மெளனமான துரோகங்கள்

மெளனமாக துரோகங்கள்

சத்தமில்லாமல் சென்ற குண்டு முதுகை காட்டி நின்று கொண்டிருந்தவனின் கழுத்து பகுதியை துளைத்து வெளியே சென்றது. மடக்..என கழுத்து மடங்க, அதனை தொடர்ந்தவாறு கால் மடங்கி உடல் கீழே விழுந்து உருண்டு தொம்.. என்ற சத்தத்துடன் அந்த பள்ளத்தில் விழுந்தது. குண்டு புறப்பட்ட இடத்திலிருந்த மூவர் அருகில் நின்று கொண்டிருந்த கார் கதவை திறந்து தங்களை திணித்து கொண்ட பின்னர் சர்..என சீறிக்கொண்டு கிளம்பியது.
சந்துரு ஏன் இந்த “ டீலிங்குக்கு “ ஒத்துக்க மாட்டேங்கறே ? கேட்ட ராஜேஸிடம் வேண்டாம் ராஜேஸ், தயவு செய்து இந்த திட்டத்தை கான்சல் பண்ணிடுங்க. அவர் நமக்கு எல்லாம் குரு ! அவரூக்கு குறி வைக்கிற விசயம் தெரிஞ்சது அப்புறம் நாம எல்லாம் அவ்வளவுதான். இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு நின்று கொண்டிருந்த குமாரும், ராமுவும், நான் சொல்லலை, இந்த “ டீலிங்குக்குக்கு “ சந்துரு ஒத்துக்க மாட்டான்னு. ராஜேஸ்தான் கேட்க மாட்டேன்னுட்டான். இப்ப பாரு சந்துரு நம்ம முன்னாடியே வேண்டா முன்னுட்டான்.
இவர்கள் செய்யும் தொழில் அப்படி, ஒரு “அசைண்ட்மெண்ட் ‘ எடுத்துக்கொண்டால் நால்வரும் ஒரே மாதிரி நினைத்தால்தான் எடுத்துக்கொள்வார்கள். சட்டத்தை மீறி இவர்கள் செய்யும் இந்த தொழிலுக்கு நம்பிக்கை அவசியம். இப்பொழுது இவர்கள் தீர்த்து கட்ட நினைக்கும் ராம்பிரசாத் “ பெரும் தாதா “. இவர்கள் நாலவருக்கும் தொழில் கற்றுக் கொடுத்து வெளியாட்களுக்கும் இந்த தொழிலை செய்து கொடுக்க தற்பொழுதுதான் அவர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளான்.
வந்த முதல் “ அசைண்ட்மெண்ட்டே “ அவர்கள் குருவாக மதிக்கும் ராம் பிரசாத்தை போட்டு தள்ள வேண்டும். அந்த நகரின் பெரும் பணம் படைத்தவர் பிரபலமானவர், சமுதாயத்தில் பெரிய மனிதன் தோரணையில் உலா வருபவர், அப்படிப்பட்டவர் ஆனால் இவர் தன் ரகசியங்களை அறிந்திருந்த “ ராம் பிரசாத் “ உயிருடன் இருப்பது பெரும் இடைஞ்சல் என்பதை அறிந்து கொண்ட அந்த பெரும் பணக்காரர், இந்த நால்வரும் தனியாக தொழிலை ஆரம்பித்து விட்டனர் என்று தெரிந்தவுடன் அவர்களை தொடர்பு கொண்டு வேண்டிய பணம் கொடுப்பதாகவும். ராம் பிரசாத்தை கொல்ல வேண்டும், இந்த “ டீலிங்க் “ இவர்களை ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தினாலும், அந்த பெரும் பணக்காரர் சொன்ன தொகை மலைப்பானதாக இருந்ததால் ஒத்துக்கொண்டனர்..
ஆனால் இந்த வேலையை ஆரம்பத்தில் இருந்தே சந்துரு எதிர்க்க ஆரம்பித்து விட்டான். வேண்டாம் இதில் ஏதேனும் வில்லங்கம் இருக்க வேண்டும். அதுவும் ராம் பிரசாத் நமக்கு குரு. அவரிடம் மோத வேண்டாம், என்று வாதாட ஆரம்பித்து விட்டான்.
ராஜேஸ் மெல்ல நடந்து சந்துருவின் தோளில் கை போட்டு ஓகே.. இந்த திட்டத்தை கேன்சல் செய்து விடலாம். நடந்ததை மறப்போம், பழையடி நம்மோட அடுத்த பிளான் என்னன்னு பேசுவோம். இன்னைக்கு இராத்திரி ஏழு மணிக்கு “ஹோட்டல் தாபா” வுக்கு வந்திடுங்க. அப்ப பேசுவோம். “ஹோட்டல் தாபா” நகரின் வெளியில் அமைந்திருந்த நட்சத்திர ஓட்டல். அதில் இந்த மாதிரி இவர்கள் கூடுவது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பது இவர்களின் தொழில் ரகசியம். நால்வரும் விடை பெற்று பிரிந்து சென்றனர்.
அடுத்த பத்து நிமிடத்தில் குமாருக்கும், ராமுவுக்கும் அடுத்தடுத்து செல்போனில் அழைப்பு வர எடுத்து பார்த்தவர்கள் “ராஜேஸ்” என இருந்ததால் பச்சை பட்டனை அழுத்தி காதில் வைக்க இருவரும் உடனே “ மூணாம் நமபர் “ வீதிக்கு வரவும். போன் துண்டிக்கப்பட்டது. மூணாம் நம்பர் வீதி என்பது இவர்களின் மறைமுக சிக்னல் வார்த்தை. மூவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்ப்பவர்கள் சாதாரணமாக நினைத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட இடத்தில் இவர்கள் கூடியிருக்க ராஜேஸ் “சந்துருவை” இன்று இரவு தீர்த்துக்கட்டும் திட்டத்தை அறிவித்தான். இருவரும் இதை எதிர்பார்த்ததால் அதிர்ச்சி கொள்ளாமல் எப்படி சந்துருவை தீர்ப்பது என ஆலோசித்தனர். இன்று இரவு இவர்கள் அளவான மதுவில் இருந்தால் போதும், சந்துருவை மதுவில் குளிக்க வைத்து விடுங்கள். அவனை கூட்டி செல்லும்போது முடித்து விடலாம் என முடிவு செய்யப்பட்டது.
நல்ல போதையில் காரில் இருந்த நால்வரும் காரை ஓரமாக நிறுத்தி ‘ சிறு நீர்” கழிக்கலாம் என ஜாடை காட்ட சந்துருவை தவிர மற்ற மூவரும் தனித்தனியே ஒதுங்குவது போல பாவனை காட்ட சந்துரு இவர்களை நம்பி ஒதுங்க, உடனே காருக்கருகில் இருந்த ராஜேசின் பிஸ்டல் தன் வாயிலிருந்த குண்டை சந்துருவின் கழுத்தில் துப்பி விட்டது.
மூவருக்குமே நண்பனை தீர்த்து விட்டோமே என்ற எண்ணத்தில் இருந்ததால் காருக்குள் இறுக்கமான மெளனம் இருந்தது. காரை ஓட்டிக்கொண்டிருந்த ராஜேஸ் மெல்ல கனைத்து அடுத்த பிளான் நமக்கு “ராம் பிரசாத்” சொல்லிவிட்டு எதிரில் வந்த லாரிக்கு வழி விட “ஸ்டேரிங்கை” வளைத்தவன் அதை மீண்டும் கொண்டு வர முயற்சிக்க அது அப்படியே லாக் ஆகி அதற்குள் கார் மிக வேகமாக பள்ளத்துக்குள் பாய்ந்து நான்கைந்து முறை உருண்டு குபீரென ஒரு வெடிச்சத்தத்துடன் வெடித்தது.
“ ராம் பிரசாத்தை கொல்ல “ இந்த நால்வரை விலை பேசியவர் ராம் பிரசாத்துடன் பேசிக்கொண்டிருந்தார். “சந்துரு” உன்னை கொல்ல ஒத்துக்க மாட்டேன்னுட்டானே அவனையாவது காப்பாத்தியிருக்கலாமே ?
தனியா தொழில் ஆரம்பிக்கறவன் வாய்ப்பு கிடைச்சா குருவையும் முடிச்சுடுவான் அப்படீங்கறது என்னைய மாதிரி தொழில்ல இருக்கறவனுக்கு அத்துப்படி. “சந்துரு” இப்ப ஒத்துக்கலையின்னாலும் இந்த “மூணு பேரை” நாமதான் கொன்னோமுன்னு தெரிஞ்சா நமக்கு எதிரா திரும்பினாலும் திரும்பிடுவான். அப்படியே அவனை அவங்க கொல்லாம போயிருந்தாலும் நாம் அவங்க கார் “ஸ்டேரிங்கை” ஜாம் பண்ணி வச்சிருந்ததுல அவனும் போயிருப்பானே.! சொல்லியபடி அங்கிருந்த “ சோபாவில் “ காலை நீட்டி உட்கார்ந்தான் “ராம் பிரசாத்”

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Feb-21, 11:03 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 120

மேலே