எள்ளியென்றும் நோதக்க செய்தக்கால் பாவ விளைவாம் பழி - பாவம், தருமதீபிகை 725

நேரிசை வெண்பா

உள்ளம் சிறுகுவ உள்ளற்க, உள்ளிப்பின்
கள்ளம் புரிந்து கழியற்க; - எள்ளியென்றும்
நோவ உரையற்க; நோதக்க செய்தக்கால்
பாவ விளைவாம் பழி. 725

- பாவம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நீ சிறுமையுறும்படியான எண்ணங்களை உன் உள்ளத்தில் எண்ணாதே, கள்ளம் யாதும் புரியாதே; யாரையும் எள்ளி இகழ்ந்து பேசாதே; பிறர் அல்லலுறும்படி ஏதேனும் செய்தால் பழியும் பாவமும் விளைந்து உன்னை அழிதுயர் செய்யும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனத்தின் வழியே மனிதன் வெளி வருகின்றான். அவனுடைய வாழ்வின் நிலைகளுக்கெல்லாம் மூலகாரணமாயிருப்பது நினைப்பே. அது நல்ல நீர்மையோடு நிலவிவரின் அந்த மனிதன் எல்லா மேன்மைகளையும் எளிதே எய்தி ஒளிமிகுந்து உயர்ந்து திகழ்கின்றான்; அது பொல்லாததானால் அவன் புலையாயிழிந்து நிலை குலைந்து தாழ்கின்றான். தீய நினைவு தீயவனாக்கி விடுகிறது.

புண்ணியவான் என உயர்ந்து வாழ்வதும், பாவி என இழிந்து தாழ்வதும் எண்ணத்தால் இசைந்து வருதலால் அதன் உண்மை நிலையை நுண்மையாக உணர்ந்து கொள்ளலாம். மனத்தைச் சரியான முறையில் நெறியே பழகிவரின் அவன் பெரிய பாக்கியவான் ஆகின்றான். வனத்தில் போய்த் தனித்திருந்து அரிய தவத்தைச் செய்தாலும் மன நிலையை மாண்போடு பேணானாயின் அவன் மகிமையிழந்து போகின்றான்; அதனைப் புனித நிலையில் பேணி வருபவன் எங்கிருந்தாலும் அரிய மேன்மைகளை அடைந்து பெரிய இன்பங்களை நுகர்கின்றான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

இல்லின் இருந்தே ஐம்பொறியும்
..எல்லாம் நுகரும் காலத்தும்
செல்லும் வழிமெய்ம் மொழிமனத்தைச்
..செல்லா(து) அடக்கின் எழுபிறப்பும்
நல்ல பயனே யாம்ஏனை
..நல்ல வினைதீ வினைஆகா;
அல்லல் அறுக்கும் அறக்கடவுள்
..அடுக்கும் அமரர் உலகுறுமே. - விநாயக புராணம்

நல்ல நினைவுகளைப் பழகி மனத்தை நன்கு பண்படுத்தி வருபவன் அரிய பல நன்மைகளை உரிமையாய் அடைகிறான்; தரும தேவதையும் அவனிடம் பிரியம் மீதூர்ந்து அருள்புரிந்து வரும் என்பதை இங்கே அறிந்து பொருள்நிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்கிறோம்.

மனம் நெறிமுறையே மருவிவரின் தரும நலங்கள் தழைத்து வருகின்றன; நெறி கேடாய்ச் செல்லின் பாவத் தொடர்புகள் படர்ந்து கொள்கின்றன; அது படர்ந்தால் அவ்வுயிர் வாழ்வு துயர்வாழ்வாய் இழிந்து எவ்வழியும் அவலமாய் அழிந்து போகிறது. பழி பாவங்களும் அழி துயரங்களும் மனக் கேட்டால் வருதலால் அந்தக் கேடு எவ்வளவு கொடியது என்பது எளிதே தெளியலாம். நல்ல எண்ணங்களை எண்ணி வருகிற உள்ளம் செழிப்பும் வளர்ச்சியும் உரமும் உறுதியும் ஒளியும் பெற்று உயர்ந்து வருகிறது, கெட்ட நினைவுகளை மருவிவரின் சிறுமையும் தளர்ச்சியும் மருளும் மயக்கமும் மெலிவும் உடையதாய் நலிவடைந்து எவ்வழியும் இழிந்து படுகிறது.

இனிய அமுதம் உண்பது போல் புனித நினைவுகள் மனதிற்கு அதிசய ஆற்றல்களை அருளி வருகின்றன; பொல்லாத எண்ணங்கள் கொடிய நஞ்சுபோல் நெஞ்சை நிலைகுலைத்து நீசமாக்கி விடுகிறது. அதனால் நாசங்களே விளைகின்றன.

’உள்ளம் சிறுகுவ உள்ளற்க’ என்றது பொல்லாத நினைவுகள் உன் உள்ளத்தில் எழாதபடி போற்றி ஒழுகுக என்பதாம். இழிவான எண்ணங்கள் தோன்றிய பொழுதே உள்ளம் ஒளியிழந்து விடுகிறது; தெய்வத் திருவருளும் விலகிப் போய் பரிதாப நிலையில் அது பாழ்படுகிறது. பாழான மனம் பழி துயரமாகிறது.

நல்ல எண்ணத்தால் ஆத்தும சத்தி வளர்ந்து அற்புத சித்திகள் விளைகின்றன; கெட்ட எண்ணத்தால் நெஞ்சம் பாழாய் நீசமடைந்து ஈசன் அருளையிழந்து யாண்டும் அவலமாய் நாசமேயுறுகிறது.

உயிரின் இனிய துணையாயுள்ள உள்ளத்தைப் புனிதமாகப் போற்றி வருபவன் ஆற்றல் மிகுந்து பெரியவனாய் உயர்கின்றான்; அவ்வாறு போற்றாதவன் ஏற்றமிழந்து சிறியவனாய் இழிகின்றான். உயர்வும் இழிவும் நினைவின் நிலையால் நிகழுகின்றன

பொய், களவு, புலை முதலிய பாவங்கள் படிந்தால் தேவ கோபம் மூளுகிறது; அதனால் கொடிய துயரங்கள் மூண்டு நெடிய இழிவாய்ச் சீவன் அழிய நேர்கின்றது.

பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின்னருள்
புலப்பட அறிந்துநிலையாப்
புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மைபோல்
பொருளலாப் பொருளைநாடும்
வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன்
வினையினேன் என்றென்னைநீ
விட்டுவிட நினைவையேல் தட்டழிவ தல்லாது
வேறுகதி யேதுபுகலாய்
துய்யனே மெய்யனே உயிரினுக் குயிரான
துணைவனே யிணையொன்றிலாத்
துரியனே துரியமுங் காணா அதீதனே
சுருதிமுடி மீதிருந்த
ஐயனே அப்பனே எனும்அறிஞர் அறிவைவிட்
டகலாத கருணைவடிவே
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 8

- 8. ஆனந்தமானபரம், தாயுமானவர்

ஈசனது நிலையையும், நீசப்புலையையும் இப்பாசுரம் காட்டியுள்ளது. தாயுமானவர் புனித எண்ணங்களையுடைய புண்ணிய சீலராயிருந்தும் உலகில் நிகழுகின்ற பாவ நிலைகளைத் தன்மேல் இட்டுக்கொண்டு பரமனிடம் இவ்வாறு பரிந்து மன்றாடியிருக்கிறார். பரிசுத்த நீர்மைகளைப் பழகிப் பரமாத்தும சித்தியை அடைய வேண்டும் என்று அவர் தூண்டியிருப்பதை ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்கின்றோம். மனம் மொழி மெய்கள் பழுதுபடாதபடி பழகி நாளும் இனிது பேணி இன்பம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jan-21, 7:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே