கல்லாமல் இருக்காதே கல்லாய்

===================================
பரவுகின்ற நோயென்ப தாலே
-பதைக்கின்ற நெஞ்சோடு நாமே
வரவேண்டாம் வாசலிலே நில்லு
-வாய்திறந்து சொல்லுகிறோம் சொல்லு
உரமூட்டி வளர்த்தெடுக்கும் நெல்லாய்
-உள்மனத்தில் விளைந்திருக்கும் சொல்லு
தரமற்ற தென்கின்ற போதும்
-தன்னலங்காத் திடச்சொல்வோ மின்றே!
**
உன்வீட்டில் நான்நுழைந்தால் குற்றம்
-உயர்சாதி என்கின்ற சீற்றம்.
என்வீட்டில் நீநுழைத லாகா
-எளியவனா யிருக்கின்றாய் போபோ.
தன்மானப் பிரச்சினைகள் கொண்டு
-தரம்தாழ்ந்த நிலைமாற்றத் தானே
உன்வீட்டில் நீநுழையைக் கூட
-உருவாகி விட்டதிந்த நோயே!
**
சுற்றங்கள் இருந்திட்டப் போதும்
-சுடலைக்கு அநாதைபோல் போகும்
வெற்றுடம்புக் கோர்விலையு மில்லை
-விதிமுடிந்தால் நமைத்தின்னும் மண்ணே!
சற்றிதைநீ சிந்தித்துப் பார்த்து
-சமமாக வாழ்ந்துவிடு வென்றே
கற்றுதந்த கொரோனாவைக் கண்டும்
-கல்லாமல் இருக்காதே கல்லாய்.
**
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Dec-20, 4:18 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 103

மேலே