அன்பின் ஆணிவேர் பூவம்மாள் பெரியம்மா

அன்பின் ஆணிவேர்.... (பூவம்மாள் பெரியம்மா)

“பெரியம்மா, எப்டி இருக்கிங்க..?” பாசத்துடன் நலம் விசாரித்த என்னை.....
சற்று உற்று நோக்கிய வண்ணமே,
“நான் நல்லா சுவமா இருக்கேமா” என்று பதிலுரைத்தபடியே, தன் மெலிந்த உடலை லேசாய் அசைத்து, தான் அமர்ந்திருந்து நாற்காலியின் முன் நகர்ந்து, அருகில் என் வரவால் பூரித்தப் புன்னகையுடன் நின்றிருந்த அன்புச்செல்வியிடம்....
“ செல்வி இது யாரு” மெல்ல விசாரித்தார்....
எனக்கு சிறிது அதிர்ச்சியாய் இருந்தாலும், பெரியம்மாவிற்கு சரியாக நினைவுகள் இல்லை என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததால், உடனே சுதாகரித்துக் கொண்டேன்....
“இது நம்ம அமுதா, ஒங்கள பாக்க வந்திருக்கா....
ஒங்க தங்கச்சி சந்திரா சித்தி மகா...” உரக்கச் சொன்னாள் செல்வி.....
“அடே, என் பொன்னு மவளே, என் சந்திரா மவா அமுதாளா, நா தூக்கி வளத்த மவளாச்சே... “ கண்கள் கசிந்திட எதிரே அமர்ந்த என் வலது கரத்தை , தன் மெலிந்த கரங்களில் ஏந்தி மணத்து முத்தமிட்டார்...
என் கண்கள் கசிவதை என்னால் தடுக்க இயலவில்லை... சில விநாடிகள் அமைதியாய் அமர்ந்தேன்....
பெரியம்மாவின் பிடி இன்னும் சற்று அழுத்தமாகி, என்னை இறுக அணைத்துக் கொண்டார்....
“ நான் வளத்த மக்கா... ஒன்னயே இலக்கு தெரியாம யாருன்னு கேட்டுட்டனே...?”
கண்ணீர் மல்கியது எனக்கு.....
சட்டென திரும்பி செல்வியிடம் ,
“சந்திரா எங்க? அவ வரலியா?” மீண்டும் அவர் வினவ....
“எம்மா, சந்திரா சித்தி போயி சேந்தாச்சி, ஒங்க கொழுந்தன் வைகுண்டம் சித்தப்பாவும் போயி சேந்து ஒன்பது வருசம் ஆச்சி” அழுத்தமாய் சொன்னாள் செல்வி.....

“எம்மா என் தங்கம் சந்திரா போய்ட்டாளா...? நான் தா இன்னு கெடக்கே?
எம்மா என் சந்திரா நீ எங்கமா இருக்கா? ஒன்ன அக்கா எப்பமா பாப்பே... என் தங்கமே” தலையில் அடித்து சற்று உரக்க அழுதார்... என் இதயம் கலங்கிவிட்டது.....

எனது சிறுவயதில், கம்பீரமாய் தன் ஆள்காட்டி விரலை நீட்டி ஆணையிட்டுப் பேசும் பூவம்மாள் பெரியம்மா அப்படியே கண்முன் வந்துபோனார்......

வசதியான பிறர் கண்டு வியக்கத்தக்க மிக மகிழ்வான வாழ்வு.... மிகவும் அன்பான துணைவர்... செல்வமாய் நான்கு பிள்ளைப்பேறு....
அழகாய் கட்டிய ஆனந்தக் கூடு....., இமைக்கும் பொழுதில் உடைந்து சிதறியது....
ஆம்! பெரியம்மாவின் கண் முன்பே, ஏதோ குடும்ப தகராறில் பெரியப்பா திரு.அருணகிரி காக்காமால் என்பவரால் வெட்டிக் கொல்லப்பட .... தனது முப்பத்தைந்து வயதிலேயே கைம்பெண்ணாய் விதவைக் கோலம் பூண்டவர்....
பூவும் பொட்டுமாய் அழகு தேவதாய் வலம்வந்த பூவம்மாள் பெரியம்மா பொட்டிழந்து பூவிழந்து வெண்ணிற ஆடையில் வண்ணமிழந்த நிலவாய் தன் நான்காவது ஆறுமாத குழந்தையை கையில் ஏந்தி, கணவன் கொலைக்கு நீதிகேட்டு திருநெல்வேலி கொக்குரக்குளம் நீதிமன்ற வாசலில் நின்றது.... பொறும்பியவர்கள் கண்களையும் கலங்க வைத்தது..... கொலையை பார்த்த நேரடி சாட்சி பெரியம்மா மட்டுமே என்பதாலும், கொலை இரவில் நடந்தக் காரணத்தாலும்... குற்றவாளிக்கு அது சாதகமாகி விடுதலையானார் ... பின்னர் சிறுது காலத்திலேயே பார்வையிழந்து பெரியம்மாவிடம் மன்னிப்பும்கோரி அவர் மாண்டுபோனார்.... அவரையும் மன்னித்த மாபெரும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்...... தனதுக்குப்பின் ஆறு தங்கைகள் , ஒரே தம்பி அதுவும் சிறுவனாக இருந்ததாலும் தாய்வீட்டிற்கும் பாரமாகாமல்.....தனியே தன் கணவர்வீட்டிலேயே வாழ்ந்து கடுமையாய் உழைத்து தன் நான்கு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கினார்.... இயல்பிலேயே தன்னம்பிக்கையும் தைரியமும் நிறைந்தவர் என்பதால், தன் வாழ்வின் அத்தனை சோதனைகளையும் தனித்தே போராடி வென்றார்...... அவர் கோபமே பக்கபலமும், பலவீனமும்..... நலம் விசாரணைகூட ஒரு நாட்டாண்மை தோரணையிலேயே இருக்கும்...... எவ்வளவுப் பெரிய ஆபத்தான சூழலிலும் துரிதமாய் சாதுர்யமாய் சமயோசிதமாய் செயல்படும் ஆற்றல் பெற்றவர்... அன்பு உறவுகளுக்கு கொடுத்து உதவுவதிலும் , வம்பு செய்பவரை எதிர்த்து அடிப்பதிலும் அவருக்கு நிகர் அவரே.... மொத்தத்தில் பெரியம்மா ஒரு முரட்டுப் பாசக்காரர்..... தன் உடன் பிறந்த சகோதரிகளின் ஆபத்துதவியும் அவர்தான்.... தாத்தா சின்னத்தங்கம் அவர்களிடம் கற்ற சித்தமருத்துவத்துவம் மூலம் திறமையாய் ஊரில் பலருக்கு சிகிச்சை வழங்கியவர்.... தன் எல்லா சகோதரிகளுக்கும் பிரசவத் தாதியும் அவர்கள் தான்....
மிக வேகமாக சுவையாக சமைக்க வல்லவர்.....
ஆண்டிற்கு ஒருமுறை நாங்கள் ஊருக்குச் செல்லும்போது ....
பதநீர்,நொங்கு , பனங்கிழங்கு மற்றும் மாம்பழங்களை சுமந்து சக்கமாள் புரத்திலிருந்து நந்தகோபாலபுரத்திற்கு நடந்தே வருவார்....

தீர்க்கமானப் கண்கள்... பகைமையை முறியடிக்கும் தீயெனப் பார்வை......
நிலவில்லா வானமாய் வரைகோடு நெற்றி.... அதில் சிறு கீற்றென திருநீறு.......
வாசமலர் காணா அள்ளிமுடித்த நீண்ட சுருண்ட கூந்தல்...... பொதுநிறம், சராசரி உயரம், உழைத்து சுக்காய் வற்றிய வலுவான தேகம்......
ஆபரணம் அலங்காரமற்ற அட்சய பாத்திரம் சுமந்த மணிமேகலை......
தும்பைப்பூ வெண்மையில் அவசர கோலத்தில் கட்டிய சீலை....
மொத்தத்தில் வெண்ணிற ஆடையில் எம் குலம் காக்கும் துர்கை........

தனது இளைய மகள் அன்புச்செல்வி வீட்டில் இருந்த ,வயது எண்பத்தைந்தை தாண்டிய பெரியம்மா.. கீழே விழந்து சிலகாலமாக படுக்கையானார்.... பணிக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கும் என் சிந்தை , அவர்களை பார்க்க காலம் தாழ்த்தியே வந்தது.... பொங்கல் அன்று காலை, அவருக்கு அடிக்கடி நினைவு தப்புகிறது, தான் வாழ்ந்த ஊருக்கே செல்லவேண்டும் என்று சிறுகுழந்தைபோல அடம்பிடிக்கிறார், அதனால் மறுநாள் அவரை ஊருக்கு அழைத்துச் செல்வதாக தகவலறிய.... என் மனசாட்சி உறுத்த அன்று மாலையே அவசர அவசரமாய் அவரை காணச் சென்றேன்....

பாதி உருவாக தேய்ந்து , நாற்காலியில் பொதிந்து வைத்ததுபோலவே அமர்ந்திருந்தார்...... வெகுநேரம் பேசினேன்..... நேரம்போனதே தெரியவில்லை..... குழந்தை பருவம் முதல் தன் இளமை பருவம் வரை நடந்த நிகழ்வுகள் அத்தனையும் பசுமரத்தாணியாய் அவர்கள் நெஞ்சில் பதிந்திருக்க... அதை அப்பட்டியே பழைய தெம்பை வரவழைத்து என்னோடு பகிர்ந்து மகிழ்ந்தார்.... ஆனால் இடையிடையே பலமுறை என்னை “நீ யாரு?” என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு, ஒவ்வொருமுறையும் நான் யாரென்று அறிந்ததும் அணைத்து முத்தமிட்டு கசிந்துருகினார்........

விடைபெற எனக்கு மனமில்லை ... ஆனால் என்னைப் பார்த்த தெம்பில், பிடிவாதமாய் படுக்க மறுத்து, முதுகுவலியோடு பெரியம்மா வெகுநேரம் நாற்காலியிலேயே அமர்ந்திருந்ததால் .... வேறுவழியில்லாமல் விடைபெற்றேன்....,

“ எம்மா, நீ கெளம்பிட்டியா... நாளைக்கு நா சக்கமாள் புரம் போறே, நீயு எங்கூட கார்ல வாயே, அங்க வந்து ஒருபத்துநாளைக்கு எங்கூட இரு... அங்க எல்லாத்திக்கிட்டைய ஒன்ன காட்டணு... எல்லாருக்கு ஒன்ன தெரியு, அடயாளம் கண்டுபிடிச்சுருவாக.... வரியா...? “ மிகவும் ஆதங்கத்தோடு கெஞ்சினார்....
உடன் செல்ல இயலாத நிலை... அதை சொன்னால் புரிந்துக்கொள்ளும் நிலையில் அவர்களும் இல்லை.....
புன்னகைத்துப் பொய்யுரைத்தேன்... நானும் அவர்களுடன் வருவதாக வாக்குக் கொடுத்தேன் ....

“ என்ன? எங்கூட வரேன்ன... இப்ப கெளம்புற? “ மீண்டும் குழந்தைபோல் வினவ.... “பெரியம்மா, நா வீட்டுக்கு போயி ஒங்க மருமகனுக்கு பேரனுக்கு வேண்டியதல்லா எடுத்து குடுத்துட்டு, எனக்கு பத்து நாளுக்கு கட்ட துணியெல்லா எடுத்துக்குட்டு விடியகாலையே வந்துருவே, சரியா... நீங்க இப்ப படுங்க” உறுதியாய் சொன்னேன்...

பெரியம்மா பன்மடங்கு தெம்பாகிவிட்டார்....
“அப்ப விடிய காலைலே வந்துரு என்ன...”
சட்டென திரும்பி
செல்வியை உற்சாகத்தோடு அழைத்தார்...
“ செல்வி, நாளைக்கு நம்மகூட ஊருக்கு அமுதாளு வரா... அவா வந்தப்றம் தான் வண்டிய எடுக்கணு சரியா.... நீ ஒடனே அசோகனுக்கு ஃபோனப்போட்டு, அமுதாளு நம்மக்கூட வரானு தகவல் சொல்லிரு” அதே பழைய தோரணையில் விரலை நீட்டியபடி ஆணையிட்டார்... மனம் நெகிழ்ந்துப்போனேன்....

“இப்டியே அக்கா தங்கச்சி பிள்ளைக எல்லா வந்து பாத்துட்டுப்போனா அம்மா நூறு போட்ருவாங்கபோல” என்று உற்சாகத்துடன் சொல்லியவண்ணம் அன்புச் செல்வியும் கொழுந்தனும் பெரியம்மாவை கைத்தாங்கலாய் படுக்க வைக்க ...
அவர்களோ படுத்தபடியே, தன் இரு கரங்களையும் கூப்பி மேலே பார்த்தவண்ணம்
“ எம்பிள்ளா, என் பொன்னு மவளே, என் சந்திரா பெத்த தங்கமே....என்னப் பாக்க வந்தியே, நீ ஒன் பிள்ளக்குட்டிக எல்லா நல்லா இருக்கணு, கடவுளே, எம்பிள்ளைய நல்லா வையுப்பா” கண்கள் கசிய மனமுருகி வேண்டி ஆசிவழங்கினார்....
எந்தப் பொங்கலிலும் கிடைக்காத மாபெரும் ஆசிர்வாதம் கிடைத்த நெகிழ்ச்சியில் , விழியோரம் நீர்கோர்க்க.....
என் முதல் பிரசவத்திற்கு என்னுடன் துணை நின்றது, என் கணவர் ஹெப்படைடீஸ்-பி’யில் பாதிப்பட்டபோது ஊரில் கிடைத்த மொத்தக் கீழாநெல்லியையும் கட்டுக்கட்டாக எடுத்துக்கொண்டு ஓடிவந்ததுயென வழிநெடுக பெரியம்மாவுடனான என் பழைய நினைவுகளை மனதில் அசைபோட்டுக்கொண்டே இல்லம் திரும்பினேன்......

எழுதியவர் : வை.அமுதா (17-Jan-21, 2:23 pm)
பார்வை : 95

மேலே