நாளை விடியலாம்
தன்னம்பிக்கைப் புத்தகங்களை
எங்கும் தேடியலைய வேண்டியதில்லை
தள்ளாமையாலோ,
பிள்ளைகள் தள்ளியதாலோ
தளர்ந்துவிடாமல்
நடுங்கும் விரல்களால்
பூத்தொடுத்து விற்கும் பாட்டி
குடிகாரக் கணவனுக்கும்
நேரம் தவறாமல் சோறிட
ஓடியாடி நாலு வீடு வேலைசெய்யும்
அஞ்சலை அக்கா
ஒட்டிவைத்த புன்னகையுடன்
ஊக்கு ,நகவெட்டி
புத்தகம் ,பொம்மை என
ஏதோ ஒன்றைக் கூவி விற்கும்
சின்னத்தம்பி பெரியதம்பி
இவர்கள் அனைவருமே
நாளை அல்லது நாளை மறுநாள்
விடிந்து விடும் என்ற நம்பிக்கையுடன்தான்
நம்மிடையே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் !
i