புகழுடைய மானிடனை பரமன் உகந்து புடையே இருத்தும் புனைந்து - புகழ், தருமதீபிகை 734
நேரிசை வெண்பா
நல்ல மணமுடைய நன்மலர்போல் நானிலத்தில்
வல்ல புகழுடைய மானிடனை - எல்லாம்
உடைய பரமன் உகந்து முகந்து
புடையே இருத்தும் புனைந்து. 734
- புகழ், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
நல்ல வாசனையுடைய இனிய பூவை மனிதர் பிரியமாய் உவந்து பேணுதல் போல் புகழுடைய ஒருவனை எல்லாம் உடைய ஈசன் இனிது விழைந்து தன்பால் அணைத்து அன்பால் அருள் புரிவான்; அந்த அதிசய இன்ப நிலையை அடைக என்கிறார் கவிராஜ பண்டிதர்.
கல்வி, செல்வம் முதலிய நலங்கள் மனிதனை உயர்த்துகின்றன; ஆயினும் புகழ்போல் அவை உயர்மகிமை புரியாது. தரும நீர்மையின் சாரமாய் அது மருவி வருதலால் உயிர்க்கு உயர் மேன்மை புரிகிறது. பூவுக்கு வாசம் போல் மனிதனுக்குப் புகழ். புகழ்மணம் கமழ்ந்த பொழுது அந்த மனிதனை யாவரும் உவந்து பாராட்டுகின்றனர். புகழ் இல்லையேல் மணம் இழந்த மலர் போல் அவன் மாண்பிழக்கின்றான். மணம் என்றது மனம் கவரும் குணம் கருதி வந்தது.
புகழ் எவர்க்கும் உவகை தருகிறது. அதனை ஆவலோடு அவாவி உழல்வது சீவ சுபாவமாயுள்ளது. தன்னைக் குறித்துப் பொய்யாகப் புகழ்ந்து சொன்னாலும் அந்தப் புகழ்மொழியைக் கேட்டு எவனும் மெய்யாக உள்ளம் உவந்து கொள்கிறான்.
பேடியைப் பார்த்து ’நீ சுத்தவீரன்’ என்றால் அவன் உள்ளம் களித்துத் துள்ளுகிறான். கொடிய உலோபியை நோக்கிப் பெரிய வள்ளல் என்று சொன்னால் அவனும் நெடிய உவகை கூர்கின்றான். இழிபழியில் இழிந்திருப்பவரும் புகழை விழைந்து கொள்வதால் அதன் விழுமிய நிலையை உணர்ந்து கொள்கிறோம். அதிசய இனிய அமுதமாய் அது தனியேயுளது.
புகழ்ந்து பேசினால் எவரும் வணங்கி வசமாய் வருகின்றனர். தனியே இருக்கும் போது யாதும் கொடாத உலோபி நான்கு பேரிடையே ‘செல்வப் பிரபு! வள்ளல்!’ என்று துதித்துச் சொன்னால் பொருளைக் கொடுக்க நேர்கின்றான். வெளிப்பகட்டான போலிப் புகழுக்காகப் பெரும் பொருளை வாரி வீசுகின்றவரையும் நேரே கண்டு வருகிறோம். புகழில் மனிதர் கொண்டுள்ள ஆவல் அதிசய மருமமாய் மருவி அதன் உயர்நிலையை விளக்கியது.
’புகழ்ச்சி விருப்பன்’ எனச் சிவபெருமானைச் சிவப்பிரகாச சுவாமிகள் அதிவிநயமாகத் துதித்திருக்கிறார். துதிமொழி மதி்நலங் கனிந்து பத்திச்சுவை சுரந்து வித்தகமாய் வெளி வந்துளது.
நேரிசை யாசிரியப்பா
நலமலி வாதவூர் நல்லிசைப் புலவ
மனநின் றுருக்கு மதுர வாசக
கலங்குறு புலனெறி விலங்குறு வீர
திங்கள் வார்சடைத் தெய்வ நாயகன்
ஒருகலை யேனு முணரா னஃதான்று
கைகளோ முறிபடுங் கைகள் காணிற்
கண்களோ வொன்று காலையிற் காணும்
மாலையி லொன்று வயங்கித் தோன்றும்
பழிப்பி னொன்று விழிப்பி னெரியும்
ஆயினுந் தன்னை நீபுகழ்ந் துரைத்த
பழுதில் செய்யு ளெழுதின னதனாற்
புகழ்ச்சி விருப்பன் போலும்
இகழ்ச்சி யறியா வென்பணி வானே. 24 நால்வர் நான்மணிமாலை, சிவப்பிரகாச சுவாமிகள்
இப் புகழ்ச்சிப் பாடலின் உல்லாச வினோதத்தை ஊன்றி உணர வேண்டும். ஒரு கலையும் உணரான்; கண்களும் கைகளும் சரியாயில்லை; அப்படியிருந்தும் திருவாசகத்தைப் பேராசையோடு ஈசன் எழுதிக்கொண்டார். தன்னைப் புகழ்ந்து பாடிய நூலாதலால் அதனை உலகம் எல்லாம் உவந்து காணவேண்டும் என்னும் நசையினாலேயே அவ்வாறு விழைந்து செய்தார்; ஆகவே அவர் புகழ்ச்சி விருப்பன் போலும் என இகழ்ச்சிச் சுவையில் கவி புகழ்ந்து பாடியுள்ள இதை வியந்து காணுகிறோம். புகழ் ஈசனையும் வசஞ்செய்யும் மகிமை யுடையது.
வேதம் முதலிய கலைகள் யாவும் ஏதுமறிய முடியாத அதிசய நிலையில் மருவியுள்ள பரம்பொருள்; சூரியன், சந்திரன், அக்கினி என்னும் ஒளிகளை விழிகளாக வுடையவர்; மலரினும் மெல்லிய மிருதுவான கைகள் வாய்ந்தவர்; அத்தகைய திவ்விய நிலையினர் தமது அன்பன் வாய்மொழியை மன்பதை அறிந்து உய்யவேண்டும் என்னும் கருணையினால் தன் கையால் எழுதியருளினார் என்னும் குறிப்பு இதில் கூர்ந்து உணரவுள்ளது. புகழ் நிலையை மருவி இனிய கலைச்சுவையோடு கனிந்து வந்துள்ள இந்தக் கவியைக் கருதிக் காண்பவர் அறிவின் சுவையை மாந்திப் பெரிதும் மகிழ்வர்.
புகழை எவரும் விரும்புவர்; எதையும் துறந்துபோன துறவியரும் புகழில் நசை கொண்டிருந்த உண்மையைச் சரிதங்கள் காட்டியுள்ளன.
யாவரும் ஆவலோடு புகழை அவாவி அலையினும் அதனை உரிமையாக நேரே அடைந்து கொள்பவர் மிகவும் அரியர்.
பெரிய நீர்மையோடு அரிய காரியங்களைச் செய்து முடிப்பவரையே புகழ் உரிமையாய் நாடி அடைகிறது. அவ்வாறு செய்யாதவர் வேறு எவ்வாற்றானும் அதனை அடைய முடியாது.
ஏதேனும் ஓரளவு புகழ்பெற வேண்டும்; அங்ஙனம் பெறாதவர் பிறந்தும் பிறவாதவராய் இழிந்து ஒழிந்து போகின்றார், புகழ் பெற்றவர் இவ்வுலகில் பிறந்த பயனைப் பெற்றவராய்ச் சிறந்து திகழ்கின்றார்; மேலும் உயர்ந்த கதிகளை அடைந்து கொள்கின்றார். அவரது பேரும் பேறும் நிவந்து நிலவுகின்றன.
நேரிசை யாசிரியப்பா
சேற்றுவளர் தாமரைப் பயந்த வொண்கேழ்
நூற்றித ழலரி னிரைகண் டன்ன
வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை
5. உரையும் பாட்டு முடையோர் சிலரே
மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவ னேவா வான வூர்தி
எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக்
10. கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்
மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்
அறியா தோரையு மறியக் காட்டித்
திங்கட் புத்தே டிரிதரு முலகத்து
15. வல்லா ராயினும் வல்லுந ராயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை யாகுமதி யருளிலர்
கொடாமை வல்ல ராகுக
கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே. 27 புறநானூறு
புகழ்ப் பேற்றின் அருமை பெருமைகளை விளக்கி வந்துள்ள இந்தப் பாசுரம் கருதியுணரத் தக்கது. சோழ மன்னனை நோக்கி முதுகண்ணன் சாத்தனார் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் பாடியுள்ளார்.
'இவ்வுலகில் சிலரே மிகவும் அரிதாகப் புகழினைப் பெறுகின்றார், புலவர் பாடும்படியான உயர்ந்த புகழை அடைந்தவர் தானாகவே விரைந்து செல்லும் தெய்வ விமானத்தில் ஏறிப் பரகதிக்குப் போகின்றார், அத்தகைய புகழை நீ அடைந்து கொள்ள வேண்டும்; அதனை அடையும் வழிகளுள் கொடையே தலைமையானது; ஆதலால் உன்பால் வருந்தி வந்தவர்க்கு அன்பால் இரங்கி உதவுக, அந்த ஈகையால் உனக்குச் சிறந்த கீர்த்தியும், உயர்ந்த வெற்றியும், நிறைந்த மகிழ்ச்சியும் உளவாம்' எனப் புலவர் பெருமான் அரசர் பெருமானுக்கு இவ்வாறு அறிவுறுத்தியிருக்கிறார். உயிர் வாழ்வின் உயர்வுகள் இதில் உணர வந்தன.
புகழை எளிதாக அடைதற்கு இனிய வழி ஈதலே என்பது இங்கே தெரிய வந்தது. வறுமையால் வாடி வந்தவரது பசித்துயரங்களை நீக்கி உயிர்களுக்கு ஈதல் இன்பம் புரிகிறது; அதனால் புகழ் விளைந்து அந்த உதவியாளனுக்கு உயர் பதம் அருளுகிறது. ஈந்தவன் மாந்தருள் மகிமை யுறுகின்றான்.
'ஈதல் உள்ளமொ(டு) இசைவேட் குவையே’ - மதுரைக்காஞ்சி, 205
பாண்டிய மன்னனை நோக்கி மாங்குடி மருதனார் இவ்வாறு பாடியிருக்கிறார்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 புகழ்
உயிர்க்கு ஊதியம் புகழ்; அது ஈதலால் வருகிறது; அந்த ஈதலைச் செய்து இசைபெற்று வாழுக என வள்ளுவர் இங்ஙனம் உணர்த்தியுள்ளார். மனிதன் புகழ் பெறவில்லையானால் உயிரின் பயனை இழந்தவனாகின்றான்; ஆகவே அவன் இருப்பின் இழிவு தெரிய வந்தது. ஊதியம் - இலாபம், பயன். உயிர்க்கு ஊதியம் பெற்றவர் உயர்கதி பெறுகின்றார்; அங்ஙனம் பெறாதவர் இழிநிலையில் தாழ்கின்றார். புகழை ஈட்டிப் புனித நிலையை நாட்டுக என மனிதனுக்கு மதியூட்டி இது கதி காட்டியுள்ளது.
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
ஈட்டு நல்புகழ்க்(கு) ஈட்டிய யாவையும்,
வேட்ட, வேட்டவர் கொண்மின்,வி ரைந்தெனக்,
கோட்டி மாக்களைக் கூவுவ போல்வன,
கேட்டி லன்முர சின்கிளர் ஓதையே. 31
- பள்ளிபடைப் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்
புகழை ஈட்டுதற்காக ஈட்டிய பொருள்கள் யாவையும் யாவர்க்கும் வாரிக் கொடுத்தார்; அந்த ஈதலை அறிவித்தற்காகக் கொடை முரசங்கள் அயோத்தியில் முழங்கி வந்தன என இது காட்டியுள்ளமையால் அங்கே புகழ் விளைந்துள்ளமை தெரிகிறது.
ஈகைக்கும் புகழுக்கும் உள்ள தொடர்பை இதனால் அறிந்து கொள்கிறோம். அழியும் இயல்பினதான பொருளை வழங்கி அழியாத புகழை அடைந்து கொள்பவர் விழுமியோராய் விளங்கி வருகின்றனர். அங்ஙனம் அடையாதவர் பிறவிப் பயனை இழந்து மடையராயிழிந்து கடையராய்க் கழிந்து ஒழிகின்றனர்.
கட்டளைக் கலித்துறை
அழியும் பொருள்கொடுத் தேசங்க மத்திற்(கு) அழிவில்பொருள்
பழியும் பவமும் இலாதெய்த லாயும் பயனிலவாய்க்
கழியும் படிநெடு நாள்நீத்(து) அமுதம் கமர்உகுத்தேற்(கு)
ஒழியும் பவம்உள தோகர பீடத்(து) உறைபவனே. - நிரஞ்சனமாலை
அழியும் பொருளைக் கொடுத்து அழியாத புகழை அடையாமல் பழி படிந்திருந்தேனே, எனது பாவப்பிறவி ஒழியுமா? என்று கவி மறுகியிருக்கிறார். உயிர் ஊதியம் உணர வந்தது.
புகழ் மருவிய பொழுது மனிதன் ஒளிமிகுந்த மணிபோல் உயர்ந்து திகழ்கிறான். இவ்வுலகில் இசைபெற்றவனை அவ்வுலகும் ஆசையோடு உவந்து கொள்கிறது. ஈசனருளும் அவனுக்கு இனிது வரவே அவன் தேசு மிகுந்து தெய்வமாகிறான்.
சேரமான் சிறந்த கொடையாளி; அதனால் பெரும் புகழுடையனாய் அவன் விளங்கியிருந்தான். சிவபரம் பொருளும் அவனை உவந்து அருள்புரிந்து வந்தது. மதுரையில் எழுந்தருளியிருந்த சோமசுந்தரப் பெருமான் அவனுடைய பெருமையை உலகம் அறிய வேண்டி ஓர் உபாயம் புரிந்தார். பாணபத்திரர் என்னும் புலவர் ஒருவர் வறுமையால் வருந்தியிருந்தார். பரமன் அவரது கனவில் தோன்றி 'நீ நாளை என்னிடம் வா! ஓலை ஒன்று தருகிறேன்; அதனைச் சேரனிடம் சேர்; பெருந்திருவாளனாய்ச் சிறந்து வாழ்வாய்” என்று மொழிந்தருளினார். புலவர் விழித்தார்; பரமன் கருணையை வியந்து விழிநீர் சொரிந்தார். விடிந்து எழுந்து நீராடி நியமம் முடித்து கோவிலுக்கு வந்தார்; சுவாமி சந்நிதியுள் புகுந்து விழைந்து தொழுதார்; ஓலைச் சுருள் ஒன்று எதிரே விழுந்தது; அடங்கா மகிழ்ச்சியோடு அந்த முடங்கலை எடுத்தார்; கண்ணில் ஒற்றிக் கண்ணிர் மல்கி உள்ளம் உருகி வெளியே வந்தார். குறித்தபடியே சேர நாட்டை அடைந்து அரசனிடம் கொடுத்தார்; மன்னன் கண்டு உருகினான்; அரியணையிலிருந்து எழுந்து திசை நோக்கித் தொழுதான்; கண்ணீர் மார்பில் வழிந்து ஓடியது; புலவரது அடியில் விழுந்து நெடிது தொழுதான்; பின்பு வரிசை பல செய்து பொன்னும் மணியும் பொதியில் ஏற்றிக் காவலர் சிலரைக் காப்புக்கு அமைத்துப் புலவரைப் போற்றித் தலைவாசல் வரையும் வெளியே வந்து அளியோடு அனுப்பினான். அரசன் உரிமையைப் பரமனிடம் கூறிப் பாணர் உருகினார். மதுரைப் பரமன் எழுதிய மதுரப்பாசுரம் அயலே காண்க.
நேரிசை ஆசிரியப்பா
மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே. 1
- 001 திருவாலவாயுடையார் – திருமுகப் பாசுரம், பதினொன்றாம் திருமுறை, ஆலவாயுடையார்
பாடலில் பதிந்துள்ள பொருள்களின் நயங்களை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். பரமன் பாணர்க்கு நேரே அருள் புரிந்திருக்கலாம்; அவ்வாறு செய்யாமல் இவ்வாறு ஒரு சீட்டுக்கவி கொடுத்துச் சேரனிடம் அனுப்பியிருப்பது திருவிளையாடலாயுள்ளது. ’பாவலர்க்கு உரிமையின் உதவி ஒளிதிகழ் சேரலன்’ என்றதனால் அவனது ஈகையும் புகழும் இனிது அறிய வந்தன. ’புகழுடையானை உகந்து முகந்து பரமன் புடை இருத்தும்’ என்பதை உலகம் அந்த வேந்தன்பால் உணர்ந்து மகிழ்ந்தது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

