புலையை ஒழித்துத் தலைமையில் சேர்ந்து நிலைமின் சிறந்து - புலை, தருமதீபிகை 700

நேரிசை வெண்பா

பழக்கம் படிந்து பழியூன் அருந்தி
வழக்கம் கொடிதாய் வருவீர் - இழுக்கமென
ஓர்ந்து புலையை ஒழித்துத் தலைமையில்
சேர்ந்து நிலைமின் சிறந்து. 700

- புலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பழகிய பழக்கத்தின் தொடர்பால் பழிநிலை தெரியாமல் புலாலை அருந்தி வழக்கமாய் வருகின்றீர்! அந்த இழுக்கத்தின் ஈனநிலையை உணர்ந்து ஊன் உணவை ஒழித்து உயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர். உயர்வுக்கு உரிய நிலையை இது உணர்த்தியுளது.

அறிவு, இச்சை, செயல்கள் மனிதனுடைய வாழ்க்கையாய் மருவி வருகின்றன. , ஒரு பொருளைப் பார்த்து, ஓர்ந்தறிந்து தனக்கு அது வேண்டும் என்று விரும்புகிறான்; பின்பு அதனை அடைய வேண்டிய தொழில்கள் நிகழ்கின்றன. அடைந்து கொண்டபடியே தொடர்ந்து நடந்து வருகின்றன. நலம் தீங்குகளை நாடி அறிந்தாலும் பழகிய பழக்கத்தின்படியே மனிதன் வழக்கமாய் ஓடி வளர்ந்து ஒழுகி வருகிறான்.

சுருதி, யுத்தி, அனுபவங்கள் நெறிமுறைகளை உறுதி செய்தற்குக் கருவிகளாய் அமைந்திருக்கின்றன. இந்த மூன்றின் சோதனைகளால் ஆன்ற போதனைகள் தோன்றி வந்துள்ளன.

புலால் உணவு இழிந்தது; தீயது என வேதம் முதலாக முன்னோர் நூல்கள் எல்லாம் இகழ்ந்து விலக்கியிருக்கின்றன. மனிதனது யுத்தியும் அதனைக் குற்றம் என்று குறித்துள்ளது. யூகமாய் ஆராய்ந்து கவனிப்பது யுத்தி என வந்தது. தனக்கு இன்பத்தை விரும்புவதே மனிதனுக்கு இயற்கையாயுள்ளது. சுகத்தைத் தான் விரும்புவது போலவே பிற உயிர்களும் தமக்கு விரும்பும் என்பதை யூகமாய் அவன் அறிந்து கொண்டு தனது வாழ்க்கை எவ்வுயிர்க்கும் இடையூறின்றி இதமாய் அமைந்து வரும்படி ஆய்ந்து கடக்க வேண்டியவனாகிறான். அருள் நலம் பேணி வருவதே அறிவுக்குப் பயனாகின்றது.

புலால் உயிர்க்கொலையால் வருவதாதலால் அதனை உண்பது பாவம் என புத்தி உணர்த்துகின்றது; அந்தப் புத்தி போதனையால் ஊன் தின்றலை ஒழித்து உயர்ந்து ஒழுகுகிறான். தான் உண்ணும் உணவால் பிற உயிர்கள் சாகும்படி நேர்கின்றனவே! எனக் தண்ணளியோடு எண்ணியுணர்ந்தால் ஊன் உண்பவர் எவராயினும் அதனை உடனே ஒழித்துவிட நேர்வர்.

நல்ல உணவு வகைகளை ஆராய்ந்து உண்ண உரிய மனிதன் பொல்லாத புலாலைத் தின்ன விழைவது புலைப்பழியாய் நின்றது. தின்று பழகிய பழக்கம் கொன்று படும் கொலைகளை ஒன்றும் உணராதபடி அவரை ஊனப்படுத்தி ஈனமாக்கியுள்ளது. மனிதன் புலால் தின்ன நேர்ந்ததால் ஆடுகளும் கோழிகளும் மாடுகளும் நாளும் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகின்றன. கொலையாளிகள் அவற்றை இவ்வாறு கொல்வது புலால் உண்பவர் பொருட்டேயாம். புலாலை இவர் உண்ணாது ஒழியின் அக்கொலைகளை அவர் பண்ணாது ஒழிவர். புலை நுகர்வால் கொலை விளைவுகள் எங்கும் பொங்கியுள்ளன.

தினற்பொருட்டால் கொல்லா(து) உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். 256 புலால் மறுத்தல்

ஊன் தின்பவராலேயே உயிர்க்கொலைகள் நிகழுகின்றன. அவர் தின்னாராயின் அவை நிகழா; புலால் புசிப்பவர்களாலேயே கொலைப் பாவங்கள் உலகில் நிறைந்து வருகின்றன என வள்ளுவர் இங்ஙனம் இரங்கியிருக்கிறார்.

புலாலைத் தின்ற பாவமும், அப்புலாலுக்காக உயிர்களைக் கொன்ற பாவமும் மனித சமுதாயத்தை மாறி மாறி வதைத்து வருகின்றன. கொலையும் புலையும் கொடிய தீவினைகளாய் நின்றன.

நேரிசை வெண்பா

கொன்றான்; கொலச்சொனான்; கூசவறுத் தான்;அட்டான்;
தின்றான்; விலக்கிடான் தின்னென்று - நின்றவனவ்
வெட்டழல்கள் இட்டெரிக்க வெந்துகொடு வெந்நரகில்
பட்டழன்று வீழ்வார் பதைத்து. – இதிகாசம்

ஊன் தின்பதால் விளையும் நரக துயரங்களை இது உணர்த்தியுளது. இவ்வாறு எவ்வழியும் வெவ்விய துன்பங்களை விளைக்கும் புலாலை மனிதன் உவந்து உண்பது ஊனப் பழியாயுளது. இயல்புக்கும் அனுபவத்திற்கும் சிறுதும் பொருந்தாததைப் பிரியமாய் அருந்தி வருவது பழகிய பாழான நசையால் நேர்ந்த வசையாம்.

ஊறுகாயில் சிறிய ஒரு புழு இருந்தாலும் உண்ணக் கூசி வெளியே எறிந்து விடுகின்றார், ஒரு முடி விழுந்திருந்தாலும் அன்னத்தை உண்ணாமல் விலக்கி விடுகின்றார். அத்தகைய மனிதர் செத்த சவமான ஊனைக் கலத்திலிட்டுப் பிசைந்து அருவறுப்பின்றி வாரி உண்கின்றார். இந்த ஈனத்தீனி எவ்வளவு இழிவுடையது! எத்துணை மையல் மயக்கத்தில் இது மருவி வந்துளது; ஆறறிவுடையவர் உணர வேண்டும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

ஊறுகா யாதி தன்னின் உதித்தவோர் புழுக்கண் டாயேல்
வேறவே வீசிச் சிந்தை மெய்மிகக் குலைந்துற் றாயால்
நாறு(ம்)ஊன் புழுத்த தேனும் நனிமிக விரும்பி உள்ளம்
தேறிநீ உண்ணு மாறென் செப்புதி தெளிவி லாதோய்! (1).

தகருனக்(கு) எதிரே சிந்தத் தான்தெறித் திட்ட கோழை
புகலுமுன் மீதில் தாக்கப் பொறாதுளம் குலைந்துற் றாயால்
பகர்தரும் அவற்றின் ஊனைப் பற்றிய மூளை யோடும்
அகமகிழ்ந்(து) அயிலு மாறென்? அறைகுதி அறிவி லாதோய்! (2)

சுசி உணர்ச்சியிருந்தும் அருவருப்பில்லாமல் ஊணையுண்பது அறிவு பாழான அவலமேயாம் என இவை விளக்கியுள்ளன. இழிந்த பழக்கக்கால் நேர்ந்த ஈனத்தொடர்பு தெளிந்த அறிவு வந்தபோதும் ஒழிந்து போகாமல் ஒட்டித் தொடர்ந்து ஊனப்படுத்தி வருகிறது. உண்டு பழகிய ஊனம் உணர்வையும் உண்டு கொடுமை மண்டிக் கடுமையாய் வரலாயது.

’ஆட்டைத் தின்று மாட்டைத் தின்று மனிதனையும் தின்ன வந்தான்' என்னும் பழமொழி ஊன் உண்டு வருபவரது கொடிய மாறுபாட்டு நிலைகளைக் கடுமையாகக் காட்டியுள்ளது.

சாதுவன் என்னும் வணிகன் பொருள் ஈட்டம் கருதி அயல் நாடுகளுக்குக் கடல் கடந்து சென்றான். இடையே கலம் உடைந்து போகவே அவன் கடலில் வீழ்ந்தான்; உடல்நிலை குலைந்து உயிர் பதைபதைத்துத் தத்தளித்து வருங்கால் அலைகள் நடுவே நெடிய கட்டை ஒன்று வந்தது; அதனைப் பிடித்துக் கொண்டு கிடந்தான்; அலைகள் அடித்துக் கொண்டு போய் ஒரு மலைச்சாரலில் சேர்த்தது; இறங்கி ஒரு மர நிழலில் அயர்ந்து படுத்தான். அயர்ச்சி மிகுதியால் தளர்ச்சியடைந்து கிடந்தான்.

நாகர் என்னும் ஒருவகை மலைச் சாதியர் ஆங்கு வசித்து வந்தார் ஆதலால் இவனைக் கண்டதும் நல்ல புசிப்புக் கிடைத்ததென்று உவந்து சூழ்ந்தார். கொல்ல மூண்டார்; அந்நாட்டு மாக்கள் பேசும் மொழியை இவன் அறிந்திருந்தான்; அவர்களிடம் இதமாய்ப் பேசினான்; ஆகவே கொல்லாமல் இவனை அழைத்துப் போய்த் தம் தலைவனிடம் காட்டினர். அவன் கேட்ட கேள்விக்குப் பதில் உரைத்துத் தனது அவல நிலைமையை உணர்த்தினான். அவன் நெஞ்சமிரங்கி இவனுக்குக் கள்ளும் ஊனும் தருக" என அயலே நின்றவரிடம் உரைத்தான்.

"ஐயோ! அவை தீயன; நான் உண்ணேன்; எனக்கு வேண்டா' என்றான். இவ்வுரைகளைக் கேட்டதும் அந்நாகர் தலைவன் வியந்து, ஊன் உண்ணாமல் உயிர் வாழ முடியுமா?’ என்று அவன் நகைத்தான். அவனுக்கு வணிகன் அறிவு நலம் கூறினான்; புலை ஊனால் விளையும் கொலை பாதகங்களையும்; அதனையுண்டவர் அடையும் துயர நிலைகளையும் நயமாக உணர்த்தினான். தானிய உணவுகள் கிடையாத இந்த இடத்தில் நீ ஊனே உண்டு வந்தாலும், பிற உயிர்களைக் கொல்லாமல் ஆனவரையும் அருள்புரிந்து வருக’ எனப் பொருள் பொதிந்த மொழிகளால் இனிது புகன்றான்.

உடைகல மாக்கள் உயிர்உய்ந்து ஈங்குஉறின்
115 அடுதொழில் ஒழிந்தவர் ஆர்உயிர் ஓம்பி,
மூத்துவிளி மாஒழித்(து) எவ்வுயிர் மாட்டும்
தீத்திறம் ஒழிக.. மணிமேகலை, 16

'கடல் வழி வரும்பொழுது கப்பல் உடைந்து அபாயம் அடைந்து இங்கே வந்து சேரும் மக்களுக்கு யாதொரு தீங்கும் செய்யாமல் ஆதரித்தருள்; புலாலுக்காக எந்த உயிரையும் கொல்லாதே; வயது முதிர்ந்து இறந்துபட்ட விலங்குகளை வேண்டுமானால் தின்றுகொள்; யாண்டும் தீமையின்றி வாழ்' என இங்ஙனம் சாதுவன் கூறிய போதனைகளைக் கேட்டதும் அவன் உள்ளம் உவந்து அவ்வாறே இறுதி வரையும் உறுதியாக இந்த விரதத்தைப் பேணி வருவேன்” என்று சொல்லி தன்னிடமிருந்த முத்துக்களையும் மணிகளையும் வாரிக் கொடுத்திவனை ஆர்வத்தோடு அனுப்பினான். சாதுவனது போதனைகள் ஆதரவுகளை அருளின.

புலால் உண்பதால் மனிதன் காட்டு விலங்கு போல் கொடுமை மண்டியிருப்பான்; உயிர்க்கொலைக்கு அஞ்சான்; அருள் நலமிழந்த அவனது வாழ்வு அவலமாயிருக்கும்; ஊன் உண்போரும் உணர்வு தெளிந்தால் அதனை ஒழித்து உய்தி பெறுவார் என்னும் உண்மையை இச்சரித நிகழ்ச்சியால் உணர்ந்து கொள்கிறோம். அறிவு தெளிய அவலங்கள் ஒழிகின்றன.

நாற்றப் புலாலை ஏற்ற சுவைசெய்து கலத்திலிட்டு ஒருவன் தின்னும்பொழுது இந்த ஊன் ஒரு உயிரைக் கொன்றதனால் அல்லவா வந்துள்ளது; உணர்வுடைய மனிதன் இதனை உண்ணலாமா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அவ்வாறு எண்ணுவானாயின் உள்ளம் இரங்கி ஊன் உண்ணலை ஒழிக்க நேர்வான். நெறிமுறைகளை நேர்மையோடு எண்ணி உணராமையினாலேதான் மனிதன் மண்ணாய் மடிந்து போகின்றான்.

தன்னுயிரைப் போல் பிற உயிர்களையும் பேணி ஒழுகுபவன் மனிதருள் தெய்வமாய் மருவி மிளிர்கின்றான். அவ்வாறு பேணாதவன் எவ்வழியும் உயராமல் இழிவான அவகதிகளையே அடைகின்றான். சீவ தயையால் தேவ கதிகள் வருகின்றன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

முன்னைவே தனையை விட்டு முற்றிய அறிஞர் நெஞ்சில்
பின்னொரு விகார மின்றி இருப்பரிப் பிணப்பு லாலை
நன்னெறி அறிந்த நாமும் நாவழி ஒழுகிக் கெட்டோம்
தின்னவே நயந்தோம்; நம்போல் தீங்குளார் உண்டோ வின்றே.

பழக்கத்தால் புலாலைத் தின்று வந்தவர் பின்பு அதன் தீமையைத் தெரிந்து வருந்தி ஊனுணவை அறவே ஒழித்து உணர்வுடன் ஒழுக நேர்ந்தவர் இவ்வாறு இரங்கி உரைத்துள்ளார்.

பறவை இனங்களுள் நாரை என்பது ஒன்று. அந்த வகையுள் விசித்திரமான நாரை ஒன்று தோன்றியது. தனது சாதி நெறி தவறி வேதியன் ஒருவன் மீன் தின்ன விழைந்தான். அந்த விழைவினால் பின்பு அவன் நாரையாய்ப் பிறந்தான். பறவையாப்ப் பிறந்தாலும் பழம்பிறப்பின் விழைவினால் விளைந்த இழவை உணர்ந்து மீன் முதலிய ஊன்களை யாதும் தின்னாமல் அது நீதியாய் நின்றது. அந்நிலையை அறிந்து முனிவர்களும் வியந்தனர்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

ஒருமீன் புலவு வாய்மடுப்பின் ஒழியும் தசைகள் அனைத்தினையும்
பரிவால் நுகர்ந்தோர் வீழ்கின்ற பாழ்வெந் நரகில் படுவரெனும்
அருமா மறையின் பொருள்தேர்ந்தோ அந்தா மரைநாண் மலர்பொதுளும்
விரிநீர் வாவி பயில்மீன்கள் விழுங்கா துலவும் புள்ளினமே.

புழுவும் தசையும் வெண்ணினமும் பொதிந்த குரம்பை வீக்குதற்குக்
கழியூன் நுகர்ந்தோர் கொடுநரகில் கற்ப காலம் கிடந்தழுந்தி
விழைவின் முன்னர்த் தாம்நுகர்ந்த விலங்கும் அவர்தம் மெய்த்தசையை
அழிவெம் பசியால் பறித்தருந்தும் என்னும் பான்மை அறிந்தேயோ?

புலால் துறந்திருந்த புள்ளினங்கள் புகழ்ந்து போற்றப்பட்டுள்ள நிலைகளை இவற்றால் நாம் உணர்ந்து கொள்கிறோம்.

கட்டளைக் கலித்துறை

புலிநாரை எண்குற வாதிகள் முன்னம் புலாலருந்தும்
குலனா யிருந்து மருள்ஓம்பி முத்தி குறுகியதென்(று)
உலகூ டுரைப்பசொற் கேட்டும் அருளற்(று) உழன்றிறக்கும்
சிலர்மா னுடத்தென்ன செய்வான் புவியில் செனித்தனரே. - அருட்பிரகாசம்

சடக்கடத் துக்கிரை தேடிப் பலவுயிர் தம்மைக்கொன்று
விடக்கடித் துக்கொண்(டு) இறுமாந் திருந்து மிகமெலிந்து
படக்கடித் தின்றுழல் வார்கட மைக்கரம் பற்றிநமன்
இடக்கடிக் கும்பொழு(து) ஏதுசெய் வார்கச்சி ஏகம்பனே. 33 திருவேகம்பமாலை, பட்டினத்தார்

புலால் உண்பதால் விளையும் புலைத்துயரங்களை நினைத்து வருந்தியிருக்கும் இவை ஈண்டு உணர்ந்து சிந்திக்க வுரியன.

கொன்று உண்பான் நாச்சாம், சிறுபஞ்சமூலம் 10

புலால் உண்பவனது நா புலையாயிழிந்துபடும்; அது செத்த நாவேயாம் எனக் காரியாசான் இங்ஙனம் கூறியிருக்கிறார்.

இன்னிசை வெண்பா

அலைப்பான் பிறவுயிரை யாக்கலுங் குற்றம்
விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றம்
சொலற்பால அல்லாத சொல்லுதலுங் குற்றம்
கொலைப்பாலுங் குற்றமே யாம். 28 நான்மணிக்கடிகை

ஊன் உணவுக்காக ஆடு, கோழிகளை வளர்ப்பதும், விலைக்கு வாங்கிப் புலாலை உண்பதும், பொல்லாத சொற்களைச் சொல்வதும், கொல்வதும் கொடிய குற்றங்களாகும் என விளம்பி நாகனார் இவ்வாறு விளம்பியுள்ளார்.

நேரிசை வெண்பா

இட்டயிரை ஆசையால் எய்தியமீன் தூண்டில்வாய்ப்
பட்டதென நாவிரசம் பார்த்துலகர் - கெட்ட
இருளார் உலகத்தில் எய்துவர்கள் என்றார்
அருளாரும் நெஞ்சத் தவர். - இதிகாசம்

தூண்டிலால் மீன்களைப் பிடித்து உண்டவர் பின்பு நரக துன்பங்களை அடைந்து நைந்துழல்வர் என இது உணர்த்தியுளது. புலையும் கொலையும் பொல்லாத் தீமைகளாய் நின்றன.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்.

கொன்றி லாரைக் கொலச்சொலிக் கூறினார்
தின்றி லாரைத் தினச்சொலித் தெண்டித்தார்
பன்றி யாய்ப்ப டியிற்பிறந்(து) ஏழ்நர(கு)
ஒன்று வார ரனாணையி(து) உண்மையே. 1

கொலைஅஞ் சாதொரு வற்கஞ்சிக் கொன்றுளோர்
சிலர்சொல் அஞ்சிப் புலாவினைத் தின்றுளோர்
நிலைய தாய்நர கத்திடை நிற்பரென்(று)
அலகில் நூல்மறை ஆகமம் ஓதுமே. 2 பெருந்திரட்டு

புலை உணவால் பலவகையான பழி துயரங்கள் விளைகின்றன; ஆதலால் அந்த ஈன ஊனை உண்ணாமல் ஒழித்துப் புனித நிலையில் ஒழுகிவரின் மனிதன் இனிய நலன்களை எய்த நேர்கின்றான். ஊனம் ஒழிவது ஞானம் தெளிவதாம்.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

புன்புலால் யாக்கை பொருந்தி யிருந்தும்
தன்புலை ஓர்ந்து தவநிலை காணா(து)
அன்பில ராகி அவமே இழிந்து
வன்புலால் உண்ப துவசைதுய ராமே.

தன் பிறப்பின் நிலையை உணர்ந்து மனிதன் சிறப்பு நிலையை அடைந்து கொள்ள வேண்டும். அங்ஙனம் அடையானாயின் அவன் கடையாயிழிந்து கதியிழக்கின்றான்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில்
..புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி
..ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு
..மயங்கியுள் நடுங்கியாற் றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த
..இளைப்பையும் ஐயநீ அறிவாய். 41 பிள்ளைப் பெரு விண்ணப்பம், ஆறாம் திருமுறை அருட்பா

புலால் உண்பவரைக் கண்டபோது மனம் கலங்கி இராமலிங்க சுவாமிகள் நடுங்கியுள்ள நிலையை இதனால் உணர்ந்து கொள்கிறோம். அவரது சீவகாருணிய நீர்மை உரைகள் தோறும் வெளிவந்துள்ளன. உயிர் இரக்கம் உயர்கதியை உணர்த்தியுளது.

இந்த ஒரு உடம்பை வளர்க்க எவ்வளவு உயிர்களைக் கொன்றிருக்கிறான். அவ்வளவு கொலை பாதகங்களும் புலால் உண்ணும் நசையால் விளைந்துள்ளனவே! என்று உள்ளம் உளைந்து அவர் உருகி மறுகியுள்ளமையை ஊன்றி ஓர்ந்து கொள்கிறோம்.

நேரிசை வெண்பா

கருந்தொழில ராய கடையாயார் தம்மேல்
பெரும்பழி யேறுவ பேணார் - இரும்புன்னை
புன்புலால் தீர்க்கும் துறைவ!மற் றஞ்சாதே
தின்ப(து) அழுவதன் கண். 262 பழமொழி நானூறு

மான் மரைகளை இரையாகப் பற்றித் தின்னும் பொழுது அவை கதறி அழுதாலும் கொடிய புலி இரங்கி விடாது; அதுபோல் புலை விரும்பிக் கொலை புரிபவர் இரக்கம் கெட்டவர்; பழிக்கஞ்சாத கடையர் என இது குறித்துள்ளது. ஊன் உண்பதால் உள்ளம் கொடியதாகின்றது; ஆகவே எள்ளலடைய நேர்ந்தது.

இனிதுண்பான் என்பான் உயிர்கொல்லா(து) உண்பான். 60 நான்மணிக் கடிகை

உயிர்க்கொலை நேராமல் உண்பதே இனிய உணவாம்; அல்லாதது பொல்லாத தீமையாம் என இதனால் உணர்ந்து கொள்கிறோம். புலை நீங்கிய பொழுது அது புனித வாழ்வாகின்றது.

பிற உயிர்கள் துயருறாமல் தன் வாழ்வை நடத்தி வருவதே நலமாம்; அவனே நல்லவனாய் நலம் பல பெறுகின்றான்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

தன்னுடல் வளர்க்க மன்னுயிர் அழிக்கும்
..தாழ்வினை ஒழியவிட்(டு) என்றும்
இன்னுயிர்க் கிரங்கி இதம்புரிந் தருளின்
..ஈசனின் அருளெலாம் எய்திப்
பொன்னுயி ராகி மணியுயி ராகிப்
..புனிதபே ரின்பங்கள் பொருந்திப்
பின்னுயிர் என்றும் பிறவியை அடையாப்
..பேறுவந்(து) உமைஅடைந் திடுமே. - இந்தியத்தாய் நிலை

தான் உண்ணும் உணவில் ஊனம் படியாமல் உயிர்களைப் பேணி ஒழுகிவரின் அவன் உயர்ந்த புண்ணிய நீரனாய் ஒளிபெற்று மகிழ்கின்றான். அருள் நீர்மை அதிசய மேன்மை ஆகிறது.

பிற உயிர்கள் பதைத்து மாளத் தம் வயிற்றை நிரப்பி வரும் வாழ்வில் நீசம் படிந்துள்ளமையால் ஈசன் அருளை இழந்து அவன் இழிந்து போய், இழி பிறவிகளில் அழுந்தி அழி துயரங்களையே யாண்டும் அவன் அடைய நேர்கின்றான்.

நேரிசை வெண்பா

உண்ட விலங்கின் உயிர்களெல்லாம் உண்டவர்போல்
பண்டை வடிவம் படிந்துமே - கொண்டுதமைத்
தின்றவரைத் தின்றுவரும் தீவினையை எண்ணினால்
ஒன்றியவர் உண்பரோ ஊன்.

ஊன் அருந்துவோர்க்கு உளவாம் ஈனநிலைகளை இது உணர்த்தியுளது. அநியாய உணவால் அவலக் கேடுகள் நேர்கின்றன.

‘புலையை ஒழித்துத் தலைமையில் நிலைமின்’ என்றது நிலைமையை நினைந்து தெளிய வந்தது. புலைப்புசிப்பு புலைப்படுத்தி மனிதனைக் கீழே தள்ளி விடுகிறது; அந்த இழிவை எள்ளி விலகி மனிதன் உயர்ந்து கொள்ள வேண்டும். சிறந்த பிறப்பை இழிந்த ஊன் உணவு ஈனப்படுத்துகிறது; அதனை ஒழிந்த போது உயர்வும் ஒளியும் இயல்பாய் உளவாகின்றன.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும். 260 புலால் மறுத்தல்

கொல்லாமையும், புலால் உண்ணாமையும் உடையானை எல்லா உயிர்களும் திசை நோக்கிக் கைகூப்பித் தொழும் என்னும் இவ்விழுமிய மொழி உரிமையோடு கருதி யுணரவுரியது.

புலாலை ஒழித்துவிடு! நீ புனிதனாயுயர்ந்து சிறந்து வாழுவாயென்றும், புலையொழித்து நிலை தெளிந்து நீதியோடு வாழுக என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Nov-20, 10:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

சிறந்த கட்டுரைகள்

மேலே