இன்னல் எதிர்ந்தாலும் தாமேற்று இன்பருள்வார் மன்னவர் - அரசு, தருமதீபிகை 756

நேரிசை வெண்பா

என்னவகை இன்னல் எதிர்ந்தாலும் தாமேற்று
மன்னுயிர்கட்(கு) இன்பருள்வார் மன்னவர் - துன்னுகதிர்
காயும் வெயிலெல்லாம் காத்தினிய நன்னிழலை
ஈயும் மரம்போல் இனிது. 756

- அரசு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வந்து பாய்கிற சுடுவெயிலைத் தான் தாங்கிக் கொண்டு குளிர் நிழலை இனிது தரும் கனிமரம் போல் அரசர் தனி அமைந்துள்ளனர்; எவ்வளவு இடையூறுகள் நேர்ந்தாலும் அவ்வளவையும் எதிர்த்து நீக்கிக் குடிசனங்களை அவர் இனிது பேணியருளுவர்; அவரது கருமமுறை தரும நிலையமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அரசு ஆதரவு புரியும் இனிய நீர்மைக்கு மரம் தனி உவமையாய் வந்தது. சீர்மையான அதன் இயல்புகளை யெல்லாம் கூர்மையாய் ஓர்ந்து பொருள் நிலையைத் தேர்ந்து கொள்ள வேண்டும்.

உறவுரிமைப் பிணைப்புகளால் மனித சமுதாயம் இனிது இயங்கி வருகிறது. பிள்ளையைத் தாய் பேணுவதும், மனைவியைக் கணவன் ஆதரிப்பதும் முதலிய பாசத் தொடர்புகள் யாண்டும் படர்ந்து தொடர்ந்திருக்கின்றன. அந்தத் தொடர்புகளால் உலகம் தொடர்ந்து நடந்து முறையே துலங்கி வருகிறது.

ஒரு நாட்டில் வாழும் மாந்தர் அதனை ஆண்டுவரும் அரசனுக்கு உரிமையான பிள்ளைகள் போல்பவராதலால் அவரை எவ்வழியும் இனிது பேணும் கடமையை அவன் உடையவனாகின்றான். ஆகவே யாவரையும் அன்புரிமையோடு அவன் ஆதரிக்க நேர்கின்றான். செய்யும் ஆதரவளவே சீர்மை சேர்கின்றது.

தான் வருந்தி முயன்று தன் குடும்பத்தைப் பாதுகாக்கும் ஒரு குடும்பத் தலைவனைப் போல் தன் தேச மக்களை அரசன் பாசத்தோடு பாதுகாத்து வருகிறான், பிறப்புரிமையான கடப்பாடாயது அவனுக்குச் சிறப்பு நிலையில் அமைந்திருக்கிறது.

தான் என்ன இன்னல்களை அடைந்தாலும் தன்னை அடைந்தவரை இனிது ஆதரிப்பவனே உயர்ந்த மன்னனாய் ஒளிபெற்று நிற்கின்றான். அன்னவனை யாவரும் தம் இன்னுயிராயெண்ணி ஏத்தி வருகின்றனர். ஆட்சி இனியதேல் மாட்சிகள் மருவுகின்றன.

முன்னாளில் இந்நாட்டில் அரசு புரிந்துவந்த அரசர்களிடம் அரிய பல நீர்மைகள் அமைந்திருந்தன. அவருள் ஒரு மன்னனுடைய பண்பாடுகளை அயலே வரும் கவியில் காண வருகிறோம்.

இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத் தகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய காயமும், என்றாங்
5. கவையளந் தறியினு மளத்தற் கரியை
அறிவு மீரமும் பெருங்க ணோட்டமும்
சோறு படுக்குந் தீயொடு
செஞ்ஞாயிற் றுத்தெற லல்லது
பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே
10. திருவி லல்லது கொலைவில் லறியார்
நாஞ்சி லல்லது படையு மறியார்
திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப்
பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு
வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது
15. பகைவ ருண்ணா வருமண் ணினையே
அம்புதுஞ்சுங் கடியரணால்
அறந்துஞ்சுஞ் செங்கோலையே
புதுப்புள் வரினும் பழம்புட் போகினும்
விதுப்புற வறியா வேமக் காப்பினை
20. அனையை யாகன் மாறே
மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே. 20 புறநானூறு

நல்ல ஆட்சியின் சீர்மையையும், அரசனது நீர்மையையும் இது காட்சிப்படுத்தியுள்ளது. குறுங்கோழியூர் கிழார் என்னும் சங்கப் புலவர் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை நோக்கி இன்னவாறு பாடியிருக்கிறார். 'அரசர் பெரும! உனது அறிவும் அன்பும் கண்ணோட்டமும் எண்ணோட்டம் கடந்தன; நின் குடைநிழலில் வாழ்பவர் இடர் நிலைகள் அறியார்; சோறு சமைக்கும் தீ வெப்பமும் சூரிய வெப்பமும் தவிர வேறு வெம்மை தெரியார்; வானத்தில் தோன்றும் இந்திர வில்லைக் கண்டிருப்பரே யன்றி அயலே பகைவரது வில்களைக் கண்டிரார்: உழுகிற கலப்பைகளைப் பார்த்திருப்பார்; மாற்றாருடைய வாள், வேல் முதலிய படைக்கலங்களைப் பார்த்தறியார்; தரும தேவதை தங்கியுள்ள உனது செங்கோலால் எங்கும் இன்பநலன்கள் பொங்கியிருக்கின்றன; ஆதலால் யாவரும் ஆவலோடு உன்னைப் போற்றி நிற்கின்றனர்; யாதொரு அல்லலும் நேராமல் நல்ல சுகமாய் என்றும் நீ இனிது வாழவேண்டும் என்று அல்லும் பகலும் உள்ளம் உருகி உரிமையோடு இறைவனை வேண்டி வருகின்றனர்' என ஈண்டிய நண்போடு அரசர் எதிரே புலவர் இவ்வாறு கூறியுள்ளார். குடிகளை அரசன் எவ்வாறு பேண வேண்டும் என்பது இங்கே காண வந்துள்ளது.

உலக மக்கள் எவ்வழியும் அமைதியாய் இனிது வாழும்படி புரிவது அரசனது தனியுரிமையான கடமையாம். அக்கடமையை அவன் நன்கு செய்துவரின் புகழும் புண்ணியமும் அவனிடம் பொங்கி வரும்; சீவர்கள் யாவரும் அவனைப் பேரன்போடு புகழ்ந்து யாண்டும் போற்றி வருவர்.

வையகம் முழுவதும் வறிஞன் ஓம்புமோர்
செய்எனக் காத்து இனிதரசு செய்கின்றான். - இராமா, அரசியல், 12

தசரதச் சக்கரவர்த்தி வையத்தைக் காத்து வந்த வகையை இது காட்டியிருக்கிறது. உவமானக் காட்சி பொருளைத் தெளிவாய் விளக்கி உணர்ச்சிக்கு ஒளியூட்டியுள்ளது. எளிய ஒரு குடியானவன், மனைவியும் நான்கு குழந்தைகளும் உடையவன்; ஒரு ஏக்கர் நிலமே அவனுக்கு உரிமையாயிருக்கது; அதில் விளைந்து வருவதைக் கொண்டுதான் தன் குடும்பத்தை அவன் நடத்த வேண்டும் ஆதலால் அதனை எந்த வேளையும் செவ்வையாய்க் கவனித்தான். நன்கு உரமிட்டு உழுது பண்படுத்திப் பருவம் பார்த்து விதைத்து நீர் பாய்ச்சிக் களைகளை நீக்கிப் பயிர்களை வளர்த்துப் பட்டி முதலிய கெட்டது யாதும் புகாமல் பாதுகாத்து நெல்லை நிறைய விளைத்துக் குடும்பத்தை இனிது பேணி வந்தான். அதுபோல் வையகம் முழுவதையும் தசரதன் செவ்வையாய் ஆட்சி செய்து வந்தான். செல்வ வளங்கள் நிறைந்த அரசர் பெருமானை வறிஞனோடு ஒப்பவைத்துப் பாதுகாப்பின் பண்பாடுகளை விளக்கியிருக்கும் நுட்பம் உய்த்துணரத் தக்கது. நாட்டைப் பாதுகாப்பதிலேயே தன் நாட்டத்தைச் செலுத்தி வருபவனே நல்ல அரசன் ஆவான். தேசமக்கள் சிறந்த நிலையில் மகிழ்ந்து வாழ்ந்துவரப் புரந்து வருவதே உயர்ந்த ஆட்சியாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jan-21, 8:25 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 81

சிறந்த கட்டுரைகள்

மேலே