இன்பமெலாம் தந்தருளும் புண்ணியமே தாழாது செய்துய்க - புண்ணியம், தருமதீபிகை 745

நேரிசை வெண்பா

கருதிப்போய் வேண்டியதைக் கற்பகம்நின்(று) ஈயும்
கருதாத இன்பமெலாம் கண்முன் - ஒருவாமல்
தந்தருளும் புண்ணியமே தாழாது செய்துய்க;
வந்தருளும் மேன்மை வளர்ந்து. 745

- புண்ணியம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தேவர்கள் கருதி வேண்டியதையே கற்பகத்தரு தரும்; மனிதர் கருதாத இன்ப நலங்களை யெல்லாம் புண்ணியம் உரிமையோடு தருமாதலால் இதனை விரைந்து செய்து உயர்ந்து கொள்க; செய்யாது அயர்ந்து நின்றால் வெய்ய துயர்விளைந்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கற்பகத் தருவினும் புண்ணியம் அற்புதத் திரு என்றது இதன் அதிசய மகிமைகளைக் கருதியுணர வந்தது. கருமங்கள் யாதும் புரியாமல் தாங்கள் செய்த தருமங்களின் பயன்களை துகர்பவர் தேவர்கள். இன்ப போகங்களை இனிது அருளவல்ல குளிர் தருக்கள் ஐந்து, புத்தேள் உலகத்தில் வித்தகமாய் அமைந்துள்ளன. கண்ணியன தருதலால் புண்ணிய உருவங்களாயின.

சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம் என அவை பெயர் பெற்றிருக்கின்றன. அமரர் கருதிய போகங்களை உரிமையுடன் அவை உதவியருளுகின்றன. இந்திரதிரு என ஐந்தரு அமைந்துள என்றதனால் அவற்றின் நிலைமையும், நீர்மையும் தெரியலாம்.

சந்தானம் வேண்டிற் றெல்லாம் தரும்அரி சந்தனம்பூ
மந்தாரம் பாரி சாதம் கற்பகம் மற்றோர் ஐந்தாம். – நிகண்டு

என மண்டலவரும் இங்ஙனம் பெயர்களை வரைந்து கூறியுள்ளார்.

விண்ணுலக வாசிகளுக்கு எண்ணிய இன்ப நலன்களை இனிது தருகிற இந்தத் திவ்விய தருக்களினும் மண்ணுலகவாசிகளுக்குப் புண்ணியம் எண்ணரிய பெருமைகளையும் இன்ப சுகங்களையும் எவ்வழியும் செவ்வையாய் நன்கு அருளி வருகிறது.

நேரிசை வெண்பா

கங்கைநதி பாவம் சசிதாபம் கற்பகந்தான்
மங்க லுறும்வறுமை மாற்றுமே – துங்கமிகும்
இக்குணமோர் மூன்றும் பெரியோர் இடஞ்சேரில்
அக்கணமே போமென்(று) அறி. 100 நீதி வெண்பா

கங்கை நதி பாவத்தை நீக்கும்; சந்திரன் தாபத்தைப் போக்குவான்; கற்பகம் வறுமையை ஒழிக்கும்; புண்ணிய சீலராகிய பெரியோரைச் சேரின் பாவம், தாபம், வறுமை முதலிய சிறுமைகள் யாவும் ஒருங்கே ஒழிந்து பெருமைகள் பெருகி வரும் என்னும் இது இங்கே உரிமையோடு ஊன்றி உணர வுரியது.

புண்ணியம் உடையவர் அரிய பல மகிமைகளை அடைந்து விளங்குகின்றார், அஃது இல்லாதவர் அவல நிலைகளில் இழிந்து உழல்கின்றார். அறத்தை இழந்த போதே அவகேடுகள் விளைந்தன.

தான் கருதியபடியெல்லாம் எவ்வழியும் செவ்வையாக எவனும் எதையும் அடைய முடியாது; அவன் முன்பு செய்துள்ள அல்லது பின்பு செய்து வருகிற நல்வினையின் அளவே நல்ல பலன்கள் அவன்பால் வந்து சேர்கின்றன. ஈட்டி வந்த புண்ணிய கருமங்களே இன்பத்தைக் காட்டியருளுகின்றன.

மனம் நல்லதாய், வாக்கினியதாய், செயலிதமாய் ஒருவனுக்கு அமைந்துவரின் அவனிடம் புண்ணியம் பொங்கி வருகிறது. இந்த மூன்று கரணங்களையும் நல்ல வழிகளில் பழக்கி வருபவர் மேலோராய் உயர்ந்து எல்லா மேன்மைகளையும் எளிதே எய்துகின்றனர். மும்மையும் நலமாயின் எம்மையும் இனிதாம்.

புண்ணிய நீர்மை தோய்ந்த நல்லோருடைய உள்ளமும் சொல்லும் செயலும் எவ்வாறு இருக்கும்? என்பதைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள அயலே வருவதை ஊன்றியுணர்ந்து பொருள் நிலைகளைத் தெளிந்து கொள்ள வேண்டும்.

உள்ளம்

உள்ளச் செய்தி தெள்ளிதில் கிளப்பின்
இருள்தீர் காட்சி அருளொடு புணர்தல்;
பெரும்பொறை தாங்கல்; பிறன்பொருள் விழையாமை;
செய்தநன்று அறிதல்; கைதவம் கடிதல்:
பால்கோ டாது பகலில் தோன்றல்;
மான மதாணி ஆணியின் தாங்கல்:
அழுக்கா(று) இன்மை; அவாவில் தீர்தல்;
அருந்துயர் உயிர்கட்(கு) இருந்த காலை
அழல்தோய் வுற்ற மெழுகே போலக்
கழலும் நெஞ்சில் கையற்(று) இனைதல்;
பன்னருஞ் சிறப்பின் மன்னுயிர்த் தொகைகட்(கு)
அறிவும் பொறியும் கழிபெருங் கவினும்
பெறற்கரும் துறக்கமும் இறப்ப ஊங்குத்
தம்மினும் வேண்டும் என்றெண்ணும் பெருங்குணம்:

சொல்

வாக்கொடு சிவணிய நோக்கின் மீக்கொள
அறம்பெரி(து) அறைதல்; புறங்கூ றாமை:
வாய்மை கல்வி தீமையில் திறம்பல்;
இன்மொழி இசைத்தல்; வன்மொழி மறுத்தல்;
அறிவு நூல் விரித்தல்; அருமறை கழறல்
அடங்கிய அறைதல்; கடுஞ்சொல் விடுத்தல்:
பயனுள படித்தல்; படிற்றுரை விடுத்தல்:

செயல்.

காயத்(து) இயைந்த வீயா வினையுள்
அருந்தவம் தொடங்கல்; திருந்திய தானம்;
கொடைமடம் படுதல்; படைமடம் படாமை;
அமரர்ப் பேணல் ஆகுதி அருத்தல்;
ஒழுக்கம் ஓம்பும் விழுப்பெருங் கிழமை;
ஐம்பெரும் பாதகத்(து) ஆழி நீந்தல்
இந்தியப் பெரும்படை இரிய நூறும்
வன்தறு கண்மை; வாளிட் டாங்கு
நோவன செய்யினும் மேவன செய்தல்;
தவச்சிறி(து) ஆயினும் மிகப்பல விருந்து
பாத்துாண் செல்வம், பூக்கமழ் இரும்பொழில்
தன்மனைக் கிழத்தி அல்லதை பிறர்மனை
அன்னையின் தீரா நன்னர் ஆண்மை;
35 கார்கோள் அன்ன நயம்பல கிளைத்தல்;
கூவல் தொட்டல், ஆதுலர் சாலை:
அறங்கரை நாவின் ஆன்றோர் பள்ளி,
கடவுட் கண்ணிய தடவுநிலைக் கோட்டம்,
இனையவை முதலா நினைவரும் திறத்த
40 புரத்தல் மாதோ அறத்துறை, மறத்துறை
இவற்று வழிப்படாஅது எதிர்வன கெழீஇ
உஞற்றென மொழிப உணர்ந்திசி னேரே...' - ஞானாமிர்தம்

மனம் மொழி மெய்களால் விளையும் புண்ணிய நிலைகளை இது வரைந்து குறித்துள்ளது. உரைக்குறிப்புகள் ஓர்ந்து சிந்திக்கத் தக்கன.

எல்லா மேன்மைகளுக்கும் மனமே மூல காரணமாயுள்ளது; அது நல்லதாக அமையின் யாவும் நலமாய் மேவி வருகின்றன. மன நலமுடையவனிடம் எல்லா நன்மைகளும் இனமாய் வந்து சேருதலால் உயர்ந்த கதியை அவன் விரைந்து அடைந்து கொள்கிறான். புனித மனமே புண்ணியம் ஆகிறது.

ஒருவன் உள்ளம் தூய்மையாய பொழுது தருமதேவதை அவனிடம் உரிமையாய் ஒளிபுரிந்தருளவே அதிசய நிலையில் யாண்டும் அவன் துதிகொண்டு திகழ்கின்றான். அவன் எதிரே எவரும் தலை வணங்கி நிற்கின்றார்.

பரசுராமன் பெரிய தவமுடையவன்; அரிய போர்வீரன்; அரசர் மரபிடம் கறுவு கொண்டிருந்தானாதலால் அந்த வரிசையில் வந்த இராமனேடு போராட நேர்ந்தான். சினந்து முனைந்து சீறி மூண்ட அவன் இராமன் எதிரே விரைந்து தோல்வி அடைந்தான். தனது தோல்வியை உணர்ந்த அவன் எதிரியை வியந்தான். இராமனிடம் தருமம் நிறைந்துள்ளமையால் தன்னை எளிதே வென்று நின்றான் என்று வியந்து புகழ்ந்தான். 'தரும மூர்த்தியே! உன்னை யாரும் வெல்ல முடியாது; நீயே எவரையும வெல்ல வல்லவன்; கருதிய எவையும் உனக்கு இனிது கைகூடும்” என்று உரிமையோடு தொழுது உவந்து புகழ்ந்து போனான்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

எண்ணிய பொருளெலாம் இனிது முற்றுக!
மண்ணிய மணிநிற வண்ண! வண்துழாய்க்
கண்ணிய யாவர்க்கும் களைகண் ஆகிய
புண்ணிய விடைஎனத் தொழுது போயினான். 40

- பரசுராமப் படலம், பால காண்டம், இராமாயணம்

இராமனுடைய அதிசய நிலையை உணர்ந்ததும் பரசுராமன் இவ்வாறு துதிசெய்து தொழுது போயிருக்கிறான். புண்ணிய என்று கண்ணியமாய் விளித்தது தருமமே இவனுக்கு அதிசய வெற்றிகளை அருளியுள்ளது என்பது தெளிய வந்தது.

தருமத்தை இவ்வீரன் போற்றியிருக்கும் நிலை இவனது சீவிய காவியத்தில் ஓவிய உருவங்களாய் ஒளி புரிந்து திகழ்கின்றது. உரைகள் எல்லாம் தருமங்களையே உணர்த்தியுள்ளன.

அறத்தி னாலன்றி, அமரர்க்கும் அருஞ்சமம் கடத்தல்
மறத்தி னாலரி(து) என்பது மனத்திடை வலித்தி; 251

- முதற்போர் புரி படலம், யுத்த காண்டம், இராமாயணம்

படைகள் யாவுமிழந்து போரில் தன்னெதிரே தோல்வியடைந்து நின்ற இராவணனை நோக்கி இராமன் இப்படிக் கூறியிருக்கிறான். ’தருமமே வெற்றி தரும்; அதனை இழந்தவன் உயர்ந்த தேவனாயினும் இழிந்தே படுவான் என்பதை இனிமேலாவது நீ தெளிந்து கொள்!” என்று அந்த நிருதர் பதிக்கு இந்த நீதிபதி போதித்திருக்கும் நீர்மை உணர்ந்து தெளிய வுரியது.

எல்லாப் பெருமைகளையும் இனிது நல்கி எவ்வழியும் இன்பமே தருகிற தருமத்தை இயன்றளவு தழுவி வருவதே உயர்ந்த மனிதனாய்ப் பிறந்து வந்ததின் சிறந்த பயனாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

பிறந்துநாம் பெருகி நின்றாம் பேணிய உடம்பு நீங்கி
இறந்துபோய்ச் சேர்ந்து நிற்கும் எல்லையும் தெரிய வில்லை;
மறந்துமுந் திரிவாழ் நாளை மயங்கியே களிக்கின் றேமால்
அறந்துணை அன்றி வேறே அருந்துணை யாதும் இன்றே. 75

குணத்தினை மறந்து பொல்லாக் கொடுமையும் சூதும் சூழ்ந்து
பணத்தினைப் பரிந்து பற்றிப் பழிபவம் வளர நாளும்
பிணத்தினை வளர்த்து நின்றார் பேயர்கள் உயிரைப் பேணி
மணத்தினை அடையா(து) அந்தோ மயங்கிவா ளாம டிந்தார். 78

- காட்சி தெளிந்த படலம், வீர பாண்டியம்

அறத்தை ஒருவி அவலங்களைத் தழுவி அவமே இழிந்து அழிந்து போகாதே; புண்ணியத்தை மருவிப் புனிதனாய் உயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-21, 11:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 65

சிறந்த கட்டுரைகள்

மேலே