தேசமக்கள் நல்வாழ்வே செங்கோலின் வாழ்வு - அறிவு, தருமதீபிகை 769

நேரிசை வெண்பா

தேசமக்கள் நல்வாழ்வே செங்கோலின் வாழ்வென்னும்
வாசகத்தை நன்கு வகுத்துணர்ந்து - மாசு
படியாமல் மன்னன் படிபுரந்து வந்தால்
அடியாம் அனைத்தும் அவன். 769

- அறிவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அரசனுடைய செங்கோல் சிறந்து வாழ்வது தேச மக்களுடைய நல்ல வாழ்வினாலேயாம்; ஆகவே தன் ஆட்சியில் மாசு யாதும் படியாமல் மன்னன் நன்கு பாதுகாத்து வர வேண்டும்: அவ்வாறு வரின் அகிலவுலகமும் அவன் வசமாய் வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர். அரச வாழ்வும் குடிவாழ்வும் ஒருங்கே அறிய வந்தன.

தனது தலைமையான நிலைமை யாதும் நிலை குலையாமல் என்றும் நிலைத்து வர வேண்டுமானால் குடிசனங்களுடைய நிலைமையைக் கூர்ந்து நோக்கி அரசன் யாண்டும் ஓர்ந்து பேணி வரவேண்டும். வேருக்கு நீர் வார்த்தால் மரத்தின் கிளைகள் செழித்துத் தழைத்து வரும்; அதுபோல் ஊருக்கு உதவி புரிந்து உரிமையோடு பார்த்துவரின் அரசனது குடி பெருமை மிகப் பெற்று எவ்வழியும் செழுமையாய்ச் செவ்விய நிலையில் கிளர்ந்து வளர்ந்து தேசு மிகுந்து வரும்.

மாந்தர் மனம்மகிழ்ந்து வருமளவு வேந்தர் இனமுயர்ந்து வருகிறது. தலைமைச் சிறப்பைத் தாங்கியுள்ளவன் அந்த நிலைமைப் பொறுப்பையுணர்ந்து நீர்மையோடு நாட்டைப் பேணி வருவது சீர்மையான ஆட்சியாய்ச் சிறந்து வருகிறது. ஆளும் தகைமை அவனி வாழும் வகைமையில் வந்தது.

நாடு மகிழ நலம்புரிந்து தலம் புரந்து வருபவன் நாடிய பொருள்களையெல்லாம் நன்கெய்தி நீடிய வாழ்வுடன் நிலவி வருகிறான். உரிய கடமையை ஓர்ந்து செய்வது அரிய தவமாகிறது; ஆகவே அது பெரிய மகிமையை அருளிப் பேரின்பம் தருகிறது. நீதி முறையால் ஆதிபகவன் அருள் அமைகிறது.

கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர் என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

கோளும் ஐம்பொறி யும்குறை யப்பொருள்
நாளும் கண்டு, நடுக்குறு நோன்மையின்
ஆளும் அவ்வர சேஅர(சு); அன்னது,
வாளின் மேல்வரு மாதவம், மைந்தனே! 14 -.மந்தரை சூழ்ச்சிப் படலம், இராமாயணம்

பொறி வெறியனாய்ப் போகங்களில் இழிந்துழலாமல் நாளும் கருமங்களை நன்கு கவனித்துப் பொருளை ஈட்டித் தொகுத்து வகுத்து அருளோடு யாவரையும் இதமாய்ப் பேணி வருபவனே அரசன் ஆவான்; அந்த அரசு கூரிய வாள் மேலிருந்து செய்யும் சீரிய மாதவமாய்ச் சிறந்து விளங்கி யாண்டும் மகிமை சுரந்து வருமென இது உணர்த்தியுள்ளது.

தேசத்தை ஆளுவது எவ்வளவு அரிய செயல்! அதனை உரிமையாக உடையவன் எத்துணைப் பொறுப்போடு உத்தமனாய் உயர்ந்திருக்க வேண்டும் என்பது ஈண்டு உய்த்துணர வந்தது. மனித சமுதாயம் நெறிமுறை தழுவி இனிது வாழ்ந்து வர உரிமையோடு பாதுகாத்து வருவது அரிய பெரிய அரச தருமமாய் மருவி வருகிறது. அத்தகைய குலதருமத்தை நலமாகப் பேணி வருபவன் உத்தம அரசனாய் ஒளி மிகுந்து உயர்ந்து திகழ்கிறான்.

தன் கடமையைக் கருதிச் செய்கிறவன் அரிய தவத்தைச் செய்தவனாய்ப் பெரிய மகிமைகளை அடைந்து கொள்கிறான். உலக மாந்தர் உவந்துவர எந்த அரசு முறைபுரிந்து வருகிறதோ அந்த அரசை அமரரும் புகழ்ந்து வருகின்றனர். அரிய தவத்தையுடைய முனிவரும் பெரிய பதவியை அடைந்துள்ள அமரரும் உவந்து புகழ ஒருவன் அரசு புரிந்துவரின் அந்த ஆட்சி எத்தனை மாட்சியாய் உயர்ந்திருக்கும்! இராமன் மரபு போல் பரம்பரையாகத் தரும நீதிகள் தழைத்து வந்த அரசரிடமே அத்தகைய உத்தம ஆட்சி காட்சியாய் வந்துள்ளது. சீவகோடிகள் இன்புடன் வாழ அன்புடன் அரசு புரிவது அரிய மாதவம் ஆகிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

அருந்தவ மரைச பார மிரண்டுமே யரிய தம்மை
வருந்தியு முயிரை யோம்பி மனத்தினை வணக்கல் வேண்டும்
திருந்திய விரண்டுந் தத்தஞ் செய்கையிற் றிரியு மாயிற்
பெருந்துயர் விளைக்கு மன்றே பிறங்குதார் நிறங்கொள் வேலோய். 271

அந்தரந் திரியுஞ் செய்கை யமரர்தம் மரசு வேண்டி
இந்திர வுலகங் காணு நெறியவை யாவை யென்னின்
மந்திரம் வழாத வாய்மை மாதவம் முயற லன்றேல்
தந்திரந் தழுவிச் செங்கோ றளர்விலன் றரித்த லென்றான். 272 மந்திரசாலைச் சருக்கம், சூளாமணி

அரசும் தவமும் இதில் நேரே வரிசையாய் அறிய வந்துள்ளன. குடிகள் மகிழ அரசு புரிவது நெடிய தவம்; அங்ஙனம் புரிபவன் இந்திர பதவியை எளிதே அடைந்து கொள்வன் என்பது இங்கே தெளிவாய் நின்றது. தான் ஏந்திய செங்கோலின்படி செம்மையாக உயிரினங்களைப் பேணிவரின் அந்த அரசனுக்கு அரிய பல நன்மைகள் காணியாய் வருகின்றன. தேசத்தைச் செவ்வையாய்க் காத்துவரின் அங்கே ஈசனருள் பூத்து வருகிறது.

மாசு படியாமல் மன்னன் படி புரந்துவரின் அனைத்தும் அவன் அடியாம் என்றது ஞாலம் முழுவதும் அவனை நயந்து நிற்கும் கோலம் காண வந்தது. குடியைத் தழுவி நீ கோல் ஓச்சி வந்தால் உன் அடியைத் தழுவி உலகம் உவந்து வருமென ஒரு முடி மன்னனுக்கு மனு முனிவர் போதித்தருளினார்.

தன் உயிரைப்போல மன்னுயிரைப் புரந்து வருபவனே உண்மையான மன்னன் ஆகின்றான். இனிய சீர்மை தோய்ந்த அந்த அரசனை. மனித சமுதாயம் புனித தெய்வமாய்ப் போற்றி வருகிறது. நன்மைகளை நாடியறிந்த தன்மையாளனே புன்மைகளை நீக்கிப் பொதுமக்களைப் பேண வல்லவனாகின்றான்; அத்தகைய அறிவாளியையே யாவரும் அவாவி மகிழ்கின்றனர்.

The people need the guidance of philosophers as desires need the enlightenment of knowledge. - Plato

’மன விருப்பங்களுக்கு அறிவு விளக்கம் போல் குடிசனங்களுக்குக் கலைஞானிகளுடைய ஆதரவு அவசியமாயுள்ளது’ என மேல்நாட்டு அரசியல் அறிஞர் இங்ஙனம் அறிவுறுத்தியிருக்கின்றார். நல்ல கலையறிவுள்ள அரசனே நாடாள உரியவனாகிறான். அந்த ஆட்சியே மாட்சியுடையதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Feb-21, 10:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 151

சிறந்த கட்டுரைகள்

மேலே