தந்தைதாய் என்னவே உள்ளத்தில் ஓர்ந்தரசன் கருமம் புரிதல் கடன் - அறிவு, தருமதீபிகை 768

நேரிசை வெண்பா

தந்தைதாய் என்னவே தன்னையே தன்குடிகள்
சிந்தைசெய்து நிற்கும் செயலினார் – அந்த
உரிமையை உள்ளத்தில் ஓர்ந்தரசன் என்றும்
கருமம் புரிதல் கடன்! 768

- அறிவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன்னையே தந்தை தாய் என்று குடிசனங்கள் சிந்தை செய்து ஒழுகி வருதலால் அந்த உரிமையை உணர்ந்து எவ்வழியும் அவர் இனிது வாழ்ந்து வரச் செவ்வையாய் ஆராய்ந்து அரிய வினைபுரிந்து வருவதே அரசனது பெரிய கடமையாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அரசனுக்கும் குடிகளுக்கும் உள்ள உறவுரிமைகள் உயர் தரமுடையன. மகனுக்குத் தாயும் தந்தையும் போல் தேச மக்களுக்கு அரசன் அமைந்திருக்கிறான். தாய் உணவு முதலியன :ஊட்டித் தன் மைந்தனை இனிது பேணுவள்; தந்தை அறிவு நலங்களைப் போதித்து அவனை உயர்நிலையில் நிறுத்துவன். இந்த இருவகை நலன்களையும் மக்களுக்கு ஒக்க உதவி அரசன் உரிமையாய் யாண்டும் இனிமை செய்து அருளுவன்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

தடித்தவோர் மகனைத் தந்தையீண் டடித்தாற்
றாயுட னணைப்பள்தா யடித்தாற்
பிடித்தொரு தந்தை யணைப்பனிங் கெனக்குப்
பேசிய தந்தையுந் தாயும்
பொடித்திரு மேனி யம்பலத் தாடும்
புனிதநீ யாதலா லென்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மையப் பாவினி யாற்றேன். – அருட்பா

கடவுளை நோக்கி இராமலிங்க அடிகள் இவ்வாறு உருகி உரையாடியிருக்கிறார் எனக்குத் தாயும் தந்தையும் நீயே என்று ஆண்டவனை வேண்டி அம்மையே அப்பா என அன்போடு அழைத்திருப்பது அவரது உள்ளத்தின் உருக்கத்தை உணர்த்தி நிற்கிறது. எவ்வழியும் இனிய ஆதரவாயுள்ள உண்மையுறவை உணர்ந்து கொண்டமையால் அந்தப் பொருளை நினைந்து மகான்கள் உருகுகின்றனர். தத்துவக் காட்சியில் எழுந்த அந்த உத்தம உருக்கம் உலக உள்ளங்களை உருக்கி உயர்கதிகளை அருளி வருகிறது.

உயிர்க்கு உண்மையான தாயும் தந்தையும் தெய்வமே என்றது போல் அரசனும் அமைந்திருக்கிறான். செய்துவரும் ஆதரவை நோக்கி வையம் அவனை வாழ்த்தி வருகிறது. காப்புத்தெய்வம் என மன்னன் மாட்சிமை பெற்றிருப்பது அவனது ஆட்சித் திறனையும் அருளிவரும் நலனையும் அறிவுறுத்தி நின்றது.

எல்லாவற்றையும் எfங்கும் நன்கறிந்து வரும் கடவுள் போல அரசனும் உலகநிலைகளை ஓர்ந்துணர்ந்து முறைசெய்ய வுரியவனாய் மருவியிருக்கிறான். கூரிய அறிவுக் காட்சியால் சீரிய அரசாட்சி சிறந்து வீரிய நிலையில் விளங்கி வருகிறது.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். 582 ஒற்றாடல்

உ.லக மக்களுடைய நிலைகளையும் நிகழ்ச்சிகளையும் அரசன் நாளும் நாடியறிந்து கொள்ள வேண்டும்; அப்போதுதான் குறைபாடுகளைக் கண்டு குணம் செய்ய முடியும்; அரசின் முறையும் இனிதாம் என இது முடிவு செய்துள்ளது.

தன் நாட்டில் யாதொரு கேடும் நேராமல் நாடிக் காத்து மாந்தர் யாண்டும் மகிழ்ந்து வாழ்ந்து வரும்படி செய்வதே வேந்தன் தொழிலாம்; இந்தக் கடமையைச் செய்து வருமளவே அவன் தலைமையாய் நிலைத்து வருவான்; முறைமை தவறின் இறைமை குன்றிச் சிறுமையாய் இழிந்து படுவான்..

தேசமக்கள் இனிதுவாழ நீதியோடு பாதுகாக்கவுரிய அரசன் அரிய பல நீர்மைகள் தோய்ந்து நெறிமுறையே ஒழுகி வரவேண்டும்; சிறந்த அரசரது உயர்ந்த நிலைமைகளை அயலே வரும் பாடல்களில் காண வருகிறோம்..

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

ஏடவிழ்பைந் தாரோ யிமையோர் பதம்பெறினும்
நாடு நடுங்கநன் கல்ல வைபுரியார்
வேடர் பரிவேட்டஞ் செய்யார்; வினைதருஞ்சூ(து)
ஆட நினையார்மட் டுண்ணார் அரசரே. (f)

குரவர் தமைக்காப்பர் செய்ந்நன்றி கொல்லார்
கரவடரைக் காய்வ(ர்)பழி கண்ணோட்டஞ் செய்யார்
இரவலருக்(கு) ஈவர் எதிர்ந்தோர் முனையின்
விரவு தமதுயிரும் எண்ணார்கள் வேந்தரே. (2)

தேவர் நிலைகடவார்; மேலோர் திறம்பிழையார்;
நாவின் இரண்டுரையார்; நன்கல் லவைபுரியார்;
காவல் முறைதிறம்பார்; காமச் செயல்பெருக்கார்,
பூவலயம் காவல் புரியும் புரவலரே. (3)

தீயூட்டித் தாமுண்ணும் செய்தவத்தோர் ஆனினங்கள்
நோயூட்டு காயம் இகழ்ந்தியற்று நோன்பினோர்
வேயூட்டு தோளார் விருத்த(ர்)சிறு பால(ர்)தமைத்
தாயூட்டிப் போற்றுதல்போல் தார்வேந்தன் காக்குமால். 4 – பிரமோத்தர காண்டம்

உண்மையான அரசனுடைய தன்மைகளை இவை உணர்த்தியுள்ளன. செருக்கு முதலிய சிறுமைகளின்றி யாண்டும் பெருந்தன்மையாளராய் எவ்வுயிரையும் இனிது பேணி வருவதே செவ்விய வேந்தர் சீர்மையாம். தாய் ஊட்டிப் போற்றுதல் போல் தார்வேந்தன் காக்கும் என்றதனால் மக்களிடம் அவனுக்குள்ள உரிமையும் காப்பு முறைமையும் நன்கு தெரிய வந்தன.

தாயன்பு தழுவி நிற்பதே தலைமையான அரசின் நிலைமையாம். 'தாய் ஒக்கும் அன்பின்' எனப் புலவர் பாடும் புகழோடு தசரத மன்னன் பொலிந்து நின்றது ஈண்டு உணர்ந்து கொள்ளவுரியது. ஆதரித்து வருமளவே அரசு சீர்மையுறும்.

இன்னவாறான அன்பும் ஆதரவுமின்றிப் பதவி மமதையும், பொருளாசையும் பெருகி அரசன் மருள் கொண்டிருப்பின் அந்த நாடு நொந்து தவிக்கும். அவனும் அவகேடனாய் இழிந்து அழிந்தொழிவான். அரசு நீர்மை யின்றேல் சீர்மை குன்றும்.

Ruin comes when the trader, whose heart is lifted up by wealth, becomes ruler. - Plato

பொருளாசையால் மருள் கொண்டுள்ள வணிகர் அரசாள நேரின் நாடு அழிவுற நேரும் எனப் பிளாட்டோ என்னும் மேல்நாட்டுப் பெரியார் இவ்வாறு கூறியிருக்கிறார். ஆட்சி புரியவுரியவன் எத்தகைய உத்தம நிலையில் இருக்க வேண்டும் என்பதை இதனால் நன்கு உய்த்துணர்ந்து கொள்ளுகிறோம்:

நாட்டு மக்களுடைய இதத்தை நாளும் நன்கு நாடி எவ்வழியும் செவ்வையாய் அவரைப் பாதுகாத்து வருபவனே அரசன் என்னும் பெயருக்குரியவனாய் வருகிறான். பூபாலன், காவலன் என அரசனுக்கு அமைந்துள்ள நாம நீர்மைகள் நேமமாய்ச். சிந்திக்கவுரியன. குடிகள் இன்புறக் கோமுறை புரிவதே முடிமன்னன் கடமையாம். உண்மையான அரசன் உயிர்களிடம் தாய்போல் பேரன்பு கொண்டுள்ளமையால் யாதொரு இடரும் நேராதபடி எவ்வழியும் அவற்றை ஆதரவோடு பாதுகாத்து வர நேர்ந்தான். காப்பு முறைகள் தரும நீதிகளைத் தழுவி வரலாயின. யசோதரன். என்னும் மன்னன் உஞ்சயினி நகரிலிருந்து அரசு புரிந்து வந்தான். அவனுடைய தாய் பெயர் சந்திரமதி. தன் மகனுக்கு ஏதோ கிரக பீடை உள்ளது என்று தெரிந்து அதற்குப் பரிகாரமாகக் காளிகோவிலுக்கு ஒரு கோழியைப் பலியிடும்படி கூறினாள். அந்தச் சொல்லைக் கேட்டதும் வேந்தன் உள்ளம் வருந்தினான். பிள்ளைப் பாசத்தால் பிரியமாய்ச் சொன்ன அவளுக்கு அரிய அரச நீதியைத் தெரிய உரைத்தான். அம்மன்னன் கூறிய மதிமொழிகள் மிகுந்த நயமுடையன; அயலே வருகின்றன.

யசோதரன் உரைத்தது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

என்னுயிர் நீத்த தேனும்1 யானுயிர்க் குறுதி சூழா
தென்னுயிர்க் கரண நாடி யானுயிர்க் கிறுதி செய்யின்
என்னையிவ் வுலகு காவ லெனக்கினி யிறைவி கூறாய்
மன்னுயிர்க் கரண மண் மன்னவ ரல்லரோ2தான். 61

யானுயிர் வாழ்த லெண்ணி யெளியவர் தம்மைக் கொல்
வானுய ரின்ப மேலால் வருநெறி திரியு மன்றி (லின்
ஊனுயி ரின்ப மெண்ணி யெண்ணமற் றொன்று மின்றி
மானுயர் வாழ்வுமண்ணின் மரித்திடு மியல்பிற் றன்றே. 62

அன்றியு முன்னின்1 முன்ன ரன்னைநின் குலத்து ளோர்கள்
கொன்றுயிர் கன்று முள்ளக் கொடுமைசெய் தொழில ரல்லர்
இன்றுயிர் கொன்ற பாவத் திடர்பல விளையு மேலால்
நன்றியொன் றன்று கண்டாய் நமக்குநீ யருளிற் றெல்லாம். 63 இரண்டாம் சருக்கம், யசோதர காவியம்

பெற்ற தாயை நோக்கி யசோதரன் இவ்வாறு பேசியிருக்கிறான். உலகவுயிர்களை உரிமையோடு காப்பது அரசனது கடமையாம்; பிறப்புரிமையான அந்தத் தருமத்தை மறந்து விடுவது பாவமாம்; என்னுயிர் போனாலும் எந்தவொரு பிராணிக்கும் நான் யாதொரு.துயரும் புரியேன் என்று அவன் உறுதி கூறியிருப்பது ஊன்றி உணரவுரியது. மண்மேல் இன்னுயிர்க்கு அரணம் மன்னவர் அல்லரோ?' என்று விநயமாய் வினவியது தாய் மனந்தெளிந்து சீவதயையைப் பேணிவர வந்தது. ஆருயிர்கட்கு ஆதரவு புரிவதே ஆட்சியின் மாட்சியாம். அரணம்:- பாதுகாப்பு.

சீவகோடிகளைப் பாதுகாத்தருள்வதே செங்கோல் வேந்தின் சீர்மை என்பதை யசோதர மன்னன் இங்கே நன்கு அறிவுறுத்தியருளினான். பிறவுயிர்களைப் பேணி வருவதில் தருமம் பெருகிவர அம்மன்னன் புண்ணியவானாய் உயர்ந்து எண்ணரிய மகிமைகளை அடைந்து கொள்ளுகிறான்.

ஒரு சிறிய பறவைக்காகத் தனது அரிய உயிரை வழங்கிய சிபி மன்னனுடைய சரிதம் அரசமரபுக்கு எல்லாம் வரிசையான பெருமையை அருளிப் பேரொளியோடு நிலவி வருகிறது.

பறவை மன்னுயிர்க்குத் தன்னுயிரை வழங்கினன். (இராமா, குலமுறை, 7)

விசுவாமித்திரர் சனகனிடம் இங்ஙனம் வியந்து புகழ்ந்திருக்கிறார்.

புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல்
சினங்கெழு தானைச் செம்பியன். (புறம் 37)

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன். (1)

அறனறி செங்கோல் மறநெறி நெடுவாள்
புறவுநிறை புக்கோன். (2)

புறவுநிறை புக்குப் பொன்னுலகம் ஏத்தக்
குறைவில் உடம்பரிந்த கொற்றவன். (3) (சிலப்பதிகாரம், 20, 23, 29)

மறான்இறை என்று சரணடைந்த வஞ்சப்
புறாநிறை புக்க புகழோன். (இராசசோழன் உலா)

கொலையேறு உடம்படையக் கொய்தாலும் எய்தாத்
துலையேறி வீற்றிருந்த சோழன். (குலோத்துங்கன் உலா)

புறவு ஒன்றின் பொருட்டாகத் துலைபுக்க பெருந்தகை. 65 திருவவதார படலம், பால காண்டம், இராமாயணம்

புக்கடைந்த புறவொன்றின் பொருட்டாகத் துலைபுக்க
மைக்கடங்கார் மதயானை வாள்வேந்தன். 356 கும்பகருணன் வதைப் படலம், யுத்த காண்டம், இராமாயணம்

புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன். - புறம், 46

பறவையைப் பாதுகாத்தருளிய சிபி மன்னனது பெருந்தன்மையை இவ்வாறு பலரும் புகழ்ந்து போற்றியுள்ளனர். பெற்ற தாயினும் பேரன்புடையனாய் உயிர்களை இவன் பேணி வந்துள்ள நிலையும் நீர்மையும் உலகவுள்ளங்களை உருக்கியுள்ளன.

குடிகளிடம் பொருள் வரவையே நாடித் தன்னலமே கருதி இன்ப போகங்களை மாந்தித் திளைத்து இறுமாந்து களித்திருக்க நேர்ந்தால் அந்த அரசன் இந்தவாறு அருள் நீதியுடையவனாய் அரிய செயலைச் செய்து பெரிய புகழை அடைய நேர்வனா?

தத்துவ ஞானமும் சித்த சுத்தியுமுடைய உத்தம அரசர்கள் இந்நாட்டில் முன்னம் வித்தகமாய் விளங்கியிருந்தனர். அதனால் மாந்தர் யாண்டும் சாந்த சீலராய்ச் சுகமே வாழ்ந்து வந்தனர். தேசங்கள் எவ்வழியும் செவ்வையாய்ச் செழித்து வந்தன.

Until the kings of this world have the spirit and power of philosophy and wisdom, cities will never cease from ill, nor the human race. - Plato

இந்த உலகத்தை ஆள நேர்ந்த அரசர் கலைஞானமும் ஆன்மபோதமும் அடைந்திருந்தாலன்றி மனித சமுதாயமும் நாடு நகரங்களும் தீமைகளிலிருந்து மீள முடியாது' என்று கிரீஸ் தேசத்துத் தத்துவ ஞானியாகிய பிளாட்டோ இவ்வாறு கூறியிருக்கிறார். அறிவுநலம் சுரந்து தரும நீதிகள் நிறைந்து வேந்தன் ஆந்துணையும் ஆதரவு புரிந்து வந்தால் மாந்தர் யாண்டும் மகிழ்ந்து வாழ்ந்து மகிமை தோய்ந்து மறுமை நலமும் பெருகி வருவர்.

தன்னுயிர்போல் மன்னுயிரைத் தான்பேணும் மன்னனே
பொன்னுயிர் ஆவன் பொலிந்து.

இதனை உன்னி யுணர்ந்து வேந்தர் ஒழுகி வர வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Feb-21, 8:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 104

சிறந்த கட்டுரைகள்

மேலே