ஊழிருந்தால் உறுமென்று உரைபிதற்றித் தாழா மடிதல் தவறாகும் - ஆற்றல், தருமதீபிகை 779

நேரிசை வெண்பா

ஊழிருந்தால் எல்லாம் உறுமென்(று) உரைபிதற்றித்
தாழா மடிதல் தவறாகும் - வாழை
இலையிலிட்ட சோறும் எடுத்தயின்றால் அன்றி
இலைகாண் பசிதீர் இடம். 779

- ஆற்றல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நல்ல ஊழ் இருந்தால் எல்லாம் தாமே வரும் என்று வீணே பிதற்றி விருதாவாய்ச் சோம்பி யிருப்பது பெரிய பிழையாம்; எதிரே வாழையிலையில் இட்ட சோறும் கையால் எடுத்து உண்டால் அன்றி வெய்ய பசி தீராது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பசிதீர உண்ண விழைவது மனித இயல்பு; அவன் எண்ணி உணர வேண்டியதை இது இனிது உணர்த்துகின்றது. கடமை உணர்வு மடமை இருளை நீக்கி மகிமைகளை அருளுகின்றது.

உழைப்புகளின் வழியே பிழைப்புகள் யாண்டும் நடந்து வருகின்றன. கருமபூமி என்று இந்த உலகத்திற்கு ஒரு பெயர் அமைந்துள்ளமையால் மனித வாழ்வின் நிலைமையை அத மருமமாய் விளக்கி நிற்கிறது. உழையாமல் உண்பவன் பிழையாமல் பிழை செய்கின்றான்; கரும தேவதைக்குப் பெரிய கடனாளியாய் வழிமுறையே அவன் பிழைபட்டு நிற்கின்றான்.

உண்ணுகின்ற மனிதன் தனது உணவுக்கு உரிய கடமையை உணர வேண்டும். சிறந்த அரசனாயினும் உயர்ந்த செல்வனாயினும் உழைப்பை உணரவில்லையாயின் பழிப்புடையராய் அவர் பாழ்பட நேர்கின்றார் பணி புரியான் பழி புரிகின்றான்.

யாதும் முயலாமல் சுகமாய் இருந்து சாப்பிடுவது அவமான வாழ்வாம். மானம் அழிய ஈனமாய் வாழலாகாது.

சோம்பலான பழக்கம் மனிதனைத் தீம்பனாக்கித் தேம்பச் செய்கிறது. முயற்சியை எவன் இழந்து விட்டானோ அன்றே அவன் இறந்து விட்டான். ஊக்கம், உறுதி, உணர்ச்சி முதலிய உயர் நிலைகள் எல்லாம் சோம்பேறியை விட்டு ஒழிந்துபோய் அவன் சாக நேர்ந்தபடியாய்த் தாழ்ந்து வீழ்கின்றான். உழையாத பழக்கம் மனிதனைப் பிழையாகப் பாழ்படுத்துகிறது. உழைத்து வருவது உயிர் பெற்ற பயனாய்த் தழைத்து வருதலால் உழைப்பாளி உயர்நிலைகளில் ஒளிர்கிறான்.

உழைத்து உயர்ந்து வாழ உடல் வந்தது.
நினைந்து நீதிநெறியே உயர மனம் வாய்ந்தது.
உணர்ந்து தெளிந்து உய்தி பெற அறிவு அமைந்தது.

அருமையாக அடைந்த இந்தக் கருவி கரணங்களை உரிமையான நெறிகளில் செலுத்துவோர் பிறவிப் பயனைப் பெற்ற பெரியராய் உயர்கின்றார், இவ்வாறு செய்யாதார் எவ்வழியும் யாதொரு பயனும் காணாமல் அவமே இழிந்து கழிகின்றார்.

உரிமையை உணர்ந்து பழகிய அளவு பெருமைகள் விளைந்து வருகின்றன; பழகாது விடின் சிறுமைகள் தொடர்ந்து கொள்ளுகின்றன. பழகிய பழக்கத்தின்படியே மனிதன் வழக்கமாய் வளர்ந்து வருகிறான். ஒரு நாள் வேலை செய்யவில்லையானால் மறுநாள் அதில் அவனுக்குப் பிரியம் வராது. நாளும் கருத்தோடு வேலை செய்து பழகினவன் ஒரு நாழிகையையும் வீணாக்க மாட்டான். கரும வீரனாய் அவன் பெருமகிமை பெறுகிறான்.

மடியன், சோம்பேறி என' இடியுண்டு நிற்பவர் யார்? இளமையிலேயே தொழிலில் பழகாமல் வளமையாய் அலைந்து திரிந்தவரே இழிந்த சோம்பேறிகளாய் உலகில் உயர்ந்து நிற்கின்றார், எந்தத் தொழிலும் பழகாமல் வராது; நாளும் பழகி வந்த பழக்கத்தி.ன் அளவே கருமம் வழக்கத்துக்கு வருகிறது. தான் தழுவிய பழக்கம் மனிதனை எழுமையும் தொடர்ந்து கொள்கிறது. நல்ல பழக்கம் நலம் பல தருகிறது; கெட்ட பழக்கம் கேடுகளை .விளைக்கிறது. பழக்கம் மனிதனை ஆண்டு வருதலால் இளமையிலேயே நல்லவழிகளை அவன் நன்கு பழகிக் கொள்ள வேண்டும்.

Custom is the principal magistrate of man’s life, let men by all means endeavour to obtain good customs. - Васon

'பழக்கம் மனித வாழ்வின் தலைமை அதிகாரி, ஆதலால் எவ்வகையிலும் நல்ல பழக்கங்களையே நாடி மனிதன் அடைந்து கொள்ள வேண்டும்’ என பேக்கன் என்னும் ஆங்கில அறிஞர் பழக்கத்தின் வளமையை இவ்வாறு செவ்வையாய்க் கூறியிருக்கிறார்.

நல்ல தொடர்பு எல்லா வகையிலும் இன்பம் தருகிறது. தொழிலில் பழகிவரின் வாழ்வு விழுமிய நிலையில் விளங்கி வரும். வினையாண்மை வழியே மேன்மைகள் விளைகின்றன. ஊழ் இருந்தால் வரும் என்று உள்ளம் மடிந்திருப்பது எள்ளலான சோம்பேறி வாழ்க்கையாம். மடியன் கொடிய மதிகேடன் ஆகிறான்.

ஊழ் என்றால் என்ன? முன்பு செய்த வினையின் விளைவே ஊழ் என உருவாகியுள்ளது. பழைய வினையான அது தப்பாமல் பயன் தருதல் போல் புதிய வினையும் மனிதனுக்கு அதிசய பலன்களை அருளி வரும். அவ்வரவு எவ்வழியும் இனிமையாம்.

பண்டு செய்த பெரிய நல்வினையின் பயனாலேயே இன்று ஒருவன் அரசனாய் வந்துள்ளான்; அவ்வாறு வந்தவன் எவ்வழியும் முயன்று குடிகளுக்கு நன்மை செய்து தேசத்தைப் பாதுகாத்து வர வேண்டும். அந்தக் காப்பு முறையின் நிறையளவே அரசு மாட்சி மருவி வரும். காவல் கழியின் காவலன் இழியும்.

விதி தரும் என்று வீணே சோம்பி இராதே; மதி வலியால் முயன்று அதிசய நலங்களை அடைந்து கொள்ளுக. எவ்வளவு வசதிகள் அமைந்திருந்தாலும் மேலும் மேலும் முயற்சி செய்ய வேண்டும். இலையில் இட்ட சோற்றையும் எடுத்து உண்டால் அன்றிப் பசி தீராது; ஆகவே உலையாத முயற்சியை ஊக்கிச் .செய்க. ஆற்றும் கருமம் அரிய மேன்மைகளை அருளுகின்றது.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

முன்புநல் வினைசெய் தவர்முயற் றின்றி
முன்னிய வெலாமுண்பர் என்னில்
இன்பவால் அரியே முதலுப கரணம்
எலாமினி துடையவ ரேனும்
வன்புறு மடுதல் முயற்சியில் லாமை
வயிற்றெழு பசித்தழல் அவிய
நன்பதம் ஆமோ மறைமுழு துணர்ந்த
நற்றவக் குணப்பெருங் குன்றே!. 151

கடவுளீ குவனென் றெண்ணிநித் தியமுங்
கருதுறு முயற்சிசெய் யானேல்
அடலுறு செல்வம் அடைகுவ னேகொல்
அருங்கலத் திட்டபா லடிசில்
மிடலுடைக் கரத்தால் எடுத்துணா தெங்ஙன்
வீங்கும்வெம் பசிப்பிணி ஒழிப்பன்
உடல்பவந் தனக்கோர் ஆகர மாகும்
உடல்நனி வாட்டுமெய்த் தவத்தோய்! 152

முன்பொரு கராவால் எமாய்வலி சிந்தும்
மும்மதக் கறையடிக் கயமும்,
சன்புடைப் பொன்னன் புரிகொடு மையினால்
மனமெலி பிரகலா தன்னும்
அன்பினோ டேத்தி யழைத்தலா னன்றே
அலைகடல் வண்ணன்வந் தாண்டான்
என்பரா தலினால் முயற்சிசெய் பவருக்
கெய்தரும் பொருளுமொன் றுனதோ. 153 - குசேலோபாக்கியானம்

ஊழ் ஊட்டும் எனினும் மனிதன் ஒயாது முயற்சி செய்ய வேண்டும்; அவ்வாறு செய்கின்ற கரும வீரனுக்கே தெய்வம் உரிமையாய்த் துணை செய்யும் என இவை உணர்த்தியுள்ளன.

உள்ளம் தளராமல் முயன்று வருவது உயர்ந்த பண்பாடாய்க் கிளர்ந்து வருகிறது. அரிய செல்வமும் பெரிய மதிப்பும் அதனால் விளைந்து வருகின்றன. வேந்தனுடைய ஆற்றல் வினையாண்மையால் ஏற்றம் பெற்று வருதலால் அதனைப் போற்றி வருமளவு புகழ் ஒளிகள் பொலிந்து விளங்குகின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Feb-21, 10:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 108

சிறந்த கட்டுரைகள்

மேலே