விழி நீரால் விடியலைத் தேடும் விவசாயி

கனல் தெறிக்கும் கதிரவன்..
கருக்கல் நிற தேகம்..
ஒட்டிய அடி வயிறு..
சுற்றிய அழுக்கு வேட்டி..
நீர் வடித்த வயல்..
வழுக்காத வளைந்த வரப்பு..
தலை கனத்த கதிர்கள்..
இனி வயிறு வற்றாது
கடன்சுமை குறையும் என
கண்களில் துளி களிப்பு..
அடுத்த நாள் அறுவடையென
மனதுக்குள் நாள் குறித்து..
ஆட்களுக்கு சேதி சொல்லி
வாசல் நுழையும் முன்னே
அண்ணாந்து வான் பார்க்க..
கரு மேகங்கள் புடை சூழ..
கதிரவன் கண்ணாமூச்சி ஆட..
அந்திநேரம் அவசரமாய் ஓட..
விதை விதைத்தவன் வெடவெடப்பாய்..
காலில் விழுந்து கடன் வாங்கி..
தாலி வைத்து விதை வாங்கி..
சாலை நடந்து சாணி சேர்த்து..
களை பிடுங்கி காலால் மிதித்து..
முத்தாய் நெல் வளர்ந்திருக்க..
மொத்தமாய் போய்விடுமோ என
முழு ராத்திரியும் நித்திரையின்றி
கண்ணீர் வற்றி பாலையாக..
கடவுள் கருணை காட்டி
கருக்கல் களைத்து கலைந்து..
கதிரவன் தன் முகம் காட்ட..
கண்ணில் சிறு நீர் துளிர
கதிர் அருவாள் எடுத்து
வயல் நோக்கி நடந்தான்
வேக நடை கொண்டு..
----
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (17-Dec-20, 9:25 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 1930

மேலே