மண்ணும் மக்களும் நூல் ஆசிரியர் முதுமுனைவர் வெ இறையன்பு, இஆப நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

மண்ணும் மக்களும்!

நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.!

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

நூல் வெளியீடு : கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராயர் நகர், சென்னை-600 017. பேச : 044-24314347 பக்கங்கள்: 272, விலை: ரூ.230.

*****
‘மண்ணும் மக்களும்’ நூலின் தலைப்பிற்கேற்றபடி இந்த மண் பற்றியும், மறக்க இயலாத மனிதர்கள் பற்றியும் 50 கட்டுரைகள் உள்ளன. நூல் முழுவதும் உண்மை, உண்மை தவிர வேறு புனைவு இல்லை என்பதால் படிக்கும் போது நூலோடு ஒன்றி விடுகிறோம். நூல் ஆசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் மிகுந்த நினைவாற்றல் மிக்கவர். சின்ன வயதில் குறிப்பேடு எதுவும் குறிக்காமல் மனக்குறிப்பேட்டில் குறித்து வைத்த மலரும் நினைவுகளை மலர்வித்து உள்ளார்.
படிக்கும் வாசகர்கள் மனதில் தன் பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள், உற்ற நண்பர்கள், குடும்ப நண்பர்கள், நல்லாசிரியர்கள், சந்தித்த மறக்க முடியாத மாமனிதர்கள் இப்படி அசைப்போட்டுப் பார்க்க உதவிய நூல் இது.
நூலில் உள்ள வரிகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் நிகழ்ந்த நிகழ்வுகளாக இருப்பதால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வும், நேரடியாக நாமே பார்ப்பது போன்ற உணர்வும் ஏற்படுகின்றது. நல்லவர் சிலர் மரணம் பற்றி படிக்கும்போது மரணத்தின் வலி உணர்ந்து, நம் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கின்றது என்பது உண்மை. புகழ்ச்சி அல்ல, நெகிழ்ச்சியான பல நிகழ்வுகள் நூலில் வருகின்றன. மலரும் நினைவுகளை மலர்விக்கும் உன்னத நூல் இது.
நூல் ஆசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் கூடுதல் தலைமைச் செயலர் என்ற மிக உயர்ந்த பதவியில் இருந்தபோதும் வாழ்வில் நடந்த பல உண்மைகளை அப்படியே பதிவு செய்து இருப்பது அவரது நேர்மையான உள்ளத்தை படம்பிடித்துக் காட்டுகின்றது. அவரது அப்பா தேயிலை விற்பனை பிரதிநிதி, அம்மா ஆசிரியர், நடுத்தரக்குடும்பம். ஒளிவு மறைவின்றி அனைத்தையும் நடந்தது நடந்தபடியே பதிவு செய்துள்ளார். அவருடைய எழுத்தில் உண்மை இருப்பதால் வாசகர்கள் மனமும் நூலோடு ஒன்றி விடுகின்றது.
நூலிலிருந்து பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு :
“உரலில் ஆட்டி மாவை அரைத்தால் மட்டுமே இட்லி, தோசை எங்களுக்குக் கிடைக்கும். குளிர்சாதனப்பெட்டி வீட்டில் இல்லாததால் முதல் நாள் மிஞ்சிய மாவோடு கோதுமை கலந்து மறுநாள் காலை தோசையாய் மலரும். சில நேரங்களில் வரமிளகாயும், வெங்காயமும் கலந்து தோசையின் புளிப்பு அகற்றப்படும்”.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிகழ்வு நடுத்தரக் குடும்பங்களில் நடந்த நிகழ்வு. நம் வீடுகளிலும் இந்த தோசை சாப்பிட்டு இருக்கிறோம். அந்த நினைவுகள் வந்து விடுகின்றன. அதுதான் நூலாசிரியரின் வெற்றி. உயர்ந்த பதவிக்கு வந்த பின்னர் பலர் பழைய வரலாற்றை எழுத மாட்டார்கள், மறந்து விடுவார்கள். சொல்லும் போது வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தேன் என கதை அளக்கும் மனிதர்கள் மலிந்துவிட்ட காலமிது.
வாடகை வீடு தொல்லை என்பதை உணர்ந்து சற்று தூரத்தில் குறைந்த விலைக்கு நிலம் வாங்கி வீடு கட்டி பணவசதி இல்லாத காரணத்தால் மண்ணால் வீடு கட்டி பின் பணம் வந்தபின் சிமிண்ட்டால் கட்டியது வரை, அக்கம் பக்கம் வீடு இல்லாது, யாராவது பக்கத்தில் வந்து வீடு கட்ட மாட்டார்களா? என்று ஏங்கி அப்படி யாராவது வந்தால் அவர்கள் வீடு கட்டிட பல்வேறு உதவிகள் செய்தது வரை அனைத்தையும் ஒன்று விடாமல் நூலில் எழுதி உள்ளார்.
“அந்த வீட்டில் நாங்கள் ஆடு வளர்த்தோம், மாடு வளர்த்தோம், நாய் வளர்த்தோம், பூனை வளர்த்தோம், சேர்ந்து வளர்ந்தால் நாயும் பூனையும் நட்பாய் இருக்கும் என்பது தெரிந்து அதிசயித்தோம். எதிரிகளாய இருக்கும் பிராணிகள் கூட ஒன்றாய் வளர்ந்தால் நட்புக் கொள்ளும். நெருக்கமாய் இருக்கும் மனிதர்கள் இருவர் அதிகம் ஒன்றாய் இருந்தால் வெட்டிக்கொள்வர்”.
விலங்குகளுக்கு உள்ள நல்ல குணம் மனிதர்களுக்கு இல்லை என்பதை நன்கு குறிப்பிட்டுள்ளார். நூலாசிரியர் முதலில் கவிஞர் என்பதால் கவித்துவமான சொற்கள் வந்து விழுந்துள்ளன. மறக்க முடியாத வைர வரிகளாகி விடுகின்றன.
50 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் எப்படி இருந்தது, சைவ உணவு விடுதி, முடி திருத்தும் கடை, அசைவ பிரியாணிக் கடை, வீடு கட்டும் தொழிலாளர்கள், குதிரைவண்டிக்காரர் இப்படி அனைத்தையும் பதிவு செய்துள்ளார். அன்றைய வாழ்வு, வசதிகள் இல்லாவிட்டாலும் இன்பமாக இருந்தது உண்மை.
“சில நல்ல மனிதர்கள் இன்னும் ஆரோக்கியத்துடன் உலகில் எந்த மூலையிலாவது வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புவது தான் ஆறுதலாக இருக்கிறது”.
ஒவ்வொரு கட்டுரையின் முடிவில் முத்தாய்ப்பான வைர வரிகளுடன் முடித்துள்ளார்.
நூலாசிரியர் அம்மாவழி தாத்தாவுடன் சில மாதம் வாழ்ந்துள்ளார். அவரைப் பற்றிய நினைவுகளைப் பதிவு செய்துள்ளார். நான் வளர்ந்ததும் என் அம்மாவழி தாத்தா அ.வ.செல்லையா அவர்களிடம் தான்.(அணுகுண்டு அய்யாவு அவர்களின் தம்பி) அவர் விடுதலைப் போராட்ட வீரர் எனக்கு வெளி உலகை கற்பித்த ஆசான். அவரைப் பற்றிய நினைவுகள் என் மனக்கண்ணில் வந்து போனது.
அப்பாவுடன் படித்தவருடன் ஏற்பட்ட குடும்ப நட்பை மிக அழகாக விவரித்து உள்ளார். இந்த நட்பு மூன்று தலைமுறைகளாகத் தொடர்கின்றது. நூலாசிரியர் தந்தையின் நண்பருடன் தொடங்கிய நட்பு, அவரது மகன் அவர்கள் பண்ணைக்குச் சென்று, வாத்துகளுடன் இன்று விளையாடியது வரை எழுதி உள்ளார்.
இந்த நிகழ்வுகளை குறும்படங்களாக எடுக்கலாம். மறக்க முடியாத நிகழ்வுகள். இதில் வரும் ஒவ்வொரு மனிதர்களும் மாமனிதர்கள். நன்றாக வாழ்ந்து பின்னர் நொடித்த குடும்பங்கள் பற்றியும், முதலில் கஷ்டப்பட்டு உழைத்து பின்னர் நல்ல நிலைக்கு உயர்ந்த குடும்பங்கள் பற்றியும் பல்வேறு நிகழ்வுகள் உள்ளன. படித்து முடித்தவுடன் நூலில் வந்த மனிதர்கள் நம் மனக்கண்ணில் வந்து விடுகின்றனர். ‘மண்ணும் மக்களும்’ மறக்க முடியாத உன்னத நூல், பாராட்டுகள்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (6-Jan-21, 8:15 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 114

சிறந்த கட்டுரைகள்

மேலே