தண்ணளியோடு தான்செய்த நல்வினை நல்லான் எனச்செய்யும் - புண்ணியம், தருமதீபிகை 742

நேரிசை வெண்பா

தண்ணளியோ(டு) எவ்வுயிர்க்கும் தான்செய்த நல்வினையே
புண்ணியமாம் பேரோடு போந்துநின்(று) - எண்ணியன
எல்லாம் எளிதாய் இனிதருளி எஞ்ஞான்றும்
நல்லான் எனச்செய்யும் நன்கு. 742

- புண்ணியம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

எவ்வுயிர்க்கும் இரங்கி அருள்புரிந்து ஒழுகும் இனிய நீர்மையே புண்ணியம் எனப் பொலிந்து நின்று எண்ணிய இன்ப நலங்களை எல்லாம் இனிதருளி அரிய மேன்மைகளை உரிமையோடு புரியும்; அதனை மருவி மகிழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அன்பு, அருள் முதலிய பண்பாடுகள் அமைந்தபொழுது அந்த மனிதன் புனிதனாய்த் தனிநிலையில் உயர்ந்து திகழ்கிறான். உள்ளம் நல்வழியில் உருகிவரின் உயர்நிலைகள் வெள்ளம் என வெளி வருகின்றன. மனத்தின் தகுதி அளவே மனிதனுக்கு மகிமைகள் அமைகின்றன. அதன்வழியே யாவும் விளைகின்றன.

இனிய நீர்மைகளுள் சீவ தயை தனிநிலையில் உயர்ந்துள்ளது. பிற உயிர்களுக்கு இரங்கி அருளின் அவன் ஒரு பெரிய மகானாய் விளங்கி வருகிறான். பரிபக்குவம் அடைந்து படியேறிய சீவனுக்கே அருளியல்பு தனியுரிமையாய் அமைந்து இனிமை சுரந்து மிளிர்கிறது. தண்ணளியின் அளவு கொண்டே புண்ணியவான் என மனிதனை மேலோர் எண்ணியுள்ளனர்.

மன்னுயிர்க்கு இரங்கி இன்னருள் புரிபவன் தன்னுயிர்க்குப் பேரின்ப நிலையைச் செய்தவன் ஆகின்றான். வெளியே செய்கிற தண்ணளி உள்ளே புண்ணிய ஒளியாய்ப் பொங்கி வருவதால் அவன் எண்ணிய இன்ப நலங்கள் எல்லாம் எளிதே எதிர் வருகின்றன. அளியால் விழுமிய நிலைகள் விரிகின்றன.

’அளி புரிய ஒளி விரியும்’ என்னும் பழமொழியால் அருளாளர்க்கு உளவாகும் இன்பமும் தேசும் இனிது தெளிவாம்.

மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வாற்(கு) இல்என்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. 244 அருளுடைமை

பிற உயிர்களைப் பேணியொழுகும் கருணையாளர்க்கு யாதொரு அல்லலும் நேராது; எவ்வழியும் நல்ல இன்பங்களே உளவாகும் என வள்ளுவர் இவ்வாறு கூறியிருக்கிறார். அருளியல்பு எவ்வுயிர்க்கும் இதம் புரிந்து வருதலால் அதனையுடையவர் யாதும் துன்பம் காணாமல் யாண்டும் இன்பமே கண்டு வருகின்றார்.

எந்த உயிர்க்கும் இடர் நினையாத சிந்தை ஒருவனுக்கு அமையுமாயின் அந்தமில்லாத இன்பநிலை அவனுக்குச் சொந்தமாய் அமைகிறது. இன்னாமை ஒழியவே இனிமைகள் விளைகின்றன.

ஒருவனைத் தருமவானாக்கி இருமையும் இன்பம் தரவல்ல மருமம் கருணையினிடத்தே கனிந்திருக்கிறது; இதனை உறுதியாயுணர்ந்து உரிமை செய்து கொண்டவன் எவ்வழியும் திவ்விய மகிமைகளை எய்திச் செவ்விய பேரின்பங்களை நுகர்கின்றான்.

அருள் மருவிவர அறம்பெருகி, அருளாளன் புண்ணியவானாய் ஒளிமிகுந்து எண்ணிய இன்பங்களை எய்தி மகிழ்கின்றான். இனிய சுகங்களுக்கு அருள் மூலமாயது.

ஒருவன் செய்கிற கருமங்கள் நன்மை தோய்ந்துவரின் அது நல்வினையாய் அவனுக்கு நலம் பல தருகிறது. இனிய செயல்களிலிருந்து அறம் விளைந்து வருதலால் அதனையுடையவன் அரிய பல மேன்மைகளை அடைந்து கொள்கிறான்.

நேரிசை வெண்பா

தனக்குத் துணையாகித் தன்னை விளக்கி
இனத்துள் இறைமையுஞ் செய்து-- மனக்கினிய
போகந் தருதலால் பொன்னே! அறத்துணையோ(டு)
ஏகமாம் நண்பொன்றும் இல். 13 அறநெறிச்சாரம்

அறம் மனிதனுக்குச் செய்யும் மகிமைகளை இது விளக்கியுளது. எவ்வழியும் உறுதித் துணையாய் நின்று உதவிபுரியும்; சமுதாயத்துள் தலைவனாக உயர்த்திப் பெருமைப்படுத்தும்; இனிய இன்ப போகங்களை நல்கும்; ஆதலால் அறம் போல் உரிமையான நல்ல துணை யாண்டும் இல்லை எனச் சொல்லியிருக்கும் இதனை உள்ளி உணர்ந்து கொள்ள வேண்டும்.

நேரிசை வெண்பா

பலநாளும் ஆற்றா ரெனினும் அறத்தைச்
சிலநாள் சிறந்தவற்றாற் செய்க - கலைதாங்கி
நைவது போலும் நுசுப்பினாய் நல்லறம்
செய்வது செய்யாது கேள். 134 பழமொழி நானூறு

எந்த வழியிலேனும் கொஞ்சமாவது அறத்தைச் செய்து கொள்க; அதனால் எல்லா இன்ப நலங்களும் உளவாம்; பெற்ற தாயை விட உன்னையது பேணியருளும்; அதுபோல் யாரும் உனக்கு இதம் செய்ய முடியாது என்னும் இது இங்கே அறியவுரியது. அறம் அமுத சுரபியாய் நின்று யாவும் தருகின்றது.

நிறைந்த செல்வங்களும் சிறந்த சுகபோகங்களும் வேண்டும் என்றே மனிதன் யாண்டும் விரும்புகிறான்; அந்த விருப்பம் விரைந்து நிறைவேற வேண்டுமானால் அவன் புண்ணியத்தை விழைந்து செய்து கொள்ள வேண்டும். எண்ணிய இன்ப நலங்களையெல்லாம் இனிது உதவ வல்லது புண்ணியமேயாதலால் புனிதமான தெய்வத்திரு என அமரரும் அதனை எண்ணி வியந்துள்ளனர். தெய்வ பதவியை அது இங்கே செய்தருளுகிறது.

எளிதென இகழா(து) அரிதென உரையாது
நுமக்குநீர் நல்குதிர் ஆயின் மனத்திடை
நினைப்பினும் பிறக்கும் மொழியினும் வளரும்
தொழிற்படின் சினைவிடூஉப் பயக்கும் உணர்த்தின்
இவணும் உம்பரும் துணையே; அதனால்
துறைதொறும் துறைதொறும் நோக்கி
அறமே நிறுத்துமின் அறிந்திசி னோரே. - ஆசிரியமாலை

கருதியன எல்லாம் தருமம் தரும்; இருமையும் இனிய துணையாம்; எவ்வழியும் செவ்விய இன்பங்களை நல்கியருளும்; திவ்விய நிலையமான அதை உங்கள் உயிர்க்குயர்ந்த ஊதியமாக உவந்து செய்து கொள்ளுங்கள் என மனித சமுதாயத்தை நோக்கி உரிமையோடு போதித்துள்ள இதை ஊன்றி உணர்ந்து கொண்டு தருமத்தை உரிமையாய் மருவித் தருமவானாய் உயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jan-21, 2:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே