கொல்லல் பழிபாவம் கொடுமையாய் அல்லல் உறுநரகம் ஆக்கும் - கொலை, தருமதீபிகை 702

நேரிசை வெண்பா

கொல்லல் பழிபாவம் கூட்டிக் கொடுமையாய்
அல்லல் உறுநரகம் ஆக்குமால் - கொல்லாமை
புண்ணியமாய் நின்று புகழின்பம் ஊட்டுமிதை
எண்ணி அருள்செய் திரு. 702

- கொலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கொல்லுதலாகிய தீமை பழிபாவங்களை விளைத்துக் கொடிய அழிதுயரங்களில் ஆழ்த்தும்; கொல்லாமை புகழ் இன்பங்களை வளர்த்துப் புண்ணியமாய் நின்று கண்ணிய மகிமைகளை அருளுமாதலால் அந்த அருள் நீர்மையை எவ்வழியும் செவ்வையாகப் பேணி வருக. வரின் பேரின்பம் பெருகி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதனுடைய உள்ளம் அல்லலை அஞ்சுகிறது; நல்லதை நாடுகிறது. இந்த அனுபவ நிலை மனித சமுதாயம் முழுவதும் பரவியுளது. தன் உயிரைப் போலவே பிற உயிர்களையும் எண்ணி ஒழுகின் அந்த ஒழுக்கம் விழுமிய மேன்மையை அருளி வருகிறது. தகுதியான நீதி உணர்ச்சியே மனிதனை எவ்வழியும் உயர்த்தி உய்தி புரிகிறது. அறிவு நலம் மனிதனுக்குத் தனி உரிமையாய் அமைந்திருப்பினும் அது நல்ல நீர்மையோடு தோய்ந்து வருமளவே சீர்மையும் சிறப்பும் வாய்ந்து வருகின்றது. தோயா வழி அந்த அறிவு தாழ்மையாய் இழிந்து படுகின்றது.

அறிவுக்கு நீதி பெருமை தருகிறது. உயிர்க்கு ஒளியாய் அமைந்துள்ள அறிவு நீதி நிலையால் உயர்ந்து வருதலால் அதன் அதிசய மகிமையை அறிந்து கொள்ளலாம். ஒத்த உயிரினங்கள் உவகையுறும்படி இதமாய் ஒழுகிவரும் அளவே மனிதன் உத்தமனாய் உயர்ந்து வருகின்றான்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322 கொல்லாமை

தலைமையான மனிதன் இந்நிலையில் இருப்பான் என இது உணர்த்தியுள்ளது. பசித்தவர்க்கு உணவு கொடுத்து எல்லா உயிர்களையும் இனிது பேணிவரின் அது அரிய பெரிய தருமமாகும் என வள்ளுவர் இங்ஙனம் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.

சிறந்த மனிதப்பிறவி வாய்ந்தவன் உணர்ந்து ஒழுக வேண்டிய கடமை இங்கே நினைந்து சிந்திக்க வந்தது. இந்தக் கடமையிலிருந்து வழுவிய அளவு மடமையாய் இழிவுறுகின்றான். பிற உயிர்களுக்கு நேர்ந்த துன்பங்களை நீக்கி இன்பங்களை ஆக்கி யாண்டும் இதமாய் நடந்து வருவதே உயர்ந்த மனிதனது இயல்பாம். இனிய பான்மையே அரிய மேன்மையாய் வருகிறது.

பொருளுடையான் என்று பெயர் பெறுவதினும் அருளுடையான் என்று பெயர் பெறின் அது அவனுக்கு எவ்வளவோ மகிமையாம். இனிய நீர்மையால், இன்பங்கள் பெருகி வருகின்றன; கொடிய தீமையால் துன்பங்களே தொடர்ந்து விளைகின்றன.

உயிர்களுக்கு எவ்வழியும் இதமே செய்துவர வுரியவன் அகிதங்கள் செய்ய நேரின் அவை அநியாயத் தீமைகள் ஆகின்றன; ஆகவே அவன் நரகத் துன்பங்களை அனுபவிக்க நேர்கின்றான்.

கொடிய செயல்களுள் கொலை மிகவும் கொடியது. உயிர்களைப் பதைக்கச் செய்வதால் அது நெடிய நீசமாய் நின்றது. பிற உயிர்களுக்குச் சிறிது தீங்கு நினைத்தாலும் அது பெரிய பாவமாம், உள்ளத்தே எண்ணினாலும் இவ்வாறு பாவம் விளைந்து படுதுயரங்களுக்கு ஏதுவாகின்றதே! கொலை செய்ய நேர்ந்தால் அதன் விளைவு என்னாகும் என்பதை ஓர்ந்து உணர வேண்டும்.

கொலைகாரன், பழிகாரன், பாவி என்பன எவ்வளவு இழிவான ஈனங்கள்! நீசமான இந்த ஈன நிலைகளை மான மனிதன் யாதும் மருவலாகாது. மருவின் ஈசன் அருள் ஒருவி விடும்.

கொலையால் பழி முதலிய இழிவுகளும் அழிதுயரங்களும் விளைந்து உயிர் அதோ கதியில் விழுகிறது.

கொல்லாமையால் எல்லா நன்மைகளும் வருகின்றன. உயிர்களுக்கு இடர் புரியாமல் இருப்பதே கொல்லாமையாய் வருதலால் அது எல்லா இன்பங்களையும் இனிது அருளுகின்றன.

கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும்? என்று தாயுமானவர் இவ்வாறு உள்ளம் வியந்து கூறியுள்ளார். அரிய தவசீலமுடையவர் அருள் நீர்மையை மனித சமுதாயம் மருவி உய்ய வேண்டுமென்று பெரிதும் உருகியிருக்கிறார். அவ்வுருக்கம் உரைகளாய் வந்துள்ளது.

கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர் மற்று
அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே! – தாயுமானவர்

பரம்பொருளை நோக்கி உள்ளம் கரைந்து இவ்வாறு உரையாடியிருக்கிறார். இந்தச் சொல்லாடலில் அவரது அருள் நீர்மை ஒளி வீசியுள்ளது. பொருள் நிறைந்த சொல் போதம் சுரந்தது.

கொல்லா விரதம் கொண்டவரே நல்லவர் என்றதனால் அல்லாதார் தீயவர் என்று சொல்ல வேண்டும்; அவ்வாறு சொல்லவில்லை. யாரோ அறியேன் என்று அதிவிநயமாய் ஒதுங்கியிருக்கிறார் தீயோர் என்று நேரே கூறினால் கொல்லா விரதம் கொள்ளாதவரது உள்ளம் வருந்தும், அவ்வாறு பிறர் மனம் வருந்தப் பேசுவதும் பிழையாம் என்னும் விழுமிய நீர்மை அவர் மொழியால் ஈண்டு வெளியாயுள்ளது. கொல்லாமையைப் போதிக்க வந்தவர் தம் சொல்லாலும் அவ்விரதத்தைப் பேணி ஒழுகிவருவது காண வந்தது.

கொல்லா விரதம் கொள்ளாதவரது நிலைமையை வாயால் சொல்லவும் கூசியுள்ளபடியை இங்கே கூர்ந்து ஓர்ந்து கொள்கிறோம். மேலோர் மொழிகள் மெய் ஒளிகளாய் மிளிர்கின்றன.

சீவ கருணை தோய்ந்திருக்கிற அருளாளர் வாய்மொழி பொருள் பொதிந்து போதம் சுரந்து நீதி நெறிகளை வெளி செய்துளது. உலகத்துக்குப் போதிக்க வருகிறவர் அப்போதனையின்படி தம் உள்ளமும் சாதனை யடைந்திருக்க வேண்டும்; அவ்வாறு அமைந்திருப்பின் அப்போதனை அதிசய ஆற்றலுடையதாய் எவராலும் துதிசெய்யப் பெறும்.

கொல்லா விரதம் குவலயமெல் லாம்ஓங்க
எல்லார்க்கும் சொல்லுவ(து) என்இச்சை பராபரமே!

உலக இச்சைகளை எல்லாம் அறவே ஒழித்துவிட்டுத் துறவியாய் யோக சமாதியில் ஒதுங்கியிருந்த தாயுமானவரது உள்ளத்தில் ஒட்டியுள்ள இச்சையை இதில் உய்த்துணர்ந்து கொள்கிறோம். கொல்லா விரதம் எல்லா உயிர்களையும் ஒல்லையில் ஈடேற்றியருளுமாதலால் அதனைக் கைக்கொண்டு மனித சமுதாயம் உய்ய வேண்டும் என்று இங்ஙனம் உருகி வேண்டி யிருக்கிறார்.

பிற உயிர்களுக்கு இதங்களே கருதி எவ்வழியும் அருள்புரிந்து வருக என்றும், அதனால் அரிய பல மகிமைகள் பெருகி வரும் என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Dec-20, 12:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே