புண்ணியவான் என்னும் புகழே ஒருவனுக்குக் கண்ணியம் ஆன கதி - புண்ணியம், தருமதீபிகை 741

நேரிசை வெண்பா

புண்ணியவான் என்னும் புகழே ஒருவனுக்குக்
கண்ணியம் ஆன கதியாகும் - எண்ணியதைப்
பெற்றான் பெருமகிமை பெற்றான் பெறாதவன்
அற்றான் அவமே அழிந்து. 741

- புண்ணியம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

புண்ணியவான் என்னும் புகழ் ஒருவனுக்கு அமையுமாயின் அது கண்ணியமான கதியாம்; தலைமையான அந்த நிலைமையைப் பெற்றவன் அரிய பல மகிமைகளை அடைந்தான்; அதனைப் பெறாதவன் பிறந்தும் பிறவாதவனாய் அழிந்தான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலக வாழ்வில் மனிதன் பலவகை நிலையால் நிலவி வருகிறான். கருமச் சார்புகளின்படியே காட்சி புரிகிறான். ஆட்சி முறைசெய்பவன் அரசன், நீதிமுறை செய்பவன் நியாயாதிபதி; பொருதிறலுடையவன் போர்வீரன், இரவலர்க்கு ஈபவன் வள்ளல்; பொருள் வளமுடையவன் செல்வன், கல்வியறிவுடையவன் புலவன்; காவியங்கள் செய்பவன் கவிஞன், ஓவியங்கள் புனைபவன் ஓவியன். சீவிய நிலைமைகள் சிந்திக்க வுரியன.

இன்னவாறு செயல் இயல்புகளின் சார்பின் வழியே பேரும் சீரும் பெருகி வந்துள்ளன. புனித நினைவுகள் தோய்ந்து இனிய நீர்மைகள் வாய்ந்துவரின் அந்த மனிதன் தனிமகிமையில் தழைத்துத் தலைமையான நிலைமையில் இனிது நிலவுகிறான்.

எண்ணம் தூய்மை சுரந்து எவ்வண்ணமும் இனியனாய் இயங்கி வருபவன் புண்ணியவானாய்ப் பொலிந்து வருகிறான். புண்ணியம் மிகுந்தபொழுது மனிதத்தன்மை கழிந்து அவன் தேவனாய்ச் சிறந்து திகழ்கின்றான்.

சீவ கோடிகளுள் புண்ணியங்களையுடையவர் தேவர் ஆகின்றார்; ஆகவே அவர் திவ்விய போகங்களை அனுபவிக்க நேர்கின்றார். தேவபோகம் என்னும் வழக்கு அதன் சிறப்பை விளக்கியுளது.

துறக்கம், சுவர்க்கம், புண்ணிய லோகம் எனத் தேவர்கள் வாசம்செய்யும் இடங்கள் புகழ்ந்து பேசப்பட்டுள்ளன. அரிய சுகபோகங்கள் நிறைந்த இனிய தானம் என்பதை உரிய நாமங்கள் உணர்த்தி நின்றன. அந்த அதிசய இன்ப நிலையம் புண்ணியம் உடையார்க்குத் தனி உரிமையாய் அமைந்துள்ளது.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்
..என்னுமீ(து) அருமறைப் பொருளே;
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி
..மாதவம் அறத்தொடும் வளர்த்தார்?
என்அருங் குணத்தின் அவனினி(து) இருந்திவ்
..ஏழுல காளிடம் என்றால்.
ஒண்ணுமோ. இதனின் வேறொரு போகம்
..உறைவிடம் உண்டென உரைத்தல்? 5 நகரப் படலம், பால காண்டம், இராமாயணம்

அயோத்தி நகரின் சிறப்பை இது குறித்துள்ளது. போக பூமியான ஒரு புண்ணிய உலகம் என்றே அதனைச் சொல்ல வேண்டும் எனக் கருதிய கவிஞர் வாத முறையில் ஏதுக்களை விரித்து இவ்வாறு இனிய சுவை கனியக் கூறியிருக்கிறார்.

புண்ணியம் புரிந்தவர் இனிது வாழும் இடம் சுவர்க்கம் எனப்படும்; அத்தகைய புண்ணியவான்கள் யாவரும் ஆவலோடு எண்ணிப் போற்றுகின்ற இராமன் எண்ணில் காலம் தங்கியிருந்து ஆட்சி புரிந்த இடமாதலால் அயோத்தி துறக்கத்தினும் மாட்சி மிகவுடையது என அதன் மகிமையைப் புகழ்ந்திருக்கிறார். காவிய நாயகன் சீவியம் கருதியுணர வந்தது.

இராமன் புண்ணிய மூர்த்தியாதலால் அவன் இருந்த ஊர் புண்ணிய லோகமாய்ப் பொலிந்து விளங்கியது, புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்றது இங்கே எண்ணி உணரவுரியது. சுவர்க்கத்தின் நிலை, புண்ணியத்தின் பயன், அதனை உடையவர் அடைவது முதலியன முறையே அறிய வந்தன.

புண்ணியம் உடையவர் இன்ப உலகில் புகுகின்றார்.
பாவம் புரிந்தவர் துன்ப நிரயத்தில் விழுகின்றார்.
இந்த இரண்டும் கலந்தவர் கரும பூமிக்கு வருகின்றார்.

இயற்கை நியமங்களின்படியே சீவகோடிகள் யாண்டும் இயங்கி வருகின்றன. வரவு செலவுகள் எல்லாவற்றிற்கும் மனிதன் தலைவனாய் நிற்கின்றான்; வினையின் வழியே விளங்குகிறான்.

ஒருவன் செய்கின்ற கருமம் தருமங்களோடு மருவிவரின் இருமை இன்பங்களும் அவனுக்கு உரிமையாய் அமைகின்றன.

நேரிசை வெண்பா

ஈனுலகத் தாயின் இசைபெறூஉம் அஃதிறந்
தேனுலகத் தாயின் இனிததூஉம் - தானொருவன்
நாள்வாயும் நல்லறஞ் செய்வாற் கிரண்டுலகும்
வேள்வாய் கவட்டை நெறி. 6 பழமொழி நானூறு

தருமவான் இம்மையில் புகழையும், மறுமையில் இன்பத்தையும் ஒருங்கே அடைந்து கொள்ளுகின்றான் என இது குறித்துள்ளது. இருமையும் இன்பமாய்த் தருமம் அருளி வருகிறது.

அறம், தருமம், புண்ணியம் என்னும் பதங்கள் ஒரு பொருளையே குறித்து வரினும் தம்முள் நுண்மையான வேறுபாடுகள் உடையன. நன்மை தீமைகளைப் பகுத்து விதி விலக்குகளை வரையறுத்து உரைப்பது அறம் என வந்தது. அரிய பல நன்மைகளை உரிமையாய் மருவி இருப்பது தருமம் என நேர்ந்தது. அறத்தின் விளைவுகளான இன்பங்கள் பழுத்து இனிமை சுரந்து நிற்பது புண்ணியம் என அமைந்தது.

புண்ணியம் என்பது வெளியிலிருந்து வருவதன்று. மனிதனுடைய நல்ல நீர்மைகளிலிருந்தே அது விளைந்து வருகிறது. மனம் புனிதமாய் இனிய கருமங்களைச் செய்துவரின் அது புண்ணியமாய்ப் பொலிந்து வருகிறது.

"மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அறம்” (குறள்,34)

அறம் இன்னது என்பதை வள்ளுவர் இவ்வாறு செவ்வையாக விளக்கியிருக்கிறார். மனம் மாசு நீங்கிய போது தேசு பெறுகிறது. தூய உள்ளம் உடைய அவனது சொல் செயல் எல்லாம் நல்லனவாய் வந்து புண்ணியம் விளைந்து மிளிர்கிறது. அதனால் இன்ப நலன்கள் யாவும் எளிதே வருகின்றன.

'புண்ணியம் பயக்கின்றுழி அரியது எப்பொருளே?’ (இராமா, கவந்த, 41)

இந்த அருமை வாசகம் அரிய பல மருமங்களைத் துலக்கியுள்ளது. அறிவின் சுவையைக் கருதி நுகர வேண்டும். புண்ணியம் பலன் கொடுக்க நேர்ந்தால் எண்ணரிய அதிசய இன்பங்கள் எதிரே பெருகி வரும் என்பது இதனால் நன்கு தெரிய வந்தது.

இருதயம் பரிசுத்தம் ஆய போது மனிதன் தெய்வத் தன்மையை அடைகிறான்; அரிய சுவர்க்க போகங்கள் அவனுக்குத் தனி உரிமைகளாய் இனிது அமைகின்றன.

“When we shall reverence heart, not brain, Then Eden will be man’s domain.” (New Eden)

'நாம் இதயத்தைப் புனிதமாக்கி விழுமிய நிலையில் ஒழுகிவரின் இன்பவுலகமாகிய சுவர்க்கம் மனிதனுடைய தனி இராச்சியமாயிருக்கும்’ என்னும் இது இங்கே அறிய வுரியது.

புண்ணியமே கண்ணியமான கதி என்றது உயர்கதி எய்தி உய்யவுரிய மனிதன் விரைந்து உணர்ந்து கொள்ள வேண்டிய உறுதிநலனை உணர்த்தி நின்றது. உணர்வு தெளிந்து உயர்வு பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jan-21, 8:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 79

மேலே