அண்ணல் அரசன் அருள்நீதி இல்லானேல் ஈனமாம் - அரசு, தருமதீபிகை 759

நேரிசை வெண்பா

அண்ணல் அரசன் அருள்நீதி இல்லானேல்
எண்ணரிய சீருறினும் ஈனமாம்; - வண்ணவொளி
இல்லையெனில் கண்ணிருந்தும் என்னாம்? இனியவுயிர்
இல்லையெனின் மெய்என்னாம்? எண். 759

- அரசு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மாண்பு மருவிய மன்னன் சீவ கருணையும் தரும நீதியும் தழுவியிருக்க வேண்டும்; அவையிலனாயின் அளவிடலரிய பெருமைகள் நிறைந்திருந்தாலும் யாவும் அவமேயாம்; ஒளியிழந்த விழிபோல் உயிரிழந்த உடல் போல் அவன் இழிவே அடைவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கண் அருளையும், உயிர் நீதியையும் கருதி வந்துள்ளன. தன் உயிரென நீதியை மன்னன் பேணிவரின் யாவும் காணியாய் அவனைக் காண வரும். பல உயிர்களை நலமாய்க் காத்து வரும் பொறுப்பு அரசனிடம் மருவியுள்ளது. அரிய பெரிய கருமக் கடமைகளை யுடையவன் தருமத் தொடர்போடு தழுவி வருகிறான். குடிசனங்களிடம் பிழைகள் நுழையாமல் பாதுகாக்க நேர்ந்தவன் விழுமிய நீர்மைகள் தோய்ந்து வர நேர்ந்தான். அந்த நல்ல தன்மைகளுள் அருள் தலைசிறந்துள்ளது. உயிர்கள் துயருறாமல் இரங்கி அருளுவது உயர்ந்த புண்ணியமாய் ஒளிசிறந்து நின்றது. உள்ளத்தில் அளிசுரந்து வருமளவு அரசன் வெளியே ஒளிமிகுந்து வருகிறான். புகழையும், இன்பத்தையும், பதவியையும் நிலைநிறுத்தி வருதலால் தண்ணளி அரசுக்குப் புண்ணியத் திருவாய்ப் பொலிந்து நின்றது.

மன்னனிடம் மருவியுள்ள அளி மன்னுயிர்களுக்கு இன்னமிர்தமாய் இனிமை புரிந்து வருதலால் வையம் அவனை எவ்வழியும் வாழ்த்தி வழிபட்டு வருகிறது. உலகம் நலமுற ஒளிசெய்து அருளுகிற இந்த அளி அரசனிடம் இல்லையானால் மாந்தர் மறுகி வருந்துவர். அவ்வேந்தனும் வீணே இழிந்து படுவான்.

துளியின்மை ஞாலத்திற்(கு) எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு. 557 கொடுங்கோன்மை

மழை இல்லையானால் வையம் எவ்வாறு வாடி வருந்துமோ அவ்வாறே வேந்தனிடம் அளி இல்லையானால் அந்த நாட்டுக் குடிசனங்கள் படு துயருழந்து பரிதபிப்பர் என வள்ளுவர் இவ்வாறு கூறியுள்ளார். மழையோடு நேர் வைத்து மன்னனுடைய நீர்மையை விளக்கியிருக்கும் சீர்மை உன்னி யுணரவுரியது.

பிள்ளைகளிடம் உள்ளmuருகி உரிமை செய்துவரும் தாய் போல் குடிமக்களிடம் அருள்புரிந்து அரசன் ஆதரவு செய்ய வேண்டும்; அவ்வாறு செய்து வருமளவே அரசும் குடியும் வரிசையாய் வளம்சுரந்து வரும்; இந்த அருளைச் செய்யாது மாறின் அந்த அரசு பொலிவிழந்து நலிவடைந்து தொலையும். குடிக்கு அளிபுரியின் முடிக்கு ஒளி புரிகின்றது.

’அருளில்லாத அரசை ஒளியில்லாத கண்’ என்றது நிலைமையை எண்ணியுணர வந்தது. கண் உருவமாயிருந்தாலும் உள்ளே ஒளியில்லையானால் அது விழிகுருடாய் இழிபழியே அடையும்; அதுபோல் செல்வம் முதலிய நிலைகளால் அரசன் வெளியே பெருமையாயிருந்தாலும் அகத்தே அருள் இல்லையானால் கொடியவன் என்று வையம் அவனை வைது தள்ளும்.

அரசுமுறை கருதி நீதிநெறி ஒழுகி நாட்டை நன்கு பாதுகாத்துவரின் அந்த அரசனை யாவரும் உவந்து புகழ்ந்து உரிமை கூர்ந்து போற்றி வருவர்; தருமமும் அவனிடம் பெருகி வருமாதலால் உயர் தலைமையுடையனாய் ஒளி பெற்று விளங்குவான்.

நேரிசை வெண்பா

நீதி நெறியில் நிலைத்துவரும் நீதிமான்
ஆதி அருளை அடைகின்றான்; - நீதிநெறி
பேணா(து) இழிந்து பிழைபுரியின் பேதையாய்
வீணாய் அழிவன் விரைந்து.

அரசன் நெறிமுறை தழுவி நீதிமானாய் நின்றால் ஆதி முதல்வனுடைய அருளையடைந்து யாண்டும் நீண்ட பெருமை பெறுவான்; அவ்வாறின்றி நெறிகேடனாய் முறைபிறழ்ந்தால் பரிதாபமாயிழிந்து அவன் பாழ்படுவான் என இது உணர்த்தியுள்ளது. அரசு பாழாகாமல் பாதுகாப்பது நீதிமுறையேயாம்.

உயர்ந்த நிலையில் சிறந்து நிற்கின்ற அரசன் தனது கடமையை நன்குணர்ந்து எவ்வழியும் செவ்வையாய் ஒழுகிவர வேண்டும்; தான் சிறிது வழுவினால் உலகம் பெரிதும் வருந்திப் பிழைபட்டு பழியும் பாவமும் அடைந்து அவன் அழிவுற நேர்வான். அழிவு நேராமல் தொழில் புரிவதே அறிவாம்,

நீதியாய் முறைமை செய்துவரின் இறைமை எவ்வழியும் உரிமையாய் ஓங்கிவரும்; அது தவறினால் யாண்டும் அவகேடேயாம். ’செங்கோல் சீவன், வெங்கோல் சாவு’ என்றதனால் அரசனுடைய வாழ்வும் வீழ்வும் நன்கு அறியலாகும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

முறைமைமுட் டாது செய்து முழுநிலம் காப்பின் அந்த
இறைவனைச் செங்கோல் காக்கும் எளியசெவ் வியனும் ஆகான்,
குறைவளர் குற்றம் ஓரான் குணத்தொடு முறைசெய் யானை
நிறைதரு பாவம் தேய்க்கும் நெடும்பகை இன்றா மேனும். – விநாயக புராணம்

செங்கோலனாய் முறைபுரிந்து வரின் அந்த அரசன் நிறை திருவுடன் நெடிது வாழுவான்; நிலை தவறிக் கொடுமை புரியநேரின் அவன் அடியோடு அழிவான் என இது தெளிவாய் விளக்கியுளது.

’கொடுங்கோலன் கடுங்காலன்’ என்னும் பழமொழியால் அரசன் கொடியனானால் குடிகள் நெடிய துயரமடைவர் என்பது தெரிய வந்தது. நீர்மை தொலையவே நிலைமை தொலைந்தது.

உலக மக்களை இனிது பேணி வரும்படி உரிமையாய் வந்தவன் கொடுமையாய் மாறின் அவனுடைய அழிவு கடுமையாய் நிகழ்ந்து விடும். தன் அழிவுக்குத் தனது இழிவே காரணமாம்.

Tryanny hath been the untimely emptying of the happy throne nd fall of many kings. - Shakespeare

‘தங்கள் அரிய இனிய அரியணையிலிருந்து விரைந்து தள்ளி அநேக அரசர்களைக் கொடுங்கோல் கடுமையாய் அழித்திருக்கிறது’ என்னும் இது இங்கே நுனித்து உணர வுரியது.

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க்(கு) ஒளி. 556 கொடுங்கோன்மை

அரசர்க்குப் புகழும் பொருளும் செங்கோலால் உளவாம்; அது வழுவின் பழியும் அழிவும் விளையும் என இது உணர்த்தியுளது.

அரச பதவி அரிய பெரியநிலை; அந்தவுயர்ந்த தலைமையைப் பெற்றவர் தமது நிலைமையை உணர்ந்து எவ்வழியும் கடமையைக் கண்ணுான்றிச் செய்து செவ்வியராய் ஒழுகிவர வேண்டும்; அது அவர்க்கு அரிய பல மகிமைகளை அருளி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-21, 4:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 79

சிறந்த கட்டுரைகள்

மேலே