பாராளும் மன்னன் வானுலகம் எங்குமே இன்னொளி செய்வன் - அரசு, தருமதீபிகை 752

நேரிசை வெண்பா

நீராழி சூழும் நிலவலயத்(து) எல்லையெலாம்
ஓராழித் தேரோன் ஒளிர்தல்போல் - பாராளும்
மன்னன் புகழினால் வானுலகம் எங்குமே
இன்னொளி செய்வன் இருந்து. 752

- அரசு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் சூரியன் தோன்றி ஒளி செய்கின்றான்; அதுபோல் நெறியுடைய அரசன் தனது அரிய புகழை வெளியெங்கும் வீசி விண்ணும் மண்ணும் விரிந்து விளங்குவான்; இவனது ஒளியும் அளியும் உயிர்கள் நலமுற உதவி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

வரிசையும் மரபும் வகைமையும் தகைமையும் கருதி அரசனை ஆதவனோடு நேர் வைத்தது. அவனுடைய ஒளியால் உலகம் விழித்துத் தொழில் செய்து வருகிறது; இவனுடைய அளியால் உயிர்கள் களித்து எழில் செய்து வாழ்கிறது. அவன் தேர் ஏறி உலாவுகின்றான்; இவனும் தேரில் அமர்ந்து சீரில் திகழ்கின்றான்.

நீயே அலங்குளைப் பரீஇ யிவுளிப்
பொலந்தேர் மிசைப்பொலிவு தோன்றி
மாக்கடல் நிவந்தெ ழுதரும்
செஞ்ஞா யிற்றுக் கவினை. (புறம், 4)

சூரியன் போலத் தேரில் எழில்மிகுந்து விளங்கும் தேசாதிபதியே! என்று சோழ மன்னனை நோக்கிப் பாணர் இவ்வாறு பாடியிருக்கிறார். கதிரின் உவமைக் காட்சிகள் பல காண வந்தது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

விரிஇருட் பகையை ஓட்டி, திசைகளை வென்று, மேல்நின்(று),
ஒருதனித் திகிரி உந்தி, உயர்புகழ் நிறுவி, நாளும்
இருநிலத்(து) எவர்க்கும் உள்ளத்(து) இருந்தருள் புரிந்து வீந்த
செருவலி வீரன் என்னச் செங்கதிர்ச் செல்வன் சென்றான். 47 கங்கைப் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்

பகை இருளை ஓட்டித் திசைகள் தோறும் தனது ஆணையைச் செலுத்திப் புகழொளி பரப்பி உலக உயிர்கள் உவந்து வாழ எவ்வழியும் அருள்புரிந்து ஆதரித்து வந்த தசரத மன்னன் போல் சூரியன் அன்று மறைந்தான் என வரைந்து கூறியிருக்கும் இந்த அருமைப் பாசுரம் உணர்ந்து கொள்ளவுரியது. உலக ஒளியாய் அரசு நிலவியுள்ளது.

சீர்மை நீர்மைகளில் சிறந்து மன்னன் மாநிலத்தை இனிது காத்து வருதலால் மாந்தர் அவனை இன்னுயிர் போல் எண்ணி மகிழ்ந்து எவ்வழியும் கண்ணியமாய்ப் போற்றிவர நேர்ந்தார். அவனுக்கு வாய்ந்த பெயர்கள் யாவும் காரணங்கள் தோய்ந்து பூரண வுரிமைகள் பொருந்தி வந்திருக்கின்றன.

அரசன் என்னும் பேர் இனிமை செய்பவன் என்னும் பொருளையுடையது. ரசம் - இனிமை. அதனை இயல்பாக மருவியுள்ளவன் அரசன் எனவும் இராசன் எனவும் நேர்ந்தான்.

மன்னன் - மாண்புடையவன், வேந்தன் - மேலான ஆணையை விதிப்பவன்,
நிருபன் - நரர்களின் தலைவன், புரவலன் - புரத்தலில் வல்லவன்.
பூ பாலன் - பூமியைக் காப்பவன், ஏந்தல் - எவரினும் உயர்ந்தவன்.
பெருமான் - அரிய பெருமையாளன்; நரபதி . மனிதரின் அதிபதி.
குரிசில் - கருணை தோய்ந்த கவுரவம் நிறைந்தவன்.
அண்ணல் - அணுகியவரை ஆதரிப்பவன்; சக்கிரி - தக்க ஆணை புரிபவன்.
பார்த்திபன் - உலகை ஆள்பவன்; கோ - தலைமையான நிலையினன்.
பொருநன் - பொருதிறல் வாய்ந்தவன்; கொற்றவன் - வெற்றியை விழைபவன்,
காவலன் - யாவரையும் காப்பவன்; தலைவன் - உலகில் உயர்ந்தவன்.
இறைவன் - எங்கும் திறை பெறுபவன்; மகிபன் - மகியாளும் மகிமை வாய்ந்தவன்.

இன்னவாறு மன்னிய காரணங்களோடு மன்னன் மாணபமைந்து வந்துள்ளான். உற்ற இயல்புக்குத் தக்கபடி உரிமை தோய்ந்து உறுதி சூழ்ந்து உயர்ந்து நிற்கின்றான்; காரியம் செய்து வருமளவு அரசன் சீரியனாய்ச் சிறந்து திகழ்கின்றான்.

இந்நாட்டு ஆட்சிமுறை மிக்க மாட்சிமையுடையது; எந்நாடும் வியந்து புகழ முன்னாள் விளங்கி நின்றது. குடிசனங்கள் மன அமைதியோடு எவ்வழியும் இனிது வாழ்வதையே புனிதமான தனது வாழ்வின் பயனாக அரசன் கருதி வந்தான். யாதொரு குறையும் யாரிடமும் நேராதபடி முறைசெய்து வந்தமையால் நாடு பீடும், பெருமையும் யாண்டும் பெருகி வந்தது.

யாருக்காவது. ஏதேனும் இடையூறு நேர்ந்தால் அதனை விரைவில் வந்து எளிதே தெரிவிக்கும்படி சோழ மன்னன் ஓர் வழி கோலி வைத்திருந்தான். தனது அரண்மனை எதிரே ஒரு மண்டபம் அமைத்து அதன் நடுவே பெரிய மணி ஒன்றைத் தொங்க விட்டிருந்தான். குறைபாடு நேர்ந்தவர் அந்த மணியை அடித்தால் அரசன் விரைந்து அவரை அழைத்து வேண்டியதைச் செய்தருளுவான். அவ்வாறு அமைத்த மணி நெடுங்காலமாய் யாதும் அசையாதிருந்தது. தேசத்தில் யாருக்கும் யாதொரு குறையும் இல்லை என்பதை அந்த அசையாமணி இசையாய் அறிவித்து அரசனுடைய நீதிமுறையைத் துலக்கி நின்றது.

ஆடுங் கடைமணி நாவசை யாமல் அகிலமெங்கும்
நீடுங் குடையைத் தரித்தபிரான்.

என உலகம் அம்மன்னனது ஆட்சியின் மாட்சியைப் போற்றி வந்தது. அவ்வாறு வருங்கால் ஒருநாள் அந்த மணி அதிசயமாய் ஒலித்தது; அரசன் விரைந்து வந்து பார்த்தான்; ஒரு பசு மணி அருகே நின்று தன் கொம்பால் அசைப்பதைக் கண்டு வியந்து நெருங்கி விழைந்து நோக்கினான். கண்ணீர் பெருகி ஓட அப் பசு கதறி நின்றது. அரசன் மறுகி உருகினான், யாது நேர்ந்தது? என அயலே நின்றவரை ஆவலோடு விசாரித்தான்; அரசனுடைய அருமைத் திருமகன் தேர் ஊர்ந்து வீதியில் செல்லுங்கால் அந்தப் பசுவினுடைய இளங்கன்று பாய்ந்து வந்து தேரில் வீழ்ந்து இறந்து போயது என்று உரைத்தார். அரசன் பரிந்து வருந்தினான்; தனது ஆட்சியில் கேடு நேர்ந்ததே என்று நெஞ்சம் நெடிது கலங்கினான், மந்திரிகள் வந்து மன்னனைத் தேற்றி வேத விதிப்படி அதற்கு ஓர் பரிகாரத்தைச் செய்து விடலாம் என்று உரைத்தார். மன்னன் மறுத்தான்: ’அந்தப் பசு அடைந்த துன்பத்தை நானும் அடைய வேண்டும்' என்று துணிந்து மொழிந்தான். மகனை அழைத்தான்; அவன் வந்து வணங்கினான்; அக்கன்று இறந்த வீதியில் அவனைக் கிடத்தினான்; தானே தேரைச் செலுத்தினான்; ஊரார் ஓலமிட்டு அழுதார்; தெய்வத் திருவருளால் இறந்த கன்று எழுந்தது, மடிந்த மகனும் மகிழ்ந்து நின்றான். விதியின் விளைவுகள் வியந்து காண நேர்ந்தன.

தரவு கொச்சகக் கலிப்பா

ஒருமைந்தன் தன்குலத்துக்(கு) உள்ளானென் பதுமுணரான்
தருமம்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன்
மருமம்தன் தேராழி உறஊர்ந்தான் மனுவேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோமற்(று) எளிதோதான். 1

அந்நிலையே உயிர்பிரிந்த ஆன்கன்றும் அவ்வரசன்
மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடனெழலும்
இன்னபரி(சு) ஆனானென்(று) அறிந்திலன்வேந் தனும்யார்க்கும்
முன்னவனே முன்நின்றால் முடியாத பொருளுளதோ? 2

அடிபணிந்த திருமகனை ஆகமுற எடுத்தணைத்து
நெடிதுமகிழ்ந்(து) அருந்துயரம் நீங்கினான் நிலவேந்தன்;
மடிசுரந்து பொழிதீம்பால் வருங்கன்று மகிழ்ந்துண்டு
படிநனைய வரும்பசுவும் பருவரல்நீங் கியதன்றே. 3 - பெரியபுராணம்

இங்கே நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகள் மிகுந்த வியப்புகளை விளைத்து நிற்கின்றன. அரசனுடைய ஆட்சி முறையும் தரும நீதியும் கரும வீரமும் உலக உள்ளங்களை உருக்கியுள்ளன.

இப்படி ஒரு அரசன் இருந்தால் அந்த நாட்டு மக்கள் அவனை எப்படிப் போற்றி நிற்பர்! உலகம் முழுவதும் உழுவலன்போடு அவனை உவந்து கொண்டாடுமே யன்றி அயலே மயலாய் வேறு ஏதேனும் எண்ணுமா? இத்தகைய உத்தம அரசர்கள் மறைந்து போனமையால் வேறு சில தலைமைகள் கிளைத்து மாறுபாடுகளை விளைத்து மீறி வர நேர்ந்தன.

குடிஅரசு, சனநாயகம், சமுதாய ஆட்சி எனச் சில வகையான நிலைகள் கால வேற்றுமைகளால் படி படிய வந்தன. எது எப்படி வந்தாலும் அது ஒரு தலைவனைத் தாங்கிக் கொண்டே நிற்கிறது. எவனும் அந்த நிலைக்கு வந்து சேரலாம். வந்தவனுடைய நிலைமைக்குக் தக்கபடி தலைமையும் நிலைத்து வருகிறது. பரம்பரையாய் உரம் பெற்று வராமல் புதுபுதிதாய் வரம் பெற்று வருதலால் வந்த தலைமை எந்த வகையிலும் உண்மையான கம்பீரமில்லாமல் சிந்தை தளர்ந்து தியங்கியிருந்து காலம் கழிந்தவுடன் சாலவும் அயர்ந்து கோலம் ஒழிந்து போகிறது.

முடி அரசு என்னும் மொழி விழுமிய பொருளுடையது. அரச வாசனை தோய்ந்து உரிமையோடு தொடர்ந்து வருதலால் தேச மக்கள் அவன் பால் பேரன்பு பூண்டு பெருகி வருகின்றனர். அவனும் தன் ஆவிபோல் யாவரையும் ஆதரவோடு பேணி வருகின்றான். பாதுகாப்பு பண்பு படிந்து பயன் சுரந்து வருகிறது.

கலி விருத்தம்
(மா கூவிளம் மா கூவிளம்)

வைய மின்புறின் 5மன்ன னின்புறும்
வெய்ய 6தொன்றுறிற் றானும் வெய்துறுஞ்
செய்ய கோலினாய் செப்ப லாவதன்(று)
ஐய தாரினா னருளின் வண்ணமே. 26

வீவில் வீங்குநீர் வேலி வாழ்பவர்க்
காவி யாபவ ரரச ராதலாற்
காவ லோவுங்கொ லென்று 1கண்படான்
மாவ றானையம் மன்னர் மன்னனே. 27 சீயவதைச் சருக்கம், சூளாமணி

பயாபதி என்னும் அரசனைக் குறித்து இவை வந்திருக்கின்றன. மாந்தரை அவன் பேணி வந்திருக்கும் நீர்மையை உணர்ந்து சீர்மையை வியந்து சிந்தை உவந்து கொள்கிறோம்.

தன் ஆட்சியில் இருந்த மக்களை மாத்திரமல்ல, மிருகங்களையும் பறவைகளையும் அரசர் பரிவோடு பாதுகாத்து வந்துள்ளனர் என்பதை முன்னம் குறித்த மன்னவன் சரிதம் நன்கு விளக்கியுள்ளது. நீதிமுறை நிறைபெருந் தவமாய் நிலவுகின்றது.

வாயில் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன். - சிலப்பதிகாரம், 20

சோழ மன்னன் புரிந்த அரிய நீதியைப் பாண்டிய மன்னனுக்குக் கண்ணகி இப்படி எடுத்துக் காட்டியிருக்கிறாள். இந்த அரசனது நீதி நிலையைச் சோதிக்க ஈசனும் எமனும் பசுவும் கன்றுமாய் இசைந்து அதிசய நிலையில் அங்கே வந்துள்ளனர். அந்த வுண்மையை அயலே வருவதில் காணலாம்.

ஈசன் பசுவாகி ஏமனொரு கன்றாகி
வீசுபுகழ் ஆரூரின் வீதிவந்தார் அம்மானை;
வீசுபுகழ் ஆரூரின் வீதிவந்தார் ஆமாயின்
காசளவு பாலும் கறவாதோ அம்மானை?
கன்றையுதை காலி கறக்குமோ அம்மானை. - பசுபதி

ஈசன் பசு; ஏமன் கன்று; கன்றையுடைய பசு நிறையப் பால் கறக்குமே அவ்வாறு அது கறந்ததோ? இல்லை; ஏன்? கன்றை உதை காலி கறக்குமோ? என்று பதில் வந்துள்ளது. பொருளை உணர்ந்து இதன் சுவையை நுகர்ந்து கொள்ள வேண்டும். கவியின் சுவையை நுகர்வார் புவியில் அருகியுள்ளனரே! என்று ஒரு கவி மறுகியுள்ளார். சமனை உதைத்த சிவனே இவனது அரச நீதியை உலகம் அறியச் செய்ய அவ்வாறு வந்தருளினார்.

அரசன் தரும நீர்மையுடையனாய் முறைபுரியின் அவன் எதிரே தெய்வமும் உவந்து வரும்; திவ்விய மகிமைகளைத் திருவருள் விழைந்து புரியும் என்பது இங்கே தெரிய வந்தது.

இந்த மன்னனை மனுநீதி கண்ட சோழன் என உலகம் இன்றும் உவந்த துதித்து வருகின்றது. நெறி முறையான ஆட்சிக்கு இவன் ஒர் சிறந்த சாட்சியாய் நிலவி நிற்கின்றான். அரிய செயல் செய்துள்ள இவன் பெரிய புகழுடையனாய் விளங்கியுள்ளமையால் அரசமரபு முழுவதும் இவனை வியந்து புகழ்ந்து விதிமுறையே பரசி வர நேர்ந்தது.

குறள் வெண்செந்துறை

அவ்வ ருக்கன்மக னாகிமனு மேதி னிபுரந்(து)
..அரிய காதலனை ஆவினது கன்று நிகரென்(று)
எவ்வ ருக்கமும்வி யப்பமுறை செய்த பரிசும்,
..இக்கு வாகிவன் மைந்தனென வந்த பரிசும். 187 - 8. இராச பாரம்பரியம், கலிங்கத்துப்பரணி

இந்தவாறு பல நூல்களும் உவந்து புகழ இவன் உயர்ந்து திகழ்கின்றான். நீதி வழுவாத மன்னன் ஆதி பகவன் அருள் எய்தி யாண்டும் சோதி வீசித் துலங்குவான் என்பதை இவன் இனிது துலக்கியிருக்கிறான். முறைமை அளவே இறைமை விளைகிறது என்கிறார் கவிராஜ பண்டிதர்..

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jan-21, 4:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 79

மேலே