தேவருமிம் மேதினியை நோக்கி விழைந்து மகிழ்வர் - அரசு, தருமதீபிகை 754

நேரிசை வெண்பா

கண்ணை இமைகாக்கும் காட்சிபோலக் காவலனிம்
மண்ணை இனிதோம்பி வாழுமேல் - விண்ணை
விழைந்திருக்கும் தேவருமிம் மேதினியை நோக்கி
விழைந்து மகிழ்வர் வியந்து. 754

- அரசு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கண்ணை இமைகாக்கும் காட்சிபோல் இம்மண்ணை மன்னன் இனிது பேணி வருவானானால் விண்ணை விழைந்து மகிழ்ந்திருக்கின்ற தேவர் யாவரும் இவ்வுலகை உவந்து நோக்கி விரைந்து வருவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலகிற்கு அரசன் உயிரென அமைந்துள்ளமையான் இதனைப் பேணி வருவது இயல்பான இனிய உரிமையாயிசைந்தது. உடலை எவ்வழியும் உயிர் பிரியமாய் ஓம்பி வருகிறது. தேகாபிமானம் என்னும் பழமொழி தேகியின் நிலைமையை விளக்கியுள்ளது. யாரும் தூண்டாமலே வேண்டிய யாவும் உடலுக்கு உயிர் செய்துகொண்டு வருகிறது. அதுபோல் உலகை அரசர் ஓம்பி வருகிறார். உயிரும் உடலும் என உலகும் அரசும் மருவி உரிமை புரிந்து வருதலால் பலவும் நலமாய் நடந்து வருகின்றன.

தன் உயிரைப் போலவே குடிசனங்களையும் அரசன் கருதிப் பேணி வருதலால் அவனைத் தெய்வமாகவே உரிமையோடு வழிபாடு செய்து அவர் கிழமை தோய்த்து வருகிறார். இதமாய் இனிமை செய்து வருபவனை வையம் தனிமையாக உயர்த்தித் துதித்து வருகிறது. மதிப்பு மன்னிய செயலால் மருவியது.

தன்னுயிர் ஆமென உலகில் தங்கிய
மன்னுயிர் அனைத்தையும் புரக்கும் மாட்சியான். - நைடதம்

நள மன்னனுடைய ஆட்சி நிலையை இது காட்சிப் படுத்தியுள்ளது.

புரவலன் என அரசனுக்கு ஒரு பெயர் அமைந்திருக்கிறது. உயிர்களை அவன் புரந்துவரும் நீர்மையால் அது விளைந்து வந்தது. புரத்தல் - பாதுகாத்தல், எவ்வழியும் சிரத்தையோடு பரிந்து பாதுகாத்தருளுதல் புரத்தல் என நேர்ந்தது. தன் ஆட்சியை அவ்வாறு அவன் காத்து வந்தமையால் புரக்கும் மாட்சியான் எனக் காப்பு நிலையின் சீர்த்தியோடு போற்ற நின்றான்.

கண்ணுக்கு இமை என்ன உரிமையோடு இசைந்துள்ளதோ அன்னவாறே மண்ணுக்கு மன்னன் மன்னியுள்ளான். கண்ணில் ஏதேனும் இடருற நேர்ந்தால் இமை விரைந்து காக்கும்; அதுபோல் நாட்டுக்கு ஏதேனும் அல்லல் நேர்ந்தால் அரசன் ஒல்லையில் அதனை நீக்கித் தன் எல்லையை இனிது காத்தருளுவான். இக்காப்பு முறை இயல்பான நிலையில் விரைவாய் நிகழும் என்பதை உவமைக் குறிப்பால் ஓர்ந்து உணர்ந்து கொள்ளலாம். கண்ணின் நீர்மை நுண்ணிய சீர்மையுடையது.

கலித்துறை
(மா கூவிளம் கருவிளம் கூவிளம் புளிமா)

கண்ணைக் காப்பது கவிந்துள இமையன்றி அயலே
நண்ணி யுள்ளன நயந்துடன் காக்குமோ? பிறந்த
மண்ணைக் காப்பது வந்ததில் பிறந்தமன் குலத்தோர்க்(கு)
ஒண்ணு மேஅன்றி ஒழிந்துளோர் செய்வரோ?

- உரிமை. வீர பாண்டியம், கவிராஜ பண்டிதர்

கண் ஊன்றி எண்ணியுணர ஈண்டு இது நண்ணி வந்துள்ளது.

ஆங்கிலேயர் ஈங்கு வந்து வணிக முறையில் ஆங்காங்குத் தேசங்களை வளைத்து முடிவில் அரசாள மூண்டு தன்பால் நீண்டு புகுந்து திறைகேட்ட பொழுது இத்தென்னட்டு மன்னன் அவரை நோக்கி இன்னவாறு கூறியிருக்கிறான். கண்ணில் தூசி விழ நேர்ந்தால் இமை காக்குமே யன்றிக் கை கால்கள் காவா; என் நாட்டிலுள்ள எனது குடிசனங்களை நான் இனிது பேணுவேன்; ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள நீவிர் உரிமையோடு பேண மாட்டீர்; பொருள் வரவிலேயே கண்ணாய் அருளின்றி மருளே புரிவீர்; பழமை தோய்ந்து கிழமை வாய்ந்து உரிமை புரிந்து பெருமை பெருகி வருகிற எனது அரசில் சிறுமை புக நீர் நுழையாதீர், ஒல்லையில் விலகி எல்லை கடந்து போய் விடும்! என அவ்வல்லவன் வாய்விட்டுச் சொல்லியுள்ளது ஈண்டு உள்ளி யுணர்ந்து உண்மை தெளிய வுரியது. பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டியன் இந்நாட்டின் வீர நிலையை யாண்டும் நிலை நாட்டியுள்ளான்; அவனுடைய சரிதம் அரிய மகிமை வாய்ந்தது; உலக மக்கள் யாவரும் ஓர்ந்து உணரத் தக்கது.

அரசன் நன்கு பேணி வருவானாயின் நாடெங்கும். செழித்துப் பொங்கிய வளங்களோடு பொலிந்து விளங்கும். மாந்தர் உவகை மீதூர்ந்து யாண்டும் இனிது வாழ்ந்து வருவர்.

மாந்தர் மனமகிழ்ந்து மாநிலத்தில் வாழ்வதெல்லாம்
வேந்தர் புரியும் விருந்து.

திருந்திய பண்போடிருந்து அரசன் புரந்துவரின் அங்கே அரிய பல நன்மைகள் சுரந்து யாவரும் இனியராய் உயர்ந்து வாழுவர்; தேவரும் அந்த வாழ்வை ஆவலோடு விழைந்து மகிழ்வர்; போக லோகமாய் அதுபொலிந்து விளங்கும்.

தன்னுடைய நாட்டை எவ்வழியும் செவ்வையாக நெறிமுறையோடு கண் ஊன்றி மன்னன் பேணிவரின் குடிசனங்கள் மடி முதலிய இளிவுகள் படியாமல் யாண்டும் தெளிவடைந்து ஒளிபுரிந்து வருவர்; நாடும் வளங்கள் பல விளைந்து பீடும் பெருமையும் நிறைந்து யாண்டும் உயர்ந்து விளங்கும்.

தேசம் தேசு மிகுந்து திகழ்வதும், மாசுபடிந்து மருள்வதும் அரசனது பாதுகாப்பின் உயர்வினாலும் அயர்வினாலும் முறையே அமைகின்றன. ஆட்சி நிலையே மாட்சியை அருளுகிறது.

கண்ணை இமை காப்பதுபோல மண்ணை அரசன் பாதுகாக்க வேண்டும் என்றது காப்பின் உரிமையையும் கடமைகளையும் தலைமை நிலைமைகளையும் கருதியுணர வந்தது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர்
விண்ணினைச் சுழல வோடும் வெய்யவ னென்னும் பேரார்
எண்ணினுட் டலைக்கண் வைத்த கண்ணஃ தில்லை யாயின்
மண்ணினுக் கிருளை நீக்கும் வகைபிறி தில்லை மன்னா. 268

குடிமிசை வெய்ய கோலுங் கூற்றமும் பிணியு நீர்சூழ்
படிமிசை யில்லை யாயின் வானுள்யார் பயிறு மென்பார்
முடிமிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி
அடிமிசை நரலுஞ் செம்பொ னதிர்கழ லரச ரேறே. 269 - மந்திரசாலைச் சருக்கம், சூளாமணி

அரசனது நிலையையும் ஆட்சி முறையையும் குறித்து வந்துள்ள இந்தப் பாசுரங்கள் இரண்டையும் நன்கு கருதியுணர வேண்டும். சூரியன், கல்வி, அரசு ஆகிய இந்த மூன்றும் கண் என உள்ளன.

சூரியன் வெளியே உலக இருளை நீக்குகிறான்.
கல்வி உள்ளே மடமை இருளை நீக்குகிறது.
அரசன் உள்ளும் புறமும் எல்லா இருள்களையும் நீக்குகிறான்

கதிரொளி விரிந்திருந்தாலும், கல்வியறிவால் மனிதர் உயர்ந்திருந்தாலும் அரசன் நெறிமுறையோடு நாட்டைச் சரியாகப் பாதுகாவானாயின் யாவும் பரிதாபமாய் நிலை குலைந்து போகும். கண் என இங்கே எண்ணிய மூன்றனுள் காவலன் முன்னுற நின்றது எண்ணி உணர வுரியது. அரசன் நீதி முறையே சரியாக ஆட்சி புரியின் அந்நாடு சிறந்த மாட்சியுடையதாகும்; வறுமை, மடமை, பகைமை முதலிய சிறுமைகள் அங்கே சேரா; செல்வ வளங்களும் நல்ல நிலைகளுமே பல்கி நிற்கும்; பிற நாடுகளும் அந்நாட்டைப் பெருமையாய்ப் புகழ்ந்து வரும்: பொன்னாட்டவரும் விழைந்து மகிழ்ந்து வியந்து வருவர். பூமியில் ஒரு சுவர்க்கம் போலத் தன் நாட்டைத் தக்க ஆட்சியாளர் (அரசன்) பேணி வரவேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jan-21, 10:53 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

மேலே