காசினியைக் கண்ணோடிக் காத்து வருமளவே தேசினிமை செழித்துவரும் - அறிவு, தருமதீபிகை 770

நேரிசை வெண்பா

காசினியைக் கண்ணோடிக் காத்து வருமளவே
தேசினிமை எல்லாம் செழித்துவரும் - மாசிரிய
மானவரை ஓம்பிவரின் மற்றவனே மேலாகி
வானவரை ஓம்ப வரும். 770

- அறிவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அரசன் உலகத்தை இனிது பாதுகாத்து வருமளவே புகழும் இன்பமும் வளமாய் உளவாம்; குற்றம் குறைகள் நேராமல் மனிதரைப் பேணிவரின் அந்த மன்னன் பின்பு தேவரைப் பேணும் திவ்விய நிலைமையை நேரே எய்துவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

காசினி - பூமி. தேசு - கீர்த்தி. ஒளிமிகுந்த புகழ் தேசு என வந்தது. தேசம் பெற்றவன் தேசு பெற வேண்டும்.

பிறந்த மனிதன் எவனும் தனக்குரிய கடமையைக் கருதிச் செய்யவே உரிமையாய் மருவியிருக்கிறான். தன் கருமத்தைச் செய்யாமல் ஒருவன் காலத்தைக் கழித்துவரின் அவன் கடையனாய் இழிந்து படுகிறான். காரியங்களைச் செய்து வருமளவே சீரும் சிறப்பும் எய்தி வருகின்றான். மனித இனத்துள் தனி மகிமை அடைந்துள்ள அரசன் தனது நிலைமையை உணர்ந்து நிலம் புரந்துவரின் அந்தத் தலைமை என்றும் குன்றாமல் வென்றி வீறோடு விளங்கி யாண்டும் மாண்பு சுரந்து வரும்.

நரபதி, மகிபதி, தராபதி என அரசனுக்கு அமைந்திருக்கும் பெயர்கள் அவனுடைய நிலைமைகளைத் துலக்கி நிற்கின்றன. மனித சமுதாயம் அமைதியாய் வாழ உலகத்தை இனிது பாதுகாத்து வருபவனே மன்னனென்னும் பேர்க்கு உண்மையான உரிமையாளன் ஆகிறான். சிறந்த புண்ணியத்தினாலேயே ஒருவன் தேசாதிபதியாய்ப் பிறந்து வருகிறான். '

இன்னிசை வெண்பா

அறம்புரிந்(து) அம்ம அரசிற் பிறத்தல்
துறந்த தொடர்பொடு துன்னிய கேண்மை
சிறந்தார்க்கும் பாடு செயலியார் தத்தம்
பிறந்தவேல் வென்றிப் பொருட்டு, - தகடுர்

புரிந்த அறத்தின் பயனால் ஒருவன் அரசன் ஆகின்றான்; அங்ஙனம் சிறந்த நிலையில் பிறந்தவன் கரும வீரனாய் உயர்ந்து யாண்டும் வென்றியோடு விளங்க வேண்டும் என இது விளக்கியுள்ளது. ஆளும் தலைமை அதிசய ஆண்மையாம்.

அரிய நிலையில் வந்துள்ள சரியான ஒரு தலைவனால் உலகம் நெறியே நடந்து வருகிறது; அவனுடைய ஆணை வழியே யாவரும் ஒழுகி விழுமிய நிலையில் விளங்கி வருகின்றனர்.

All cannot be rulers, and men are generally best governed by a few. Some born to govern, and others to obey.- Goldsmith

’எல்லாரும் அரசராயிருக்க முடியாது; மனித சமுதாயம் சில தலைவரால் நன்கு ஆளப்படுகிறது; சிலர் ஆளப்பிறந்துள்ளார்; பலர் அடங்கி வாழ நேர்ந்துள்ளார்' என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணர வுரியது.

நீதி முறைகளை ஓர்ந்து தீதுகள் களைந்து தேசத்தைப் பாதுகாக்கும் பான்மையில் வந்துள்ளமையால் அரசனிடம் அரிய பல மேன்மைகள் அமைந்திருக்கின்றன. பரிபாலன முறை யாதும் பழுதுபடாமல் நெறியே அமைந்துவரின் நேரே அங்கு தெய்வீக அருள் சேர்ந்து திகழ்கின்றது. தன் பொறுப்பை உணர்ந்து கடமையைச் செய்து வருமளவு சிறப்புக்கள் செழித்து வருகின்றன. பருவம் தவறாமல் கருமம் புரிவதே தருமமாம்.

நேரிசை வெண்பா

ஆளும் அரசாய் அடைந்தான் அதையுணர்ந்து
நாளும் சரியாய் நடந்துவரின் --- கேளும்
கிளையும் பெருகிக் கிளரொளிநீர் ஞாலம்
விளையும் உவகை விரிந்து.

தனது நிலைமையைச் சீர்தூக்கி நோக்கித் தகுதியாய் ஒழுகி வந்தால் அந்த அரசனுடைய ஆட்சி விழுமிய நிலையில் உயர்ந்து என்றும் செழுமையாய் விளங்கி வரும். ஒரு நாட்டிலுள்ள பல கோடி மக்களுடைய வாழ்வு அரசனுடைய கருமக் காட்சியில் மருவியிருக்கிறது. தன் பொறுப்பை உணர்ந்து உரிமையோடு அரசன் கடமையைச் செய்துவரின் அந்த ஆட்சி எவ்வழியும் செவ்வையாய்ச்.சிறந்து சீர்த்தியோடு உயர்ந்து விளங்கும்.

அல்லல் அடையாமல் மக்கள் நல்ல நிலையில் வாழ்ந்து வரச் செய்துவரின் அதுவே நல்ல அரசாம். இளந்திரையன் என்பவன் காஞ்சிபுரத்தில் இருந்து அரசு புரிந்தான். அவன் ஒரு குறுநில மன்னனே ஆயினும் அறிவு நலங்களில் பெரியனாய் நாட்டை இனிது பேணி வந்தான். மக்கள் எவ்வழியும் மிக்க இன்பமாய் மேவி வாழ்ந்தனர். அவனது ஆட்சிக் காலத்தில் அந்த நாடு இருந்த நிலைமையைக் குறித்து அறிஞர் பலரும் வியந்து புகழ்ந்துள்ளனர். ஒன்று அயலே வருகிறது.

மலர்தலை உலகத்து மன்உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,
இலங்கு நீர்ப்பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி அன்ன, வசைநீங்கு சிறப்பின்,
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்,
பல்வேல் திரையற் படர்குவிர் ஆயின்
கேள்,அவன் நிலையே; கெடுகநின் அவலம்!

திரையனது ஆணை

அத்தம் செல்வோர் அலறத் தாக்கி,
கைப்பொருள் வௌவும் களவேர் வாழ்க்கைக்
கொடியோர் இன்றஅவன் கடியுடை வியன்புலம்;
உருமும் உரறாது; அரவும் தப்பா;
காட்டு மாவும் உறுகண் செய்யா; வேட்டாங்(கு),
அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கி,
சென்மோ, இரவல! சிறக்கநின் உள்ளம்!.- பெரும்பாண் ஆற்றுப்படை

திரையனது ஆட்சியின் மாட்சியை இது காட்சிப் படுத்தியுள்ளது. களவு முதலிய இழி தொழில்கள் அவன் நாட்டில் கிடையா; காட்டுமிருகங்களும் யாருக்கும் இடையூறு செய்யா; எந்த நேரமும் யாதொரு பயமுமின்றி யாரும் எவ்வழியிலும் எதையும் கொண்டு செல்லலாம்; அல்லல் என்பது யாண்டும் இல்லாதபடி அவன் ஆண்டு நீண்ட புகழோடு நிலவி வந்துள்ளான் என்பதை ஈண்டு இதனால் நன்கு அறிந்து கொள்கிறோம்,

சீவர்கள் இனிது வாழத் தனியுரிமையோடு அரசன் பாதுகாவல் செய்துவரின் அங்கே தரும தேவதை நனி மகிழ்ந்து வாழும். மழை வளம் சுரந்து நிலம்வளம் நிறைந்து பல வளங்களும் அந்நாட்டில் மிக விளைந்து மேன்மை மிகுந்து திகழும்.

நீதி மன்னர் நெறிமுறை செய்யினோ
மாதம் மும்முறை வானம் வழங்குமே. :

என்றதனால் அரசன் நெறியோடு ஆண்டு வந்தால் அந்நாடு வளமாய் நீண்டு வரும் என்பது தெரிய வந்தது. பகை, பசி, பிணி, துயர் யாதுமின்றி யாவரும் உவகையாய் வாழ்ந்து வர வேந்தன் வகைபுரிந்து வரின் அது வானக வாழ்வாய் ஒளி புரிந்து தெளிவடைந்து விழுமிய நிலையில் விளங்கி வரும்.

மாந்தாதா என்னும் வேந்தன் அரசுபுரிந்த காலத்தில் புலியும் புல்வாயும் ஒரு துறையில் நேரே நீர் அருந்தி வந்தன; அந்த ஆட்சி சீரமைந்து திவ்விய நிலையில் உயர்ந்து வந்துள்ளது.

தரவு கொச்சகக் கலிப்பா

கருதலரும் பெருங்குணத்தோர். இவர்முதலோர் கணக்கிறந்தோர்
திரிபுவனம் முழுதாண்டு சுடர்நேமி செலநின்றோர்;-
பொருதுறைசேர் வேலினாய்! புலிப்போத்தும் புல்வாயும்
ஒருதுறையில் நீருண்ண உலகாண்டான் உளனொருவன். 5

- குலமுறை கிளத்து படலம், பால காண்டம், இராமாயணம்

இத்தகைய உத்தமமான நீதி மன்னரைப் பாரத மாதா பெற்று வந்துள்ளது. தரும நீதிகள் தோய்ந்து இங்ஙனம் பெருமை பெற்றிருந்த நாடு இன்று சிறுமையுற்றிருக்கிறது. புறத்தே சனத்தொகை பெருகியுள்ளது; அகத்தே மடமையும் புன்மையும் மருவியுள்ளன. ஆகவே வறுமையும் சிறுமையும் மண்டி அல்லல்களும்.அவலக் கவலைகளும் யாண்டும் நீண்டு நிற்கின்றன. .

நல்ல அறிவும் சீலமும் இல்லாமையால் மக்கள் அல்லல்களில் அழுந்தி அவலம் அடைய நேர்ந்தனர். தருமமும் சக்தியமும் அதிசய சத்திகளுடையன; அவற்றை இழந்த அளவு எவரும் இழிந்தவராகின்றார். சத்திய சீலமுள்ள ஒருவன் எதிரே பத்தாயிரம் பேரும் பணிந்து நிற்பர். அத்தகைய உத்தம ஆத்தும சக்தியை ஒழிய விட்ட சமுதாயம் எதுவாயினும் அது இழிவாய் அழிவு பட்டதேயாம். உயிர் ஒளி குறைய உயர்வு ஒளிகிறது.

A little group of wise hearts is better than a wilderness full of fools; and only that nation gains true territory, which gains itself. - Fuskin

மூடக்கூட்டம் பெருங்காடு போல் பெருகியிருப்பதனிலும் ஞான சீலமுள்ள சிறிய குழு மிகவும் நல்லது; அறிவு நலமுடைய அந்தச் சமுதாயமே உண்மையான இராச்சியத்தை உரிமையாய் அடைகிறது' என ரஸ்கின் என்னும் ஆங்கில அறிஞர் இங்ஙனம் குறித்திருக்கிறார். குறிப்பு கூர்ந்து நோக்கவுரியது.

உள்ளப் பண்புடைய நல்லவர்களாலேயே நாடு நலம் பல அடைகிறது. நல்லோர் இருப்பது பல்லோர்க்கும் இன்பமாம்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)
எல்லார்க்கும் பெய்யும் மழை. - ஒளவையார்

நல்லோரால் உலகிற்குளவாம் நன்மையை இதனால் நன்கு உணர்ந்து கொள்கிறோம். நல்ல நீர்மைகளால் தருமங்கள் விளைகின்றன; அந்தப் புண்ணிய விளைவுகள் எண்ணரிய மேன்மைகளையும் இன்ப நலங்களையும் விளைந்தருளுகின்றன.

தரும குணங்கள் அமைந்த இத்தகைய உத்தமர்களை எந்த நாடு உரிமையாய்ப் பெற்றிருக்கிறதோ அந்த நாடு பெருமைகள் யாவும் நிறைந்து புத்தேள் உலகம் போல் பொலிந்து விளங்கும். புனிதமான அந்த மனித சமுதாயத்தை ஆள நேர்ந்தவன் அதிசய மகிமைகள் தோய்ந்து உலகம் துதி செய்ய வருகின்றான்

எல்லா உயிர்களையும் இனிது பேணுவதே நல்ல அரசின் நீர்மையாம். அந்நீர்மையாளன் யாண்டும் சீர்மையாளனாய்ச் சிறந்து திகழ்கிறான் இராமன் அரசு முடிசூட நேர்ந்தபோது வையமும் வானமும் ஒருங்கே வாழ்த்தி நின்றன. அப்பொழுது அவனைக் குறித்து வசிட்ட முனிவர் உவந்து புகழ்ந்தார். அறிவு நலம் கனிந்த அவருடைய உரைகளில் சில அயலே வருகின்றன.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

பொன்னு யிர்த்தபூ மடந்தையும், புவிஎனும் திருவும்,
இன்னு யிர்த்துணை இவன்என நினைக்கின்ற இராமன்,
தன்னு யிர்க்கென்கை புல்லிது தற்பயந்(து) எடுத்த
உன்னு யிர்க்கென நல்லன்,மன் உயிர்க்கெலாம் உரவோய் 37

மண்ணி னும்நல்லள்; மலர்மகள், கலைமகள், கலைஊர்
பெண்ணி னும்நல்லள்; பெரும்புகழ்ச் சனகியோ நல்லள்-
கண்ணி னும்நல்லன்; கற்றவர் கற்றிலா தவரும்,
உண்ணும் நீரினும், உயிரினும், அவனையே உவப்பார். 39

மனிதர், வானவர், மற்றுளோர் அற்றம்காத்(து) அளிப்பார்
இனிய மன்னுயிர்க்(கு) இராமனின் சிறந்தவர் இல்லை;
அனைய(து) ஆதலின், அரச!நிற்(கு) உறுபொருள் அறியின்,
புனித மாதவம் அல்லதொன்(று) இல்’எனப் புகன்றான். 40 மந்திரப் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்

இந்தக் கவிகளைக் கருத்து ஊன்றி நோக்கிப் பொருள்களையும் சுவைகளையும் கூர்ந்து ஓர்ந்து கொள்ள வேண்டும். பூமிதேவியும், இராசலட்சுமியும் இராமனைத் தம் இன்னுயிர்த் துணையென எண்ணி மகிழ்ந்துள்ளனர். அந்த மகிழ்ச்சி நிலை அவனது மகிமையைத் துலக்கியுள்ளது. சீவகோடிகள் யாவும் சிந்தை களித்துள்ளமையால் அரசாய் வந்த அவன் எந்த நிலையினன் என்பதை எளிது தெளிந்து கொள்ளலாம். இனி இம்மன்னுயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை என்று முனிவர் துணிந்து கூறியிருப்பது உணர்ந்து கொள்ள உரியது. இராமனைப் போல் ஒரு அரசனை இனிமேல் இவ்வுலகம் மீண்டும் யாண்டும் அடைந்து கொள்ள முடியாது என்று முடிவு செய்திருக்கிறார். இக் கோமகன் புரிந்து வந்த ஆட்சி நிலையை உவந்து இராமராச்சியம் என மனித சமுதாயம் வழிவழியே புகழ்ந்து வருகிறது. நீதிநெறியான அரசுமுறை நிரந்தரமான சீர்த்தியை விளைத்தருளியது.

’வானவரை ஓம்ப வரும்’ என்றது இங்கே மனித சமுதாயத்தை இனிது பேணி வந்தவன் பின்பு தேவர்க்கு அதிபதியாய்க் சிறந்து விளங்குவான் என்பது தெரிய வந்தது. உரிய கடமையை ஓர்ந்து செய்தவனுக்குப் பெரிய பதவிகள் நேர்ந்து வருகின்றன. கரும வீரன் தரும நீரனாய் உயர்கின்றான்.

அரசன் மேலான நிலையினன்; கருவிலே திருவனாய்த் தருமம் தோய்ந்து வந்தவன்; அரியன ஆய்ந்து செய்பவன்; அவன் புரியும் கருமங்கள் தரும நீதிகளையே தழுவி எழுகின்றன.

The superior man employs all his power to do that which is just and proper, and for the good of mankind. justice alone is his guide. - Confucius

’தலைமையான அரசன் மனித சாதியின் நன்மையை ஒர்ந்து சரியான நீதி முறைகளை எவ்வழியும் நெறியே செய்கிறான்; நீதியே அவனுக்கு யாண்டும் வழிகாட்டியாயுள்ளது ' என்னும் இது ஈண்டு ஊன்றி உணர வுரியது. தேச நன்மையை நீ நாடிச்செய், ஈசன் அருள் உன்னைநாடி உரிமையோடு ஓடி வரும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Mar-21, 7:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே