நல்ல அரசொருவன் நண்ணானேல் வல்லயிஞ் ஞாலம் இனிது நடவாது - அரசு, தருமதீபிகை 755

நேரிசை வெண்பா

எல்லா வளங்களும் எய்தி இருந்தாலும்
நல்ல அரசொருவன் நண்ணானேல் - வல்லயிஞ்
ஞாலம் இனிது நடவாதே மீகாமன்
காலழிந்தால் என்னாம் கலம். 755

- அரசு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நாட்டில் செல்வ வளங்கள் பல செழித்திருந்தாலும் நல்ல ஒரு அரசன் (ஆட்சியாளன்) அங்கு இல்லையானால் இவ்வுலக வாழ்வு இனிது நடவாது, தலைவன் இல்லாத கலம் போல் யாவும் நிலை குலைந்து போகும்; அங்ஙனம் போகாமல் போற்றி வருபவனே புரவலன் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனித சமுதாயத்தின் வாழ்வு இனிது நடைபெறப் பல வகையான வசதிகள் தேவையாயுள்ளன; அவை யாவும் மேவியிருந்தாலும் யாவரும் அமைதியாய் வாழ அங்கே ஒரு தலைவன் நிலையாயிருக்க வேண்டியது நியமமாய் நேர்ந்தது. சிறிய கூலித் தொழிலாளர் கூட்டத்தையும் சரியாய் நடத்த அங்கு ஒரு மேலாள் வேண்டியிருப்பதை அனுபவத்தில் கண்டு வருகிறோம். கண்காணி என்னும் பெயர் அவன் கண்டு புரிந்து வரும் காட்சியை நேரே காட்டி நாட்டின் ஆட்சியை நினைவூட்டிவருகிறது.

பூபாலன் அரசனுக்கு ஒரு பெயர். பூமியை நன்கு பரிபாலித்து வருபவன் என்பது அதற்குப் பொருள். ஆகவே பூமியோடு அவனுக்குள்ள தொடர்பையும் காணியாட்சியாய்ப் பேணி வரும் நிலையையும் இதனால் உணர்ந்து கொள்கிறோம்.

நேரிசை வெண்பா
(‘பா’ ’வா’ அனுவெதுகை)

பூபாலன் இல்லையேல் பூமி புலைபடிந்து
கோபாலன் இல்லாத கோக்கள்போல் - ஓவாமல்
மக்கள் மறுகி மயங்கி யுழலுவார்
பக்கம் சிதைந்து பரிந்து.

தம்மை மேய்த்துப் பாதுகாத்து வரும் கோன் இல்லையானால் பசுக்கள் எப்படி நிலை குலையுமோ அப்படியே அரசன் இல்லையானால் மக்கள் மறுகி உழல்வர் என இது குறித்துள்ளது. உவமைக் குறிப்புகள் ஓர்ந்து உணர்ந்து கொள்ளத் தக்கன.

கடலில் ஓடும் கப்பலுக்கு அதனை ஓட்டுந் தலைவன் எவ்வாறு உறுதி பூண்டுள்ளானோ அவ்வாறே உலகில் ஓடும் மனித வாழ்க்கையாகிய கப்பலுக்கு அரசன் தலைமை தாங்கி நிற்கின்றான். நீரின் ஓட்டமும், நிலத்தின் ஓட்டமும் நேரொத்து நின்றன.

’மீகாமன் அழிந்தால் கலம் என்னாம்?’ என்றது நிலைமையை நினைந்து தெளிய வந்தது. கலம் - மரக்கலம். மீகாமன் - கலத்தை நடத்தும் தலைவன். மேலாளாய் நின்று ஆழி நிலைகளை ஆய்ந்து நோக்கிக் கலத்தை நலமாய்ச் செலுத்துபவனாதலால் கப்பல் ஓட்டி மீகாமன் என நேர்ந்தான்.

விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர். - மதுரைக் காஞ்சி

சிறந்த மரக்கலங்களை நெடிய கடலில் கடிது ஒட்டும் உயர்ந்த மீகாமர் இந்நாட்டில் இருந்து வந்துள்ள நிலையை இது வரைந்து காட்டியுளது. காலநிலைகளை நூல்களால் அறிந்து கொள்கிறோம்.

செலுத்தும் தலைவன் இல்லையானால் கலம் நிலைகுலைந்து அழியும்; அதுபோல் உரிய அரசன் இலனேல் நிலம் பலவகையிலும் சிதைந்து பரிந்துபடும். கண்ணுக்கு ஒளி போல் மண்ணுக்கு மன்னன் மருவியிருக்கிறான்; உரிமையான அவன் இல்லையானால் நிலம் சிறுமையாய் இழிவுறும்.

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

வள்உறு வயிரவாள் அரசில் வையகம்,
நள்உறு கதிரிலாப் பகலும், நாளொடும்
தெள்ளுறு மதிஇலா இரவும், தேர்தரின்,
உள்உறை உயிரிலா உடலும், ஒக்குமே. 7

தேவர்தம் உலகினும், தீமை செய்துழல்
மாவலி அவுணர்கள் வைகும் நாட்டினும்,
ஏவெவை உலகமென்(று) இசைக்கும் அன்னவை
காவல்செய் தலைவரை இன்மை கண்டிலம். 8

முறைதெரிந்(து) ஒருவகை முடிய நோக்குறின்,
மறையவன் வகுத்தன, மண்ணில், வானிடை,
நிறைபெருந் தன்மையின் நிற்ப, செல்வன,
இறைவரை இல்லன யாவும் காண்கிலம், 9

பூத்தநாள் மலரயன் முதல புண்ணியர்
ஏத்துவான் புகழினர், இன்று காறும்கூக்
காத்தனர்; பின்னொரு களைகண் இன்மையால்,
நீத்தநீர் உடைகலம் நீர(து) ஆகுமால். 10

- ஆறு செல் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்

இந்த நான்கு கவிகளையும் கவனித்துப் படித்து, பொருள் நயங்களைக் கூர்ந்து நோக்குங்கள். உலகுக்கும் அரசுக்கும் உரிய தொடர்புகளைக் குறித்து வசிட்ட முனிவர் பரதனுக்கு உரைத்து வரும்பொழுது இவ்வாறு உண்மைகளை விளக்கிக் கூறியிருக்கிறார்.

கதிரும் மதியும் பகல் இரவை விளக்கி வருகின்றன; உயிர் உடலை இயக்கி வருகிறது. தேவர், கந்தருவர், விஞ்சையர், இயக்கர், அசுரர் முதலியோர் வாழுகின்ற எந்த உலகங்களும் தலைவர்களாலேயே நிலவி வருகின்றன. பிரம சிருட்டியில் தோன்றிய சராசரங்கள் யாவும் தமக்கு உரிய தலைமையை மேவியே தழைத்து வருகின்றன. யானைக் கூட்டத்திற்கும் தலைமையிருக்கிறது; தலைவனாயுள்ள அந்த யானைக்கு யூதபதி என்று பேர். குரங்குக் கூட்டங்களுக்கும் தலைமையுள்ளது; அந்தத் தலைமைக் குரங்குக்கு யூகபதி எனப் பேர். தேனிக்களுக்கும் தலைமை அமைந்துள்ளது. ராணி ஈ என அதன் பெண் இனத் தலைமையைக் கூறி வருதலால் ராசாவின் மேன்மையைத் தெரிந்து கொள்ளலாம். எந்தப் பிராணியும் சொந்தமான ஒரு தலைமையில் வாழ்ந்து வருவது விந்தையாய் விளங்கி வருகிறது. தாய் இல்லாத சேய் இல்லை; தலைமை இல்லாத நிலைமை இல்லை.

’இறைவரை இல்லன யாவும் காண்கிலம்’ என முனிவர் இவ்வாறு தெளிவாக விளக்கியுள்ளது ஊன்றி உணர வுரியது. இயற்கை நியமங்கள் இங்கே இனிது விளங்கி யுள்ளன. காப்பாளரின் காட்சியும் மாட்சியும் காண நேர்ந்தன.

’புண்ணியர், புகழினர் கூக் காத்தனர்’. என்றது (கூ – பூமி) இராமனது குல மரபில் வந்த அரசரது மகிமை தெரிய வந்தது. கீர்த்திகளை வார்த்தைகளால் வார்த்திருக்கின்றார்.

பெரிய புண்ணியங்களால் அரிய அரசர்கள் அமைந்து வருதலால் புண்ணியர் என அவரது நிலைமை தலைமைகளை எண்ணி யுணர வுரைத்தார். பிறப்பும் சிறப்பும் குறிப்போடு கூடிவந்தன.

இங்ஙனம் தலைமையை மருவி நிலவி வருகிற உலகத்துக்கு ஆதிமுதல் உங்கள் குல மரபு உயர்ந்த நீதி மன்னரை உதவி வந்துள்ளது. அந்த வரிசையில் வந்துள்ள நீ இந்த அரசை ஏற்றருள வேண்டும் என்று பரதனிடம் பரிந்து வேண்டுகின்றாராதலால் அந்த விரத முனிவர் கூரிய உரைகள் சீரிய பொருள்களுடையன.

இராமாயண காவியத்தில் இராச தருமங்கள் நிறைந்திருக்கின்றன. அரச நீர்மைகளையும் ஆட்சி முறைகளையும் உரிய பாத்திரங்களின் வாயிலாய் வெளிப்படுத்தி இடங்கள் தோறும் கம்பர் பெருமான் வரைந்து வைத்திருக்கும் வகைகள் சிறந்த காட்சிச் சாலைகளாய் விளங்கி நிற்கின்றன. காளிதாசர் முதலிய பெரிய கவிகள் ரகுவம்சம் முதலிய நூல்களில் இராச நீதிகளை விரித்துக் கூறியிருக்கின்றார்; ஆயினும் கம்பரது அரசியல் காட்சி அதிசய நிலையில் ஒளி வீசியுள்ளது.

கம்பரும் அரசியலும் என அரிய நூல் எழுதும்படி பெரிய உணர்வு நலங்கள் பெருகி யிருக்கின்றன. இருந்து என்ன பயன்? எழுதி என்ன செய்ய? அருமை அறியாமல், அறிவை மதியாமல், தகுதி கண்டு பேணாமல் போலிகளை உவந்து கால வேகத்தில் மயங்கிச் சாலவும் மருண்டு வெருண்டு இருண்டு திரிகிற மக்கள் எதிரே தக்கது தலை எடுத்து வருமா?

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

எந்நாட்டும் பெறலரிய இனியபெருங் கலைச்செல்வம்
இயல்பாய் ஓங்கி
இந்நாட்டில் என்றுமே எழிலோடு பெருகியுளது
இருந்தும் அந்தோ!
தந்நாட்டம் தெரியாமல் தனிநாட்டம் காணாமல்
தவறே மண்டிப்
புன்னாட்டம் உடையராய்ப் புலையாடித் திரிகின்றார்
புன்மை என்னே! 1

அறிவிலெழும் ஆனந்தம் அறியாமல் அயலொதுங்கி
அவமே பேசிப்
பொறியிலெழு சுவைகளையே பொங்கியெங்கும் நுகர்கின்றார்,
புலமை யின்பம்
நெறியிலெழு கலையிலன்றி நிலைதிரிந்து புலைபேசி
நிமிர்ந்து நிற்கும்
வெறியிலென்றும் விளையாதே; விளைவறியா(து) இழிவுறுதல்
விளிவே அம்மா! 2

கலைகளையாம் வளர்க்கின்றேம் காசினியீர்! என்றுசிலர்
கலையின் பேரால்
கொலைகளையே வளர்க்கின்றார், கொடுமைகளே செய்கின்றார்,
குரோத மான
புலைகளையே புரிகின்றார், பொய்வஞ்சம் வீண்பெருமை
பொறாமை யாதி
நிலைகளையே விளைக்கின்றார்; நேராக விளைவதனை
நினையார் அந்தோ! 3

தாய்மொழியும் கல்லாமல் தந்தைமொழி கேளாமல்
தனையர் என்று
வாய்மொழிகள் பலபேசி வயிற்றளவில் குறிக்கோளை
வளர்த்து நேரே
பேய்மொழிகள் பேசுதல்போல் பிழையாகப் பிதற்றுகின்றார்;
பெருமை எல்லாம்
தூய்மொழியில் தோய்நினைவில் தொழிலியலில் துருவிவரும்
தொடர்தல் நன்றே. 4 இந்தியத்தாய் நிலை

இந்நாட்டு நிலையை நினைந்து வருந்தி இந்தப் பாட்டுகள் வந்துள்ளன. பாடு தெரிந்து நாடு திருந்தி நலம் பெற வேண்டும்.

அரசு முறை புரிவது அரிய செயல். பலவும் ஆராய்ந்து நெறியோடு கருதிச் செய்யின் பெருமை மிகப் பெற்று அரிய பல பலன்களையும் அரசன் அடைவான். மடி, மடமை முதலிய இழிவுகள் படிந்து பிழையாய் அவன் வழுவியிருப்பின் எவ்வழியும் அழி துயரங்கள் பெருகி விடும்; ஆட்சியும் நழுவி ஒழிய நேரும்; அவலக் கேடனாய் அவன் பழிபட நேர்வான்.

நேரிசை ஆசிரியப்பா

கால்பார் கோத்து ஞாலத் தியக்கும்
காவற் சாகா டுகைப்போன் மாணின்
ஊறின் றாகி யாறினிது படுமே
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
5 பகைக்கூழ் அள்ளற் பட்டு
மிகப்பஃ றீநோய் தலைத்தலைத் தருமே. 185 புறநானூறு

உலகில் ஆட்சி முறை ஆகிய தேரைச் செலுத்துகிற அரசன் எவ்வகையிலும் தேர்ச்சி பெற்று மாட்சி உடையனாயிருக்க வேண்டும்; அவ்வாறிருந்தால் அந்த ஆட்சி எவ்வழியும் செவ்வையாய் இனிது நடைபெறும்; அவன் மாண்பு இலனாயின் அது பிழையாயிழிந்து அழிவில் வீழ்ந்துவிடும் என அரசு நிலையை விளக்கிப் பேணும் முறையை இது துலக்கியுள்ளது.

தொண்டைமான் இளந்திரையன் என்னும் அரசன் தனது உரிமையை மகனிடம் தரும் பொழுது ஆட்சி நிலைமையை இவ்வாறு காட்சிப் படுத்தியருளினான். தேரைச் செலுத்தும் சாரதி போல் அரசன் பாரைச் செலுத்துகிறான். பாகன் பிழைபடின் தேர் பாழாம்; அரசன் வழுவுறின் பார் பாழாம். ஒரு புகை வண்டியைச் செலுத்திச் செல்கிற சாரதி குடி வெறியனாய்த் தவறுபடின் வண்டிகள் நொறுங்கிப் போகும்; ஏறிச் சென்ற சனங்களும் அல்லலுழந்து அலமந்து அழிவர்; ஒரு நாட்டை ஆளுகிற அரசன் ஆட்சியை மாட்சிமையோடு நன்கு செலுத்தவில்லையானால் நாடு நாசமாம்; குடிசனங்களும் படுதுயரங்களை அடைவர். தேரும் பாரும் ஊர்பவரால் ஒளி பெறுகின்றன.

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

ஆர்வலஞ் சூழ்ந்த வாழி யலைமணித் தேரை வல்லான்
நேர்நிலத்(து) ஊரு மாயின் நீடுபல் காலஞ் செல்லும்;
ஊர்நிலம் அறிதல் தேற்றா(து) ஊருமேன் முறிந்து வீழுந்
தார்நில மார்ப! வேந்தர் தன்மையும் அன்ன தாமே. 311 முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

தனது அரசுரிமையைத் தன் மகனுக்கு அருள நேர்ந்த சீவக மன்னன் இன்னவாறு அரச நீதியை அவனுக்கு இனிது போதித்திருக்கிறான். நெறி முறைகளை ஓர்ந்து வேந்தர் அரசை நடத்தின் அது வழிமுறையாய் நிலைத்து நெடிது நிலவி வரும்; அவ்வாறு ஆளாராயின் அரசு பாழாயழியும்; அவரும் பழியில் இழிந்து அழிந்து போவர். இவ்வாறு அழிவுகள் நேராமல் விழுமிய நிலையில் அரசை விழியூன்றிப் பேணுக என மைந்தனுக்கு மன்னன் அறிவுறுத்தி யிருக்கும் அரச நீதிகள் யாரும் கருதியுணர வுரியன.

அரச பதவி எவ்வளவு பொறுப்புடையது; எத்துணை நெறியோடு கவனித்து நடக்கத் தக்கது என்பன இங்கே உய்த்துணர வந்தன. இனிய சுக போகங்களை நுகர்ந்து இறுமாந்து இருப்பதுதான் அரசு நிலை என்று கருதின் அது கொடிய மடமையாம். தம் கடமையை மறந்த மடமைகளாலேயே அரசுகள் யாவும் அடியோடு அழிந்து மறைய நேர்ந்தன.

கிடைத்த அரசு நெடிது நிலைத்து வரவேண்டுமானால் நேர்ந்த தலைவர்கள் நெறிமுறையோடு நின்று தரும நீதிகளைக் தழுவி எவ்வழியும் ஆட்சியைச் செவ்வையாய் நடத்தி வரவேண்டும். சிறிது வழுவினும் பெரிய கேடுகள் பெருகிவிடுமாதலால் யாதொரு பிழையும் புகாமல் ஆன்ற நெறியோடு ஒழுகி அரசை ஊன்றியுணர்ந்து வருவதே ஆணையாளர்க்கு யாண்டும் நலமாம்.

உள்ளம் தூய்மையாய் ஓர்ந்து வினை செய், உலகம் வாய்மையாய் உன்னைத் தேர்ந்து மகிழ்ந்து உரிமை கூர்ந்து கொள்ளும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-21, 12:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 100

சிறந்த கட்டுரைகள்

மேலே