எல்லை வீரனின் எஞ்சிய நேர காதல்

---------------------------
நோனார் (எதிரி) தேச வரையறை எல்லை..அல்கல்(daily) அடங்கா நோனார் சீண்டல்..
கண் காணும் தூரம் கரடு முரடு மலைகள்..தோட்டாக்கள் துளைத்த கருநிலம் (useless fields) இடையில்..
நாற்காலி வைத்தார் போல் பனைவுயர கோபுரம்..
கோபுரம் மேலே குறுகிய மரப்பரப்பு.. காற்று சேர கடுங்குளிர் அணைப்பு..
கானக வண்ணம் கலந்த கெட்டி காழகம் (uniform)..
இடக்கரம் துப்பாக்கி.. வலக்கரம் தொலைநோக்கி..
ஆமணக்கு எண்ணெய் அகல் விழியிலிட்டார் போல்..
வெறும் கண் கண்டும் தொலை நோக்கி கொண்டும்..
அதிகவனத்துடன் அரைவட்ட கண்காணிப்பு..
நீறு(துகள் particle) பறந்திடினும் நிற்கும் இவன் பார்வை அங்கு..
ஆதவனுடன் பணி தொடங்கி அந்தி நெருங்க ஆதவனும் அயர்ந்திட..
ஆள் ஊடுருவல் உற்று நோக்குமிவன் கண்களில் களைப்பில்லை..
கங்குலில்(night) கடமையாற்ற சக வீரன் வரும் திசையில்..
இரு மலையிடை இறங்கும் செம்பரிதி(Red sun) தான் கண்டு
புது மனைவி புருவமிடையிட்ட மனாலமதை (குங்குமம்) மனதில் கண்டான்..
ஈரத்துண்டு தலையுடன் புடவை இடையில் சுற்றியவளை
அரம்பு (குறும்பு) அரும்பிட நசையுடன்(விருப்பு) சேர பின்னிருந்து கட்டியணைத்து
மஞ்சள் படர்ந்த பின்கழுத்தில் முத்தமிட்ட நினைவுகளில் தன்னுதட்டை தடவினான்..
தன்னுள் நகைத்து பொசிவுடன்(நெகிழ்வு) குழிசி(குடம்) நீர் எடுக்க குனிய..
முடுகு(வேகம்) முடுக்கியதொரு தோட்டா பின் கழுத்தை தழுவி பாய..
தன்னுடல் தடுமாறி தபுதல்(விழுதல்) கொண்ட அதிர்வில்
மரத்தளம் போழ்வுண்டு(பிளவு) பக்கமிருந்த சருகான மிஞிருக் (தேனீ) கூடு சிதற..
மரத்தள போழ்வில் துப்பாக்கி செருகி சுட்டவனை கொன்றவுடன்
கட்டியவள் தாலியை கண்களில் ஒத்தி உச்சி வகிடில்
மனாலமிடும்(குங்குமம்) காட்சி மனத்திரையில் காண்கிறான்.
--------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (29-Nov-20, 7:40 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 460

மேலே