்; நாம் எங்கே வசித்தாலும் புண்ணியமே நமக்குப் பேரின்பத்தை அருளுகிறது’ என வில்லியம் காலின்ஸ் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்ஙனம் பாடியிருக்கிறார்.

Virtue, though in rags will keep me warm. - Dryden

"எப்படி மங்கியிருந்தாலும் தருமமே என்னை இதமாய்க் காத்து வருகிறது” என டிரைடன் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார். அரிய இன்பங்கள் யாவும் அறத்தால் வருகின்றன.

Virtue only makes our bliss below. - Pope

'தருமமே நமக்கு இங்கே பேரின்பம் தருகிறது' என போப் என்பவர் இப்படிக் குறித்துள்ளார்.

Virtue alone is happiness below. - Epistle

'தருமம் ஒன்றே ஈண்டு இன்பமாயுளது' என்னும் இது இங்கே அறியவுரியது. மனித இனத்தை மகிமைப்படுத்தி வருதலால் தருமத்தை எந்த நாடும் அருமையாய்ப் போற்றி வருகிறது.

புண்ணியபூமி என்று இந்த நாடு முன்னம் புகழ் பெற்றிருந்தது.

நேரிசை வெண்பா

நீரறம் நன்று நிழல்நன்று தன்னில்லுட்
பாரறம் நன்றுபாத் துண்பானேற் – பேரறம்;
நன்று தளிசாலை நாட்டற் பெரும்போகம்
ஒன்றுமாஞ் சால உடன். 62 - சிறுபஞ்ச மூலம்

குடிக்க நீர் உதவி, இருக்க நிழல் தந்து, உண்ண உணவூட்டிப் பலவழிகளிலும் தருமங்களைச் செய்துவரின் அவை பேரின்ப போகமாய்ப் பெருகி வரும் எனக் காரியாசான் இவ்வாறு கூறியிருக்கிறார்.

இனிய தருமத்தாலும் அரிய தவத்தாலும் சூரபன்மன் பெரிய பேறுகளைப் பெற்றான். அண்டங்கள் பலவும் ஆள நேர்த்தான். முடிவில் செல்வக் களிப்பாலும் பல்வகைச் செருக்காலும் தீமை செய்ய மூண்டான். நல்லவர்களுக்கு அல்லல்களை விளைத்து வந்தமையால் புண்ணிய மூர்த்தியாகிய இறைவன் முருகனாய் அவனை அழித்து ஒழிக்க வந்தான். "தீமையைக் கைவிட்டு நன்மையைக் கடைப்பிடித்து நட; இல்லையேல் அடியோடு அழிந்து போவாய்' என்று நீதிமுறை கூறி ஒரு தூதுவனை விடுத்தார். அத்தூதுவன் வந்து ஓதியும் இத்தீதன் கேட்காமல் தீங்கிலேயே ஓங்கி நின்றான். உடன் பிறந்த தம்பி சிங்கமுகனும் உறுதி நலம் கூறினான். அவனுடைய உணர்வுரைகள் அயலே வருகின்றன.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

பேதை வானவர் தங்களைச் சிறைஇடைப் பிணித்தாய்
ஆத லால்உனக்(கு) ஆனதென் துன்பமே அல்லால்
ஏதும் ஓர்பயன் இல்லதோர் சிறுதொழில் இயற்றி
வேத னைப்படு கின்றது மேலவர் கடனோ. 102

குரவ ரைச்சிறு பாலரை மாதரைக் குறைதீர்
விரத நல்தொழில் பூண்டுளோர் தம்மைமேல் அவரை
அரும றைத்தொழி லாளரை ஒறுத்தனர் அன்றோ
நிரய முற்றவும் சென்றுசென்(று) அலமரும் நெறியோர். 103

அமரர் தம்பெரும் சிறையினை நீக்குதி ஆயின்
குமர நாயகன் ஈண்டுபோர் ஆற்றிடக் குறியான்
நமது குற்றமும் சிந்தையில் கொள்ளலன் நாளை
இமைஒ டுங்குமுன் கயிலையின் மீண்டிடும் எந்தாய். 104

சிட்டர் ஆகியே அமர்தரும் இமையவர் சிறையை
விட்டி டாதுநீ இருத்தியேன் மேவலர் புரங்கள்
சுட்ட கண்நுதல் குமரன்நம் குலம்எலாம் தொலைய
அட்டு நின்னையும் முடித்திடும் சரதமென்(று) அறைந்தான். 105

- சூரன் அமைச்சியற் படலம், மகேந்திர காண்டம், கந்தபுராணம்

தம்பி கூறிய இந்த நீதிமொழிகளையும் கேளாமல் சூரபன்மன் தீமையிலேயே நிமிர்ந்து நின்றான்; அதனால் அடியோடு அழிந்து ஒழிந்தான். அழிவுகள் பாவத்தின் விளைவுகளாயுள்ளன.

நல்வினையால் பல்வகை மேன்மைகளை அடைந்தான்; தீவினையால் அல்லலுழந்து அழிந்தானாதலால் தீமையின் விளைவாகிய அழிவுக்கு உலகம் காணும் சான்றாயவன் நிலவி நின்றான்.

தன்னைக் கொண்டவரை அல்லலுறுத்தி அழித்து ஒழிக்கும் அதன் அவலநிலை தெரிய தீமையை நாவி என்று குறித்தது.

தீமை யாண்டும் அல்லலாய் அழிவே தரும்: அதனை யாதும் தீண்டாதே; எவ்வழியும் நன்மையையே நாடி நலம்பல பெறுக.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

உள்ளம் தீமையாய் உறினவன் உயர்வெலாம் இழந்து
தள்ள ரும்பழி தாழ்வுகள் தமையடைந்(து) அழிவான்;
உள்ளம் நன்மையாய் உறினவன் உயர்கதி எய்தி
விள்ள ரும்புகழ் ஒளியுடன் மேவியின் புறுவான்.

இதனை உள்ளம் கொண்டு உய்தியுறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Nov-20, 8:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

சிறந்த கட்டுரைகள்

மேலே