கடிதம் நான்கு வரைவோலை
வீரன்
பூதலை நாட்டு சிறை ! காரிருள் வெளியே சூழ்ந்திருந்தாலும், சிறைச்சாலை உள்புறம் அங்கங்கு தீவர்த்தியின் பிழம்பினால் வெளிச்சம் வீசிக்கொண்டிருந்த்து.
சமதளத்தின் கீழ்புறம் படிக்கட்டுக்கள் வளைந்து வளைந்து கீழே இறங்கி ஒவ்வொரு தளமாய் சென்று கடைசி தளமாய் மண்ணுக்குள் அடி ஆழமாய் இருந்த தளத்தின் சிறையில் ஒரு வீரன் உறங்காமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
அவனின் உருவத்தை பார்த்தாலே மாபெரும் வீரன் என்று அடையாளம் காண முடியும், அவனின் தலை நிமிர்ந்த நடை எதற்கும் அஞ்சாதவன் என்பதை புரிந்து கொள்ள முடியும். அவனின் சிந்தனை மிகுந்த முகத்தை காணும்பொழுது இவன் இப்பொழுது ஏதோ பெருத்த சிந்தனையில் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.. அவ்வப்பொழுது கையை சொடக்கு போட்டு தலையை இங்கும் அங்கும் ஆட்டிக்கொண்டே நடப்பதை பார்த்தால் அவன் இன்று ஏதோ செய்து முடிக்கும் தீவிரத்தில் இருப்பான் போல் தெரிகிறது. நாம் சற்று நேரம் அவன் என்ன செய்ய போகிறான் என்பதை கவனிக்கலாம் வாருங்கள்.
ஏய் யார் அங்க்கே? அவனின் கம்பீர குரல்..
வெளியே நின்றிருந்த காவலாள் இவன் குரல் கேட்டு திடுக்கிட்டாலும் சற்று விரைப்புடன் வந்து நின்று ஏன் என்ன வேண்டும் ஏன் சத்தமிடுகிறாய்?
நான் உன் மன்னனுக்கு “வரைவோலை” ஒன்று எழுத வேண்டும், ஒரு எழுத்தாணியையும், சில பனை ஓலைகளையும் கொண்டு வா.
அதிகாரம் தூள் பறக்கிறது. நீ ஒரு கைதி என்பதை ஞாபகம் வைத்துக்கொள் காவலாளி எரிச்சலில் சொன்னான்.
ஹா..ஹா..பெரிஞ்சிரிப்பு..நான் கைதியா? ..நீ வெளியில் இருந்து பார்ப்பதால் இப்படி சொல்கிறாய். நான் இங்கிருந்து பார்க்கும்போது நீ உள்ளே இருப்பது போல்தான் தெரிகிறது.
இந்த வாய்க்கும் ஒன்றும் குறைச்சலில்லை. சற்று பொறு எடுத்து வருகிறேன். சொல்லிக்கொண்டே சென்றான் காவலாளி.
நான் உன் மன்னனுக்கு “ஓலை” எழுத வேண்டும். வெளியில் இருக்கும் தீபத்தை இந்த பக்கம் திருப்பி வைத்து விட்டு உனக்கு உறக்கம் வந்தால் போய் உறங்கு.
காவலாளி முறைத்துக்கொண்டே உன் வாய் கொழுப்பிற்கு அளவே இல்லை. முணுமுணுத்துக்கொண்டே சென்றான்.
என் பரம எதிரியான மன்னனே ! உறவுகளை ஏமாற்றியும், துரோகம் இழைத்தும் அரசாட்சியை தக்கவைத்துக்கொண்டிருப்பவனே, உண்மையான வாரிசை அரியணை ஏற்றி வைக்க வேண்டும் என்ற சபத்த்தை ஏற்று போராடிக்கொண்டிருக்கும் சுத்த வீரனான நான்
இந்த ஓலை ஏன் எழுதுகிறேன் என்று தெரியுமா?
வெறும் சூதால் என்னை பேச்சு வார்த்தைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்து விட்டாய், ஆனால் மூடனே ! என்னைப்போல் போர் வீரனுக்கு இந்த சிறைச்சாலை என்பது ஒரு படைக்கலம் என்பதை உனக்கு புரிய வைக்க வேண்டும்.
அதற்காக இந்த ஓலையை எழுதுகிறேன்.
கேள். இன்னும் சற்று நேரத்தில் இந்த சிறைச்சலையை விட்டு பறந்து போகப் போகிறேன். அப்படி போகும் போது இத்தனை கட்டுக்காவலை மீறி இவன் எப்படி தப்பித்தான் என்று எதிர்கால தலைமுறைக்கு தெரிய வேண்டாமா?
எதிர் காலத்தில் என்னைப்போல் ஏமாற்றப்பட்ட ஒரு வீரன், உன்னைப்போல் நய வஞ்சக அரசனிடம் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பான் என்பது தெரிய வேண்டும். அப்பொழுதுதான் உன்னைப்போல் இருப்பவர்களுக்கு புத்தியில் உறைக்கும்.
சுமார் இருபதாயிரம் காலாட்படை வீர்ர்களையும், இருபதாயிரம் குதிரைப்படை வீர்ர்களையும் வைத்துக்கொண்டு நான் பெரிய அரசன், வீரன் என்று சொல்லிக்கொள்ளலாம்.
என்னிடம் இருக்கும் ஐம்பது குதிரை வீர்ர்கள் போதும் உன் நாட்டுக்குள் புகுந்து உன் பாதுகாப்புக்குள் இருக்கும் இந்த சிறைச்சாலையில் இருந்து எப்படி தப்பிச்செல்கிறேன் என்பதை தெரிந்து கொள்.
இப்பொழுது உனக்கு ஓலை எழுதிக்கொண்டிருக்கும் நான் இன்னும் சற்று நேரத்தில் உறங்கப்போகிறேன். அதாவது. உன் காவலாளியிடம் தீபத்தை அணைக்கச் சொல்ல்ப் போகிறேன். அடுத்து நேராக என் படுக்கைக்கு அடியில் ஒரடி ஆள் நுழையும் துளை வழியாக நீ பாதாளத்தில் வைத்திருக்கிறாயே இந்த சிறைச்சாலை தளம். அதற்கும் கீழே ஓரு ஆள் படுத்துக்கொண்டே செல்லக்கூடிய வழி ஒன்று இருக்கிறது உனக்கு தெரியுமா?
உனக்கு இதுவெல்லாம் எங்கே தெரியப்போகிறது? என்னைப்போல நித்தம் ஒரு போர், கிடைக்கும் இடத்தில் தூக்கம், வசதிகள் என்பது எங்குள்ளோமோ அதைப்போல .இதுதான் இந்த வீரனின் சித்தாந்தம்.
புரிகிறதா? இந்த துளை வழியாக என் உடலை நுழைத்து சுமார் ஒரு காத தூரம்,
அதாவது இந்த சிறைச்சாலை முடியும் சுவர் வரை தரையை தேய்த்துக்கொண்டே செல்லப்போகிறேன். அதன் பின்னால் எனக்காக காத்திருக்கும் என் குதிரை மேல் ஏறி பறந்து செல்ல போகிறேன். இதனால் என் உடல் கல்லாலும் மண்ணாலும் உராயப்பட்டு காயங்களும்,
இரத்தப் பெருக்கு ஏற்படலாம். அதைப்பற்றி கவலைப்படவில்லை. காட்டில் எங்கள் வைத்தியன் இதற்கெல்லாம் பச்சிலை வைத்தியம் வைத்திருக்கிறான்.
இந்த துளை எப்படி வந்தது? அவ்வளவு மண்ணை எப்படி மறைத்தாய் என்று கேட்கப்போகிறாய்? அது மட்டுமல்ல என்னை பிடித்து இரண்டே நாட்கள்தான் ஆகிறது, அதற்குள் எப்படி இந்தளவுக்கு துளையிட முடியும் என்று உனக்கு சந்தேகம் இருக்கலாம்.
இது இன்று நேற்று போட்ட துளை அல்ல. நாங்கள் எப்பொழுது உண்மையான வாரிசை இந்த நாட்டு மன்ன்னாக்குகிறோம் என்று சபதம் ஏற்றோமே, அன்றே நீ எங்கெங்கெல்லாம் சிறைச்சாலை அமைத்திருக்கிருக்கிறாயோ அங்கெல்லாம் எங்கள் ஆட்கள் தப்பிச்செல்ல வழிகள் ஏற்படுத்தி விட்டார்கள். மீண்டும் துளையை அடைக்க முயற்சி செய்யலாம், நீ இந்த அரியணையில் இருந்து இறங்கும் வரை மீண்டும் துளை போட ஏற்பாடுகள் செய்யப்படும்..
இந்த ஓலை உன்னிடம் கிடைக்குபொழுது நீ எல்லா சிறைச்சாலைகளையும் சோதனை இடுவாய், ஆனால் துளைகள் வேண்டுமானால் அங்கிருக்கலாம். எங்கள் ஆட்கள், ஒருவர் கூட உள்ளே இருக்கமாட்டார்கள். நான் வெளியே வரும்போது, என்னைப்போல அனைத்து சிறைகளில் இருந்தும் எங்களின் வீர்ர்கள் வெளியே வருவர். உனக்கு இந்த தகவல் தெரியும்போது நாங்கள் உன் நாட்டை விட்டு பல காத தூரம் பறந்திருப்போம். அப்படி பறந்தாலும், மீண்டும் உன்னை சந்திக்க வருவோம், போர் செய்தியுடன்.
வருகிறேன் !
ஏய் காவலாளி வெளியில் இருக்கும் தீபத்தை அணைத்து விடு. பின்னர் இந்த ஓலையை வாங்கி சென்று நாளை காலையில் உன் மன்னனிடம் சேர்த்து விடு. நான் உறங்கப்போகிறேன்.
காவலாளி முணுமுணுத்துக்கொண்டே வந்தவன் தீபத்தை அணைத்து விட்டு பின்னர் இவனிடம் வந்து ஓலையை பெற்றுக் கொள்கிறான்..
ஓலையை பார்க்குமுன் தீபத்தை அணைத்து விட்ட அந்த புத்திசாலி ! பார்த்திருந்தால்?