58 இலியிச்

பதைபதைப்பை உருவாக்கிய அந்த பாதையில் நாங்கள் சோர்வுடன் நடந்து கொண்டிருந்தோம்.

சற்று தொலைவில் புற்களால் ஆன ஒரு குடிசை தெரிந்தது.

லிப்னி எங்களை சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு அவர் அதற்குள் ஏதோ கூப்பிட்டபடி உள்ளே சென்றார்.

ஒருவேளை அங்கு ஒரு மிருகம் கூட இருக்கலாம் என்றேன். நளினி சற்று பயப்பட ஆரம்பித்தாள். எனக்கும் பயம் சுரந்தது எனினும் பொறுத்தேன்.

லிப்னி உள்ளே சென்றார். சில நிமிடங்கள் ஆயிற்று. அரவம் இல்லை என்றபோதிலும் நேரம் கடந்து கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் அந்த மௌனம் எனக்கு பிடிக்கவில்லை. நளினியிடம் பேச ஆரம்பித்தேன்.

நீ இலியிச்சை பார்த்தது உண்டா? அது பற்றி சொல்லேன் என்று அவளிடம் கேட்டுக்கொண்டேன்.

நளினியின் கண்கள் அலைவதை நான் பார்த்து கொண்டிருந்தேன்.

இலியிச் தன் உடைகளில் பைகள் வைத்து தைய்க்க மாட்டார். அவர் சட்டை பேண்ட் பைஜாமா எதிலும் பைகள் இருக்காது என்றாள்.

பின் அவன் பயணம்?

பெரும்பாலும் கால்நடையாக சில சமயம் யாருடனும் இரவலாக பல சமயங்களில் பிச்சை எடுத்தபடி....

அப்படி யாரை சந்திக்க செல்வான் என்று வேண்டுமென்றே கேட்டேன்.

உங்களுக்கு தெரியாதா? என்றாள்.

பின் அவளாகவே பேசினாள்.

நீங்கள் அவரை எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு இலியிச் பற்றி சில பிம்பங்கள் உண்டு.

இலியிச் பயணம் என்பது தன்னுள் குறுக்கிடும் ஒருவரை அல்லது தன்னையே இழப்பதற்காகவோ தொலைப்பதற்கோ மட்டும் என்று நான் நினைப்பேன்.

ஒருமுறை அவர் பழனிக்கு அருகில் இருக்கும் கோதைமங்கலம் கிராமத்தில் இருந்தார். அங்கே இருக்கும் ஒரு முதியவர் பாலக்காடு சென்று பிச்சை எடுத்துவிட்டு காசு சேர்ந்ததும் தன் கிராமத்துக்கு வந்து விடுவார். அவரோடு இலியிச் பாலக்காடு சென்று விட்டார். இது என் மாமா சொல்லி எனக்கு தெரிந்தது.

இலியிச் உங்களுடன் ஏதேனும் பேசி இருக்கிறாரா என்று கேட்டேன்.

ஓரிரு முறை பேசி இருக்கிறார். அவை பெரும்பாலும் சொந்தக்காரர்களின் நலம் விசாரிக்கும் முறையாக மட்டுமே இருக்கும். என்றாலும் ஒருநாள் அவர் என்னிடம்... என்று நளினி ஏதோ கூற வந்தபோது லிப்னி அவசர அவசரமாக வெளியில் வந்தார்.

அது ஓட்டமும் நடையும் கலந்த ஓர் அழகான அவசரம் என்பது புரிந்தது.
===============================
இன்னும் அவனோடு...

_________________________________

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Feb-21, 4:20 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 26

மேலே