புண்ணியமோ ஓ’ர்’ந்துபுரி நல்வினையால் ஊறுமால் – புண்ணியம், தருமதீபிகை 744

நேரிசை வெண்பா
('ர்’ ஆசு இடையிட்ட எதுகை)

போந்து நுகரின்பம் புண்ணியத்தால் புண்ணியமோ
ஓ’ர்’ந்துபுரி நல்வினையால் ஊறுமால் – தே’ர்’ந்திதனைக்
காணாமல் தீவினையைக் கண்டபடி செய்கின்றார்
நாணார்கொல் பின்னாம் நவை. 744

- புண்ணியம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஐம்பொறிகளின் போக நுகர்வுகள் புண்ணியத்தால் அமைகின்றன; புண்ணியம் நல்வினைகளால் வருகிறது; இந்த உண்மையை உணர்ந்து கொள்ளாமல் தீமைகளைச் செய்பவர் பின்பு துன்பங்களை அனுபவித்துத் துடித்து வருந்த நேர்கின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர். சுகபோகங்களின் மூல காரணத்தை இப்பாடல் கூறுகின்றது.

உயிரினங்களுள் மனித இனமே சுவை நுகர்வுகளில் உயர்நிலை பெற்றுள்ளது. அருந்தல், பொருந்தல்களைத் திருந்திய முறையில் சுவை செய்து எவ்வழியும் செவ்வையாய் இனிது அனுபவிக்கிறது. இந்த இன்ப போகங்கள் எல்லாருக்கும் ஒரு படியாய் இயல்பாக அமையவில்லை. அவரவர் செய்த நல்வினைகளின் அளவே பல்வகையிலும் படியெங்கும் படியளந்துள்ளது.

சிறந்த புண்ணியமுடையவர் உயர்ந்த இன்பங்களை அனுபவிக்க உரிமை பெற்று வருகின்றார். அரசர், கந்தருவர், தேவர் முதலானவர்கள் இந்த வரிசையில் உயர்ந்து நிற்கின்றார். புண்ணியப் பயனாகிய போகங்களை நுகரவே தேவருலகம் அமைந்திருத்தலால் அங்கே நல்ல கருமங்களைப் புரிந்து தருமங்களைப் பெற இயலாது. இன்பக் களிப்புகளே அங்கு பொங்கியுள்ளன.

ஆபுத்திரன் என்பவன் சிறந்த சீவகாருணியம் உடையவன்; பிறவுயிர்களுக்கு இதம் செய்வதே பிறவிப் பயனாய்க் கருதினவன்; அமுதசுரபி என்னும் அதிசய பாத்திரத்தால் உயிர்களின் பசித்துயர்களை நீக்கியுதவி புரிந்து வந்தான். அவனுடைய புண்ணிய நீர்மையை வியந்து இந்திரன் நேரே தோன்றிப் பொன்னுலகத்துக்கு வரும்படி அவனை உவந்து வேண்டினான். அவன் மறுத்தான்; அது பொழுது தேவர் கோனை நோக்கி அவன் உரைத்த உரைகள் உணர்வு நலம் சுரந்து வந்தன.

ஈண்டுச் செய்வினை ஆண்டுநுகர்ந் திருத்தல்
காண்தகு சிறப்பின்நும் கடவுளர் அல்லது
40 அறம்செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர்

நல்தவம் செய்வோர் பற்றுஅற முயல்வோர்
யாவரும் இல்லாத் தேவர்நல் நாட்டுக்கு
இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே
வருந்தி வந்தோர் அரும்பசி களைந்துஅவர்
45 திருந்துமுகம் காட்டும்என் தெய்வக் கடிஞை

உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ
பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ
யாவைஈங்கு அளிப்பன தேவர்கோன். - 14 பாத்திர மரபு கூறிய காதை, மணிமேகலை

தேவராசனே! உனது நாடு இனிய போகங்களை அனுபவிக்க உரியதே அன்றிப் புண்ணியங்களைச் செய்து கொள்ள இயலாது; ஆதலால் நான் அங்கே வர முடியாது என்று ஆபுத்திரன் கூறியிருப்பது இங்கே கூர்ந்து சிந்திக்கவுரியது.

பொலம் பூங்காவின் நன்னாட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவ(து) அன்மையின் கையற வுடைத்து. 58 புறநானூறு

பொன்னாட்டின் நிலையைக் குறித்து ஆவூர் மூலங்கிழார் இவ்வாறு காட்டியிருக்கிறார். தருமங்களைச் செய்து மேலான நிலைகளுக்கு அங்கிருந்து செல்ல முடியாதாதலால் கரும வீரர்கள் மருமமாயதனை இங்ஙனம் இகழ்ந்திருக்கின்றனர்.

ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து
வாழ்வாரே வன்க ணவர்.

ஈகையின் இனிமை இன்றி, அருள் வளர்ச்சி குன்றி, அறப்பேறு பொன்றி வெறும் சுகபோகமே ஒன்றியுள்ளமையால் வான வாழ்வு ஞானவான்களுக்கு ஈனமாய்த் தோன்ற நேர்ந்தது. புண்ணியப் பயனாகிய போக நுகர்வு முடிந்தவுடன் தேவரும் ஆவி அழிய நேர்கின்றார். சீவிய நிலை தாழ்ந்து போகின்றார்.

செல்வம், சிறப்பு, இன்பம் முதலிய யாவும் புண்ணிய விளைவாய் வருகின்றன; அதன் அளவுக்குத் தக்கபடி அமைந்து நின்று பின்பு எல்லாம் கரைந்து மறைந்து போகின்றன.

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

புண்ணிய முலர்ந்தபின் பொருளி லார்களைக்
கண்ணிலர் துறந்திடுங் கணிகை மார்கள்போல்
எண்ணில ளிகந்திடும் யாவர் தம்மையும்
நண்ணிய நண்பில ணங்கை வண்ணமே. 15 முத்திச் சருக்கம், சூளாமணி

பொருள் இருக்கும் வரையும் வேசையர் விழைந்து தழுவுவர்; அது இல்லையானால் எவரையும் இகழ்ந்து விடுவர்; அதுபோல் புண்ணியம் இருக்கும் வரையும் செல்வ போகங்கள் சேர்ந்திருக்கும்; அது தீர்ந்ததானால் அவை யாவும் உடனே விலகி விடும் என இது விளக்கியுள்ளது. இன்ப நிலை இனிது தெரிய வந்தது.

எந்தக் காரணத்தால் எது வந்ததோ அது முடிந்ததும் அந்தக் காரிய வரவும் ஒழிந்து போகிறது. செய்த நல்வினையால் செல்வச் சிறப்புகள் சேரவே மனிதன் சிந்தை திரிகின்றான்; செருக்கு மிகுகின்றான்; பொறி வெறிகளில் இழிகின்றான்; பிறரை இகழ்வாய் எண்ண நேர்கின்றான்; பாவத் தொடர்புகள் பற்றி ஏறி பெற்ற நலன்களை யெல்லாம் இழந்து பேதையாயிழிந்து அழிந்து போகின்றான்.

நேரிசை வெண்பா

புண்ணியத்தால் வந்த பொருளும் புகழுமது
நண்ணி யுளஅளவே நண்ணுமால் - கண்மறையின்
யாவும் அவமே அழியும் அரும்பொருளின்
ஆவி அறமே அறி.

செல்வத்தின் உயிர் புண்ணியமே; அதனைப் போற்றி ஒழுகும் வரையும் எல்லா ஏற்றங்களும் உளவாம். போற்றாது விடின் யாவும் பொன்றி ஒழியும் என இது போதித்துள்ளது.

தன்னை உரிமையோடு பேணி வருபவரைத் தருமம் எவ்வழியும் பெருமைகள் பெருகிவரச் செவ்வையாய்ப் பேணி வருகிறது. அதனை மறந்து பிரிந்தவர் தாமாகவே இழிந்து அழிந்து ஒழிகின்றார். தருமத்தை மறந்தவன் இருந்தும் இறந்தவன் ஆகின்றான்; பழி துயரங்களையும் அழிகேடுகளையும் அடைய நேர்கிறான்.

அறத்தினூஉங்(கு) ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலினூங்(கு) இல்லை கேடு. 32 அறன் வலியுறுத்தல்

அறத்தை ஒருவன் மறந்துவிடின் அழிகேடுகள் அவனைத் தொடர்ந்து கொள்ளும் என இது குறித்துள்ளது. தனக்கு நன்மையை நாடுகின்றவன் தருமத்தை யாண்டும் மறக்கலாகாது; அதனைக் கிழமையோடு தழுவிவரின் விழுமிய மேன்மைகள் விளைந்து வரும். தருமவானாய் என்றும் நீ பெருமை பெற்று நில் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jan-21, 10:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

சிறந்த கட்டுரைகள்

மேலே