பரம்பரை அழுக்கு

.
===================
கனவுக லாயிரம் கண்களில் ஏந்திக்
களித்திட வெனநமை கடவுளும் படைத்தான்
மனத்தினி லாயிர மாசைக ளேந்தி
மதத்தினில் தாவிடு வெனவோ படைத்தான்?
இனத்துடன் சனத்துட னிருந்திட வென்றே
இரக்கமும் கருணையு மெமக்கவ னளித்தான்
வனத்துள விலங்கென வாழ்வதற் கென்றோ
வதைத்துணும் பழக்கமும் விதைத்து விட்டான்.
**
மனிதரை விலங்கிலும் மேலெனக் கொள்ள
மதிதனை சிரசினுள் மறைத்து வைத்தான்
புனிதராய் சிலரையும் படைத்தவன் இந்தப்
புவிதனி லவர்வழி போக விட்டான்
தனிநல மெனுமொரு தரமிலா போக்கால்
தரணியில் வாழ்வதை தவிர்க்கச் செய்தான்
பனித்துளி போலவன் பொழிந்ததில் நனைந்தும்
பரம்பரை அழுக்கெமில் படிய விட்டோம்!
**
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Feb-21, 1:48 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 77

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே