செய்யும் கருமங்கள் மெய்யின் வழியில் வருமேல் தருமம் பொழியும் - புண்ணியம், தருமதீபிகை 743

நேரிசை வெண்பா

செய்யும் கருமங்கள் செம்மை நலம்தோய்ந்து
பொய்யும் புலையும் புகாமலே - மெய்யின்
வழியில் வளர்ந்து வருமேல் தருமம்
பொழியும் அவற்றின் புறம். 743

- புண்ணியம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஒருவன் செய்கின்ற கருமங்கள் பொய், புலைகள் புகாமல் செம்மையும் நன்மையும் தூய்மையும் வாய்மையும் தோய்ந்துவரின் அவை புண்ணியங்களாய்ப் பொங்கி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கருமம் என்னும் சொல் கருத்தாவால் கருதிச் செய்யப்படுவது என்னும் பொருளையுடையது. தம்முடைய குடிவாழ்க்கையைச் செவ்வையாக நடத்த மனிதர் எவ்வழியும் தொழில் செய்ய நேர்ந்தனர். வினையாண்மை, முயற்சி, கருமம், காரியம் ஆள்வினை என்பன செயல் முறைகளின் சீர்மை தெரிய வந்தன.

வாழ்க்கை வசதிக்குப் பொருள் தேவை: அதை ஈட்டுதற்கு உழவு, வாணிகம் முதலிய தொழில்கள் பல தோன்றின. இந்தக் கருமங்கள் நேர்மையோடு நெறிமுறையாய் வரின் பொருளும் புகழும் பெருகிவரும், களவு, வஞ்சனைகள் கலந்தால் இளிவுகள் ஏறிவிடும். தவறான வழிகளில் பொருள் வருவது போல் தெரியினும் முடிவில் அது அழிதுயரங்களை விளைத்து அடியோடு ஒழிந்தே போய்விடும்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்(து)
ஆவது போலக் கெடும். 283 கள்ளாமை

உள்ளம் திரிந்து கள்ளவழியால் ஈட்டிய பொருள் வெள்ளம் போலப் பெருகித் தோன்றினும் ஒல்லையில் முழுதும் ஒழிந்தே போகும் என வள்ளுவர் இவ்வாறு உறுதியாய் உணர்த்தியுள்ளார்.

தமக்கு நேர்கிற கேடு தெரியாமல் பொருள் மேலுள்ள மருளால் பழிவழிகளில் விழைந்து பலர் அழிதுயரங்களை அடைகின்றனர். பாவத்தால் வருவது பழியும் துன்பமுமேயாம்.

’அறத்தான் வருவதே இன்பம்’ (குறள், 39) என்றதனால் பிற வழிகளால் வருவன எல்லாம் துன்பங்களேயாம் என்பது தெரிய வந்தது. தருமம் ஒன்றே இருமையும் இன்பம் தரும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

தருமமா வதுவே இன்பம் தருமலால் தருமம் நீக்கும்
கருமமா வதுபோல் தோன்றிக் காட்டினும் பசுமட் பாண்டத்(து)
அருமையாய் நிரப்பும் தெண்ணீர் அனைத்துமப் பாண்டத் தோடும்
ஒருமையாய்க் கெடுதலே போன்று ஒருகணத்(து) அழியு மன்றே.

- பிரபோத சந்திரோதயம்

பசிய மண் பாண்டத்தில் நிரப்பி வைத்த தண்ணீர் போலப் பாவவழியில் வந்த பொருள் விரைவில் அழிந்து போகும் என இது உணர்த்தியுள்ளது. பானை விரிந்து நீர் முழுதும் இரிந்து ஒருங்கே அழிதல் போலக் கரவால் சேர்த்த பொருளும் அந்த ஆளும், குடியும் அடியோடு ஒழிந்து போகும் என்பது உவமையால் தெளிந்து கொள்ள வந்தது. சுகமாய் வாழவேண்டும் என்று மனிதன் பொருளை ஈட்டுகிறான்; அந்த ஈட்டத்தில் பாவம் கலந்தால் அது துக்கத்தையே நீட்டி ஒழிந்து போகின்றது.

’தீவினை விட்டு ஈட்டல் பொருள்’ என்றார் ஒளவையார்; தீவினையால் வந்த பொருள் அல்லலே புரியும்; அது இல்லாததே நல்ல பொருளாய் யாண்டும் இன்பம் தரும் என ஔவை காட்டியிருக்கும் காட்சி கருதி நோக்கத் தக்கது. பழிவழிகளில் பொருள் பெருகி வந்தாலும் சாக்கடை நீர்போல் மேலோரால் அது இழிக்கவே படும். இழிவில் வருவது இழிவாய் அழியும்

அறநெறியால் வருவது அமிர்த மயமாய் யாண்டும் இன்பம் தருமாதலால் அவ்வழியில் ஈட்டுவோரே விழுமியோராய் விளங்கி மேலான இன்ப நிலைகளை அடைந்து கொள்கின்றார்.

புண்ணியம் முட்டாத் தண்நிழல் வாழ்க்கை,
கொடுமேழி நசைஉழவர் 205
நெடுநுகத்துப் பகல்போல,
நடுவு நின்றநல் நெஞ்சினோர்,
வடுஅஞ்சி, வாய்மொழிந்து,
தமவும் பிறவும் ஒப்ப நாடி,
கொள்வதூஉம் மிகைகொளாது,
கொடுப்பதூஉம் குறைகொடாது, 210
பல்பண்டம் பகர்ந்து வீசும்,
தொல்கொண்டி, துவன்றிருக்கை. - பட்டினப்பாலை

ஆயிரத்தெண்ணுாறு ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டிலிருந்த வணிகர்களைக் குறித்து இப்பாட்டு வந்திருக்கிறது. நேர்மையான நெஞ்சினர்; பழிக்கு அஞ்சுபவர்; எப்பொழுதும் மெய்யே பேசுபவர்; பிறர் பொருளையும் தம்பொருள் போல் பேணுபவர்; பண்டங்களை விற்பதிலும் வாங்குவதிலும் யாதொரு கரவும் செய்யாதவர்; எவர்க்கும் இரங்கி உதவுபவர்; பகுத்து உண்பவர்; கண்ணியமான புண்ணிய வாழ்க்கையர் என அவரை இவ்வாறு போற்றியிருத்தலால் அவரது நெறியும் நீர்மையும் அறியலாகும். மெய்வழி ஒழுகியதால் மேன்மைகள் மேவின.

பொய் பேசாமலும், கள்ளத்தனம் செய்யாமலும் இருந்தால் பொருள் சேருமா? என்று இக்காலத்து வியாபாரிகள் பலர் வாய் கூசாமல் கூறுகின்றனர். பழிவழிகளில் பொருள் சேர்த்து அழிதுயரங்களை அடைவது அதிசய வியப்பாயுள்ளது .

துன்மதி வணிகர் தங்களைப் படைத்துச்
சோரரை என்செயப் படைத்தாய்?

'பிரமாவே! வணிகர்களைத்தான் நீ படைத்திருக்கிறாயே! வேறே திருடர்களையும் ஏன் படைத்தாய்?’ எனச் சிருட்டி கருத்தாவை நோக்கி ஒரு கவிஞர் இப்படி வாதாடியிருக்கிறார். சோரத்தனம் வியாபாரிகளை எவ்வாறு சோரம் புரிந்து பேரம் செய்து வருகிறது என்பது இதனால் தெரிய வந்தது. நல்ல சீலமுள்ள நாடு கால வேற்றுமையால் இவ்வாறு சீரழிந்து போயிருக்கிறது. மடமையிருள் மண்டிக் கொடுமை விரிந்துளது.

மனிதர் மனம் பொருளாசையால் மருள்கொண்டு இருள் மண்டியிருத்தலால் தருமநெறி தெரியாது போயது. அணுவளவு புண்ணியத்தால் அடைகிற பொருளை மலையளவு முயற்சியாலும் அடைய முடியாது. அருமையான இந்த தெய்வத் திருவின் கருவை அறியாதிருப்பது பெரிய பரிதாபமேயாம். நேர்மையான முறையில் பண்ட மாற்றுகளைச் செய்து நம் முன்னோர் சீர்மையும் சிறப்புமெய்தி வந்துள்ளனர். அவ்வுண்மைகளைப் பழந்தமிழ் நூல்களில் உணர்ந்து உளம் களி கூர்கின்றோம்.

உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை
மண்ணுவ மணிபொன் மலைய கடல
பண்ணிய மாசறு பயந்தரு காருகப்
புண்ணிய வணிகர் மனைமறுகு ஒருசார். - பரிபாடல்

ஆடை, கூலம், அணி முதலிய பலவகைப் பொருள்களையும் மனச் செம்மையோடு நாணயமாய் வாணிகம் புரிந்து வந்தவரை இது வரைந்து காட்டியுள்ளது. புண்ணிய வணிகர் என அவரைக் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத் தக்கது. இத்தகைய உத்தம வணிகர்களை இந்நாடு முன்னம் பெற்றிருந்தமையால் மற்றைய நாடுகளும் வியந்து நோக்கப் பெருஞ்செல்வங்கள் இங்கே பெருகியிருந்தன. பொங்கிய புகழும் பொலிந்து விளங்கின.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

கட்டொன்று கலம்காட்டிக் கதிருழக்கு நெற்காட்டிக்
கடல்சூழ் ஞாலம்
தட்டொன்றும் இல்லாமல் சார்ந்தவுயிர் இனங்களெல்லாம்
ஆர்ந்து வாழ
இட்டுண்டு பெரும்புகழை ஈட்டிவந்த இந்தியா
இன்று நொந்து
பட்டினியின் படுதுயரைப் பாரெங்கும் பார்த்துளதே
பாவம் என்னே? – இந்தியத் தாய்நிலை

இந்நாடு பண்டு நல்ல வளம் படிந்திருந்தது; இன்று பொல்லாத வறுமை புகுந்து புலையாடி நிற்கின்றது; இந்நிலைக்குக் காரணம் என்ன? மக்களிடம் புண்ணிய சீர்மைகள் மங்கிப் பாவத்தீமைகள் பொங்கியுள்ளமையேயாம். தவம், தானம், ஞானம், தருமங்களுக்குத் தனிநிலையமாய் நின்ற நாடு அவகேடுகளுக்கு இடமாய் அவலம் அடைந்திருக்கிறது. நண்ணிய புலைகள் ஒழிந்து புண்ணிய நிலைகள் வளர்ந்து யாண்டும் புனிதம் ஓங்கி வர வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jan-21, 7:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

சிறந்த கட்டுரைகள்

மேலே