வாவியின்கண் நீர்பருகான் வன்கானல் மேலோடி ஆவி அழிதல்போல் - ஆற்றல், தருமதீபிகை 780

நேரிசை வெண்பா

ஒன்றும் முயற்சிசெய்(து) ஒண்பொருளை ஈட்டாமல்
சென்றுபிறர் பாலிரந்து சீரழிதல் - நின்றதொரு
வாவியின்கண் நீர்பருகான் வன்கானல் மேலோடி
ஆவி அழிதல்போல் ஆம். 780

- ஆற்றல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சொந்தமாய்த் தான் முயன்று பொருளை ஈட்டாமல் பிறரிடம் போய் இரந்து பெறுவது இழிந்த பேரிழவாம்; இனிய நீர் நிறைந்த வாவியில் புகுந்து நீர் பருகாமல் கொடிய கானலை நாடி ஓடி அழிவது போல் அது நெடிய கேடாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

சுகமும் மரியாதையும் மனிதனுக்கு மிகவும் பிரியமானவை. துக்கமும் அவமானமும் தன் பக்கம் அணுகினும் அச்சமும் அருவருப்பும் அடைய நேர்கின்றான். இன்பமுடன் கண்ணியமாய் வாழ விரும்புகிறவன் அதற்குத் தகுதியாகத் தன்னைச் செய்து கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்யானாயின் அவ் வாழ்வு அவலமாயிழிந்து வெவ்விய துயர்களை அடையும்.

இந்த உலக வாழ்வு பொருளால் இனிமையுறுகிறது. ஆகவே அதனை அடைந்து கொள்ள வேண்டியவனாய் மனிதன் அமைந்து நின்றான். உழவு வாணிகம் முதலிய தொழில்களால் பொருள்கள் உளவாகி வருதலால் அவை சீவனோபாயங்களாய் நேர்ந்தன. உயிர்கள் உண்ணுதற்கு உரிய உணவுகளைப் பயிர்கள் விளைத்தருளுதலால் மனித வாழ்வுக்கு உழவு புனிதமான தொழிலாய் இனிது பேண வந்தது. உழவு உயிர் வாழ்வாயது.

உண்ண நேர்ந்த மனிதன் எவனும் உழைக்க வேண்டும் என்பது இயற்கை நியமமாய் நின்றமையால் அந்த உழைப்புகளுள் உழவு தலைமையாய் அமைந்தது. உழைப்பை யுடையது உழவு எனக் காரணக் குறியாய் வந்திருத்தலால் அதன் சிறப்பையும் சீர்மையையும் ஓர்ந்துணர்ந்து கொள்ளுகின்றோம்.

சுழன்றும்ஏர்ப் பின்ன(து) உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை! 1031 உழவு

உலகம் உழவால் உயிர்த்து வருகிறது எனத் தேவர் இவ்வாறு உணர்த்தி யிருக்கிறார். மெய் வருந்திக் கை முயன்று உழைக்க வேண்டுமே என்று அஞ்சி உழவுத் தொழிலை விட்டு உத்தியோகம் முதலிய வேறு வழிகளில் மாறிப் போனவரும் உணவுப் பொருளுக்கு உழுவானை நாடியே ஒடி வர வேண்டுமாதலால் வருத்தம் மிகுந்திருந்தாலும் உழவே தலைமையான தொழில் என நிலையான புகழோடு அது நிலவி நின்றது. உரிமையான உழைப்பு ஒழிந்தால் பெருமையாய்ப் பிழைக்க முடியாது; ஆகவே யாவரும் உழைக்க வேண்டும் என்பது உண்மை நியதியாய் வந்தது. பாடு படுவது பீடு பெறுவதாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)

ஒருமாடும் இல்லாமல் மைத்துனனார் உலகமெல்லாம்
உழுதே உண்டார்;
நரைமாடோ ஒன்றிருக்க உழுதுண்ண மாட்டாமல்
நஞ்சை உண்டீர்!
இருநாழி நெல்லிருக்க இரண்டுபிள்ளை தாமிருக்க
இரந்தே உண்டீர்!
திருநாளும் ஆயிற்றே செங்கமலைப் பதிவாழும்
தியாக னாரே! - காளமேகம்

காளமேகப் புலவர் ஒருமுறை திருவாரூருக்குப் போயிருந்தார். அப்பொழுது அங்கே திருநாள் நடந்து கொண்டிருந்தது; பிச்சாடனமூர்த்தியாய்ச் சிவபெருமான் எழுந்தருளி வந்தார்; அந்தக் கோலத்தைக் கண்டதும் கவிஞர் இந்தப் பாட்டைப் பாடினார். நகைச்சுவை சுரந்து வந்துள்ள இது உழைப்பின் பெருமையை உலகத்திற்கு நன்கு உணர்த்தி யுள்ளது.

"ஐயா! தியாகராசரே! உமது மைத்தனர் நாராயணனுக்கு ஒரு மாடு கூட இல்லை; தம்முடைய கையாலேயே உழைத்துப் பூமியை உழுது சுகசீவியாய் வாழுகின்றார், உமக்கு நல்ல ஒரு வெள்ளை மாடு இருக்கிறது; துடுக்கான பிள்ளைகள் இருவர் இருக்கின்:றனர்; விதையைச் சேகரித்துக் கொடுக்க இதமான மனைவி இருக்கிறாள்; இருந்தும் நீர் உழவுத் தொழிலைச் செய்யாமையால் உணவு கிடையாமல் போகவே சாகலாம் என்று வேகமாய் நஞ்சை உண்டீர்; இறப்பு வரவில்லை; ஆகவே இரந்து திரிந்தீர்; உலகம் உமக்குக் திருநாளும் கொண்டாடுகிறது' என அன்புரிமையோடு கவி இறைவனைப் புகழ்ந்து கொண்டாடியிருக்கும் அழகை இதில் உவந்து கண்டு உள்ளம் வியந்து நிற்கிறோம்.

கடவுள் ஆனாலும் முயற்சி செய்ய வேண்டும்; சோம்பியிருக்கக் கூடாது என்னும் தத்துவத்தை இது உய்த்துணரச் செய்துள்ளது. தொழில் செய்பவன் ஒளி செய்கின்றான்.

உலக பரிபாலனான அரசன் முயற்சியை உயர்ச்சியாய்ப் போற்றிவரின் குடிசனங்கள் உள்ளக் கிளர்ச்சியோடு ஊக்கி உழைத்து வருவர்; பல்வகைச் செல்வங்களும் அங்கே தழைத்து விளங்கும். சீரிய வளங்கள் செங்கோலால் ஓங்கி வருகின்றன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

ஆறுபாய் அரவம், மள்ளர் ஆலைபாய் அமலை, ஆலைச்
சாறுபாய் ஓதை, வேலைச் சாங்கின்வாய்ப் பொங்கும் ஓசை,
ஏறுபாய் தமரம், நீரில் எருமைபாய் துழனி, இன்ன
மாறுமா(று) ஆகி, தம்மில் மயங்கும்மா மருத வேலி. 3

நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை; துறையிடை உறங்கும் இப்பி;
போரிடை உறங்கும் அன்னம்; பொழிலிடை உறங்கும் தோகை. 6

படைஉழ எழுந்த பொன்னும், பனிலங்கள் உயிர்த்த முத்தும்,
இடறிய பரம்பில் காந்தும் இனமணித் தொகையும், நெல்லின்
மிடைபசுங் கதிரும், மீனும், மென்தழைக் கரும்பும், வண்டும்
கடைசியர் முகமும், போதும், கண்மலர்ந்(து) ஒளிரும் மாதோ. 7

ஆலைவாய்க் கரும்பின் தேனும், அரிதலைப் பாளைத் தேனும்,
சோலைவீழ்க் கனியின் தேனும், தொடைஇழி இறாலின் தேனும்,
மாலைவாய் உகுத்த தேனும், வரம்பிகந்(து) ஓடி, வங்க
வேலைவாய் மடுப்ப - உண்டு, மீன்எலாம் களிக்கும் மாதோ. 9

- நாட்டுப் படலம், பால காண்டம், இராமாயணம்

தசரதன் ஆட்சிக் காலத்தில் அவன் நாடு செழித்திருந்த நிலைகளை இப்பாடல்கள் நயமாய்க் காட்டியுள்ளன. கவிகளின் சுவைகளையும் காட்சி நலங்களையும் கருதி உணர வேண்டும்.

மாந்தர் உவந்து முயன்று வருவதெல்லாம் வேந்தன் விழைந்து புரந்து வரும் நீர்மையில் சீர்மையாய் விளைந்து நிற்கின்றன. மானமாய் வாழ வகுத்தருள்வது மன்னன் கடமையாம்.

தானாக உழைத்து உண்டு வாழ்வதில் மதிப்பும் இன்பமும் செழித்து வருகின்றன; உழையாமல் பிறருடைய' ஆதரவை எதிர்பார்த்தோ, யாசித்தோ வாழ்வது மிகவும் ஈன வாழ்வாம்.

Serenity, health, and affluence attend the desire of rising by labour; misery, repentance, and disrespect, that of succeeding by extorted benevolence. - Goldsmith

'தன் உழைப்பால் உயர விரும்புகிறவனிடம் அமைதி, சுகம், செல்வம் முதலிய நலங்கள் இயல்பாய் வருகின்றன; பிறருடைய உதவியை நாடி அபகரித்து வாழ்பவன்பால் துன்பமும் பரிதாபமும் அவமானங்களும் உளவாகின்றன” என்னும் இது இங்கே ஊன்றி உணர வுரியது. அயலை நாடுவது அழிவை நாடுவதாம்.

தானாக முயன்று வாழ்வதில் மானம் மரியாதைகள் நிறைந்து மகிமைச் சுகங்கள் பெருகி நிற்கின்றன; இவ்வாறு முயலாமல் அயலாரை எதிர்பார்த்து யாசித்து வாழ்வதில் ஈன இழிவுகளே யாண்டும் நீண்டு இடர்கள் மூண்டுள்ளன.

தன் முயற்சியால் வருவது இனிய ஊற்றுநீர் போல் இன்பம் தருகிறது; பிறர்பால் இரந்து கொள்வது இழிந்த சாக்கடை நீர்போல் துயரமே தருமாதலால் அது எவ்வழியும் இகழ்ந்து வெறுக்கத் தக்கது. ஈனம் ஒழியின் மானம் விளையும்.

அறிவோடு முயன்று வருபவன் வாவி நீர் பருகுபவன் போல் ஆவி இன்புற்று வருகிறான்; அயலே யாசிக்கப் போனவன் கானல்நீரை நாடி அலைந்த பேதை போல் புலையாயிழிந்து தொலையாத துயரங்களை நிலையாக அடைந்து உழல்கின்றான்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

பாலையென் றுலர்ந்த செந்நிலங் கானல்
..பரப்பினைப் புனலென ஓடிச்
சாலவும் இளைத்துத் தவித்துழை யினங்கள்
..தனித்தனி மறுகிய மறுக்கம்
மாலுளர்ந்(து) இருண்ட புன்மனச் சிறியோர்
..மருங்கினில் இரந்திரந்(து) இடைந்து
காலறத் தேய்ந்த பலகலை மேலோர்
..கருத்தினில் வருத்தமொத் தனவே. 6 சுரத்தில், சீறாப்புராணம்

கானலைப் புனலென ஓடி இளைத்த மான் இனங்கள் போல் கலை நலமுடைய மேலோர் புலையான புல்லரிடம் பொருளை நாடி அலைந்து வருந்தினர் என இது வரைந்து காட்டியுள்ளது.

ஒருவன் அரிய பல கலைகளைப் பயின்றிருந்தாலும் ஏதேனும் ஒரு தொழிலைச் செய்யவில்லையானால் அவன் வாழ்வு இழிவே அடையுமென்பதை இதனால் அறிந்து கொள்கிறோம். கலையறிவு தலைமையானது; புனிதமான மகிமையுடையது. புலமையை மதித்து மன்னர் முன்னாள் போற்றி வந்தனர்; அரச குலம் அழியவே அந்நிலைமை மாறியது. காலநிலையை உணராமல் பழைய பரம்பரை வாசனையால் புலவர் பலர் செல்வரிடம் சென்று அல்லல் அடைய நேர்ந்தனர். புலமையை அறிவின்பத்துக்கு உரிமையாய் வைத்துக் கொண்டு உலக நிலையில் கூலவாணிகன் சாத்தனர் போல் ஒரு தொழிலைத் தழுவி வாழ்க்கையை நடத்த வேண்டும். அவ்வாறின்றிப் புலமையை சீவனோபாயமாய்க் கொள்ள நேரின் அவ்வாழ்வு அல்லல் அடைய நேரும். வால்டேர் [Voltaire] என்பவர் சிறந்த கலைஞர்; பிரஞ்சு தேசத்து மேதை, பேரறிஞர் என்று மேல்நாடு முழுவதும் புகழ்மிகப் பெற்றவர். புலமையை ஒருவன் தொழிலாகக் கொண்டால் அவனுடைய வாழ்க்கை பரிதாபமாம் என்று பரிந்து வரைந்துள்ளார். அனுபவ நிலையில் அறிந்ததை மனித சமுதாயம் அறிய அவர் உரைத்திருப்பது காண்க.

Literature is the profession of the man who wishes to be useless to society and a burden to his relatives, and to die of hunger. - Voltaire

'சமுதாயத்துக்கு உபயோகம் இல்லாதவனாய்த் தன் உறவினர்க்குப் பாரமாய்ப் பட்டினி கிடந்து சாகத் துணிந்துள்ளவன் எவனோ அவனே புலமையைச் சீவனோபாயமாய்க் கொள்ளுவான்' என அப்புலவர் இவ்வாறு குறித்திருக்கிறார்.

உயர்ந்த கல்வியறிவை வயிற்றுப் பிழைப்புக்குப் பயன்படுத்த நேர்ந்த பொழுது அது மாறாய்ச் சீரழிய நேர்கிறது. சீரிய கூரிய அறிவை ஒர் அணுவளவு உபயோகித்து வேறு ஒரு தொழிலைச் செய்து கொண்டால் வாழ்க்கை சிறந்து நடந்துவரும்.

நல்ல கல்வியறிவுக்குப் பயன் அல்லல் யாதும் நேராமல் மானம் மரியாதையுடன் வாழ்வதேயாம். வாழ்க்கைக்கு ஒளி தருவது தொழிலே, தன் இயல்புக்குத் தக்கபடி ஒரு கருமத்தைக் கைக்கொண்டு உரிமையாய் வாழ்ந்துவரின் அது தருமமாய் வருகிறது. பிறரை எதிர்பாராமல் சுயமாய் முயன்று வாழ்பவன் உலகில் உயர்வான மகிமையை அடைந்து கொள்ளுகிறான்

யாரிடமும் எதையும் வாங்காதே; நீயாக முயன்று வாழ்; அந்த வாழ்வு அதிசய இன்பம் உடையது எனச் சீன தேசத்து அறிஞன் ஒருவன் தன் மகனுக்குப் போதித்திருக்கிறான். மானம் மரியாதையுடன் வாழவந்த போதனைகள் அயலே வருகின்றன.

A life of independence is a life of virtue. the man who can thank himself alone for the happiness he enjoys is truly blest. - Hoam

’பிறரை எதிர்பாராமல் சுயாதீனமாய் வாழ்வது தரும வாழ்வாம்; தான் அனுபவிக்கிற இன்பங்களுக்குத் தானே முயன்று தன்னையே நம்பியிருக்கிற மனிதன் பெரிய பாக்கியவான்' என்னும் இந்த அரிய வாக்கியங்கள் ஈண்டு உரிமையோடு ஊன்றி உணரவுரியன. விழுமிய வாழ்வு விழிதெரிய வந்தது.

உன்னுடைய வாழ்வு புனிதமாய் இனிது நடக்க வேண்டுமானால் நீ அன்னியரை எதிர்பாராதே; நீயே முயன்று வாழ், நெறிமுறையான அது தூய பேரின்ப வாழ்வாம்.

தன.து குடிசனங்கள் கரும வீரர்களாய் உயர்ந்து புனித நிலையில் இனிது வாழ்ந்து வரும்படி வேந்தன் ஓர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதே செவ்விய ஆட்சியாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Mar-21, 10:53 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே