2ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் - 2
ஆன்மீக வழியில் அமைதி .....
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்

ஆன்மிகம் என்பது வீட்டை விட்டு வெளியேறி ஓடிப்போய் விடுவதோ, தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் தட்டிக் கழித்து விடுவதோ அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்மிகம் என்பது ‘நான்’ ‘என்னுடையது’ என்னும் அகப்பற்று, மோகம், தேகப்பற்று, ஆசை போன்ற புறப்பற்று எல்லாவிதமான பற்றுகளையும் மனதளவில் விடுவதே ஆன்மிகம் ஆகும். இத்தகைய பற்றுகள் எல்லாம் தாமரை இலைத்தண்ணீர்போல் நம்மிடம் இருக்க வேண்டும். இப்படி பற்றற்று நாம் வாழ்வதற்கு, அதில் மன உறுதிப்பாடு, மனபக்குவம் பெறுவதற்கு ஆன்மிகம் வழிகாட்டுகிறது. நாம் ஆடம்பரமான வாழ்க்கையில் ஆசையில்லாமல் பற்று இல்லாமல் இருந்தால், அதனால் வரக்கூடிய பணக்கஷ்டம் மனக் கஷ்டம் போன்றவை நம்மை அணுகுவதற்கு முடியாது. அதனால் நாம் விரும்பும் தேடும் அமைதி நம்மைத் தேடி வரும்.

சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், வடலூர் வள்ளலார், ரமணமகரிஷி, ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற அவதார புருஷர்கள் அவர்களின் அனுபவத்தின் மூலம், அவர்கள் கண்ட ஆன்மீக சம்பந்தமான வாழ்க்கைத் தத்துவங்களை அருள்மொழிகளாகவும் பாடல்களாகவும் நமக்குக் கொடுத்துள்ளனர். மனதில் தோன்றும் புதுப்புது ஆசைகளை நமது மனதில் சுமைகள்போல் நீ ஏற்றக்கூடாது. அவ்வாறு மனச்சுமைகளை ஏற்றும்போது , நீ மன அமைதியை இழக்க நேரிடும் என்பதை அறிந்து கொள்’ என்று இரமண மகரிஷி அறிவுறுத்தியுள்ளார். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதிலிருந்து திருவாசகத்தின் பெருமையை இதன்மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. திருவாசகத்தினை ஆழ்ந்து படிப்பதின் மூலம் உள்ளம் உருகும்படி பாடுவதன் மூலம் துன்பத்திலிருந்து விடுபட்டு மன அமைதி பெறலாம்.

மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை, சிக்கல்கள் உடையதாயும் கடினமானதாயும் தங்களது எண்ணங்கள் செயல்பாடுகள் மூலமாக அவர்களாகவே வரவழைத்துக் கொள்கிறார்கள். தற்போது ஆடம்பரமான வாழ்க்கைமுறை பரவலாக உலகெங்கும் மக்களிடம் காணப்படுகிறது. எளிமையான வாழ்க்கைமுறை தற்போது மறைந்து கொண்டு வருகிறது. மக்களால் தேவையில்லாத பழக்க வழக்கங்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவைகளை எல்லாம் மாற்றி நிம்மதி பெறவேண்டும் என்றால், பற்றற்ற வாழ்க்கை, தன்னடக்கம், மனத்தூய்மை, அன்புடன் கூடிய தன்னலமற்ற சேவை செய்யும் வாழ்க்கைமுறையை நாம் மேற்கொள்ள வேண்டும். நேர்மையான எளிமையான வாழ்க்கையை நடத்துவதற்கு நாம் ஒவ்வொருவரும் மனதில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் பக்தியையும் தியானத்தையும் வாழ்க்கையில் கடைபிடித்தால், எல்லாத் துன்பங்களிலும் இருந்து விடுபட்டு மன அமைதி பெறலாம் என்று ஆன்மிகம் நமக்கு வழி காட்டுகிறது.

மனிதர்கள் இப்படித்தான் உலகில் வாழவேண்டும் என்ற கருத்துக்களை வலியுறுத்திக் கூறும் ஆன்மீக நூல்கள், வாழ்க்கைத் தத்துவங்களை விளக்கும் நூல்கள் ஆன்மீகவாதிகளால் எழுதப்பட்டுள்ளது. வேதாந்த, உபநிடதங்களில் காணப்படும் ஆன்மீகக் கருத்துக்களை, தத்துவங்களை விளக்கும் நூல்கள் உள்ளன. ஆன்மீக சம்பந்தப்பட்ட புத்தகங்களை நாள்தோறும் படித்து , வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும். உபநிடதங்களில் காணப்படும் கருத்துக்களை, அதன் சாராம்சத்தினை அகத்தியர், விசுவாமித்திரர், போகர் போன்ற ஞானிகள், சித்தர்கள் பலரும் தங்கள் அனுபவத்தில் கண்டவற்றை உணர்ந்தவைகளை, தங்களைப்போல் மற்றவர்களும் தெரிந்து கொண்டு , ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண வேண்டும். மன அமைதி பெற்று உயர்நிலை அடையவேண்டும் என்று நினைத்து ஏடுகளில் எழுதி வைத்துள்ளனர். தாங்கள் எழுதி வைத்துள்ளபடி சித்தர்கள், ஞானிகள் ஆன்மீக வழியில் வாழ்ந்து காட்டி, அதிஉன்னத நிலையும் அடைந்துள்ளார்கள்.

ஆன்மீகம் சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் ஆன்மீக முன்னேற்றம் மன அமைதி போன்றவை முழுவதும் கிடைப்பதில்லை. ஆனால் ஆன்மீக நூல்களை படிக்கும்போது நமது எண்ணங்கள் அலைபாயாமலும், படிக்கும்போது தீய எண்ணங்கள் எதுவும் நமது மனதில் உருவாகாமலும் நம்மை பாதுகாக்கும். நமது மனதில் ஏற்படும் துன்பங்கள், குழப்பங்களுக்கு ஓர் தீர்வும் மன ஆறுதலும் அப்போது கிடைக்கும் . “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று திருவள்ளுவர் திருக்குறளில் கூறியதுபோல் , நாம் ஆன்மீக நூல்களில் கூறப்பட்டுள்ள வாழ்க்கைத் தத்துவங்களை நன்கு கற்றறிய வேண்டும். கற்றறிவதொடு தகுந்த குருவின் துணையோடு அவற்றை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். அதன்மூலம் நமக்கு ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுவதோடு மனஅமைதியும் கிடைக்கும். மன அமைதி விரும்புவோர் உலகில் காணும் அநித்தியமான பொருள்கள் மீது பேராசை கொள்ளக் கூடாது.

இதற்கு ஒரு கதை உண்டு. ஒரு பேரரசன் காட்டு வழியாக குதிரையில் செல்லும்போது, அங்கு ஒரு முனிவரை ஆசிரமத்தில் சந்திக்கிறான். அந்த முனிவர் தூய்மையுடையவராகவும் மிகுந்த தவசீலராகவும் இருப்பதைக் கண்ட மன்னன் அவர் கஷ்டப்படாமல் இருப்பதற்கு, ஏதேனும் தான் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து, "சுவாமி தாங்கள் தயவுசெய்து என்னோடு நாட்டிற்கு வருகை புரிந்து, நான் அன்புடன் தரும் பொன் பொருள்களைப் பெற்றுச் செல்ல வேண்டும்" என்று பணிவுடன் வேண்டிக் கொண்டான்.

அதற்கு அந்த முனிவர் " மன்னா, நான் வசிக்கும் இந்த வனத்தில் எனது பசிக்கு வேண்டிய இனிய கனிகள் கிடைக்கிறது. நான் அருந்துவதற்கு தேவையான குளிர்ந்த அருவி நீர் கிடைக்கிறது. நான் உடுத்துவதற்குத் தேவையான மரப்பட்டை கிடைக்கிறது. நான் வசிப்பதற்கு பாதுகாப்பான மலைக்குகை இருக்கிறது. இவற்றைத் தவிர இந்த சன்னியாசிக்கு வேறு என்ன வேண்டும். நீ எனக்கு கொடுப்பதற்கு நினைக்கும் பொன் பொருள்களை வைத்துக் கொண்டு நான் என்ன முடியும். நீ அன்புடன் கொடுக்கும் பொன் பொருள்களை நான் பாதுகாக்க வேண்டும். எனக்கு நீ கொடுத்த பொன் பொருள்களை திருடர்கள் கொள்ளையடிப்பதற்கு வந்து விடுவார்களோ என நான் இரவும் பகலும் பயந்து கொண்டு இருக்க வேண்டும். அதனால் என்னோட தவ வாழ்வில் மனநிம்மதிதான் கெடும் " என்று கூறி மன்னன் தரும் பொன்பொருள்களை புன்னகையுடன் மறுத்து விட்டார்.

மனிதன் தேவைக்கு அதிகமாக பணம், சொத்துக்கள் வைத்திருந்தால் அவனது மனநிம்மதி கெடும் என்பதை முனிவரின் வார்த்தைகளை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். புத்தர் "ஆசையே துன்பத்திற்கு காரணம் " என்று மிக எளிதாக நமக்கு இதனை போதித்து விட்டார். நமது வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை வைத்துக்கொண்டு அதனை அனுபவித்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றின் மீது மிகுந்த பற்றுக் கொள்ளாமல் பற்றற்றுமுறையில் வாழ்க்கை நடத்தினால், மன அமைதி தானாக உங்களைத் தேடி வரும்.

மனிதன் இந்த பொய்யான பட்டங்கள், பெயர், புகழ், மரியாதை போன்றவற்றை பெறுவதால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்று நினைக்கிறான். இவை அனைத்தும் உனக்கு தற்காலிகமான மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் என்று ஆன்மீகம் கூறுகிறது. இவை அனைத்தும் பெற்று பற்றற்று நாம் அனுபவவித்து மகிழலாம். ஜனக மன்னன் எதிலும் பற்றற்றவராக மிதிலை நாட்டை ஆட்சி புரிந்து இல்லற ஞானிபோல் இருந்தார். அவர் எந்தச் சூழ்நிலையிலும் அதாவது துன்பத்தில் இன்பத்தில் இருந்தாலும் சமநிலையில் மனநிம்மதியுடன் இருந்தார் என்பதை இராமாயணம் ஜனக மன்னரைப்பற்றி சுட்டிக் காட்டுகிறது. பணம், பதவி, புகழ் ஆகியவற்றை பற்றற்ற முறையில் அனுபவவிக்க வேண்டும். மனிதன் பற்றில்லாமல் வாழ்வது, அதற்குரிய மன பக்குவத்தை அடைவது போன்றவை எளிதான காரியமல்ல. அதற்கு நாம் மிகவும் கஷ்டப்பட வேண்டும். ஆனால் பொறுமையும் விடா முயற்சியும் மன உறுதியும் இருந்தால், பற்றற்று வாழ்வது மிகவும் எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்து, நாளடைவில் பற்றற்றமுறை வாழ்வாகவே மாறி விடும் என்று ஆன்மிகம் கூறுகிறது.

( அமைதி தொடரும் )
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்
கோட்டக் கலால் அலுவலர் (பணிநிறைவு)
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (1-Feb-21, 1:21 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 111

சிறந்த கட்டுரைகள்

மேலே