3 ஆன்மீகவழியில் அமைதி

அத்தியாயம் – 3
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் போதித்தார். மனிதன் தன்னுடைய அனைத்து ஆசைகளையும் அழிப்பதன் மூலம் துன்பங்களை ஒழிக்கலாம் என்று கூறினார். நேர்மையான எண்ணங்கள், பேச்சு, செயல்கள் மூலம் துன்பங்களை முற்றிலும் அழிக்கலாம் என்று ஆசையை ஒழிப்பதற்கான வழிமுறைகளையும் புத்தர் கூறியுள்ளார். நாம் மனதில் எப்பொருள் மீதும் ஆசைப்படக்கூடாது என்ற வைராக்கியத்துடன் இருந்து விட்டால் துன்பத்திலிருந்து விடுதலை பெறலாம். நம் மனதில் தோன்றும் ஆசையை முளையிலே கிள்ளி எறிந்துவிட்டால் நாம் விரும்பும் அமைதி தானே வந்து விடும்.

நமது வாழ்க்கைத் தத்துவங்களை, ஆன்மீகக் கருத்துக்களை எளியமுறையில் அறிந்து கொள்வதற்கு பல நூல்கள் உள்ளன. வேதாந்தத்தில் கூறப்படும் கருத்துக்களை பொதுவாக ‘புருஷார்த்தம்’ என்று கூறப்படுகிறது. புருஷார்த்தம் என்பதில் ‘புருஷக.’ என்றால் மனிதன் என்பதாகும். ‘அர்த்தம்’ என்றால் இந்த இடத்தில் இலக்கு அல்லது இலட்சியம் என்று பொருள் கொள்ள வேண்டும். பொதுவாக மனதை உடையவன் மனிதன் என்றும் அழைக்கப்படுகிறான். உலகில் மனிதர்களுக்கு மட்டும்தான் சிந்திக்கும் ஆற்றல் இருக்கிறது. அதனைச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஆற்றலும் அவனுக்கு இருக்கிறது. மனிதனைத் தவிர விலங்குகள், பறவைகள், ஊர்வன போன்ற அனைத்து உயிரினங்களுக்கு, சிந்திக்கும் ஆற்றலோ, எண்ணியதை செயல்படுத்தும் ஆற்றலோ அவைகளுக்கு இல்லை. உலகில் காணப்படும் விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்கள் அனைத்துக்கும் மனிதனைப்போல் இலட்சியம் குறிக்கோள் போன்றவை இல்லை. சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டும் இருப்பதால், நன்மை எது தீமை எது என்று சிந்தித்து செயல்புரிவதற்கு முடியும். அதனால் நாம் மன அமைதி பெறுவதற்கு முடியும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனையறியாமல் ஒரு லட்சியம் இருக்கிறது . அவன் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அதனை உணரமுடியும். அவனுடைய மனதில் அவனையும் அறியாமல் ஒரு பொருளின் மீதோ, செயலின் மீதோ தோன்றக்கூடிய மன உறுதியை, தீர்மானத்தை மனிதனுடைய லட்சியம் குறிக்கோள் என்று கூறப்படுகிறது. இந்த உலகத்தில் மனிதனால் மட்டும்தான் ஒரு இலட்சியத்தை நினைக்கவோ அதன் இலக்கை அடையவோ, நிர்ணயப்பதற்கும் முடியும். ஆனால் விலங்குகள், பறவைகள், ஊர்வன போன்ற உயிரினங்களுக்கு இலட்சியம் பற்றி நினைக்கவோ செயல்படுத்தும் நிலையோ, பகுத்தறியும் தன்மையோ அவைகளுக்கு இல்லை. தங்கள் உடல், உள்ளத்தின் மூலம் ஆன்மீக பயிற்சி பெற்று, மனதால் உணர்ந்து, ஆன்மீக சாதனைகள் புரிவதற்கு மனிதர்களால் மட்டும் முடியும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு இலட்சியம் அவனையும் அறியாமல் இருந்துகொண்டு, அவனது வாழ்க்கையை ஏதோ ஒரு வழியில் நடத்திக் கொண்டுதான் செல்கிறது. ஒரு மனிதன் அறிந்தும் அறியாமல் அவனையும் அறியாமல் ஏதோ ஒரு செயலைச் செய்துகொண்டுதான் இருக்கிறான். அவன் உடல் அளவில் சில நேரங்களில் செயல்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனும் மனதிற்குள் ஏதாவது ஒரு சிந்தனையில் இருந்து கொண்டுதான் இருப்பான். அவன் உடல் அளவில் அல்லது மனதளவில் ஒரு செயலை அவன் செய்வதற்கு ஏதாவது ஒரு காரணகாரியம் இருக்கும்.

எடுத்துக்காட்டாக ஒருவன் நூலகத்திற்குச் செல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் நூலகம் செல்வதற்குக் காரணம் செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களை படிக்கும் நோக்கத்துடன்தான் அங்கு செல்வான். அவன் நூலகம் செல்வதற்குக் காரணம் பெரும்பாலும் படிப்பதற்கு என்ற நோக்கம்தான் காரணமாக இருக்கும். இதேபோல்தான் ஒவ்வொரு செயலையும் சிந்தித்துப் பார்த்தால் மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணகாரியம் இருக்கும். மனிதர்களுக்கு எந்தவொரு காரணம் இல்லாமல் காரியம் என்பது எதுவும் இல்லை. உலகில் வாழும் எந்த ஒரு மனிதனும் தன்னோட செயலுக்கு காரணம் ‘எதுவும் இல்லை’ என்று மறுத்துக் கூறுவதற்கு முடியாது. பொதுவாக சிந்தித்துப் பார்த்தால் ஒருவன் வாழ்வில் எந்தவித குறிக்கோள்கள் நோக்கமில்லாமல் செய்யக்கூடிய செயல்கள், அர்த்தமற்ற பேச்சுக்கள் அவனது வாழ்வில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

விலங்குகள், பறவைகள், ஊர்வன போன்ற உயிரினங்களைப் பொறுத்தவரை மனிதனைப்போல அவைகளுக்கு இலக்கு, இலட்சியம், சிந்தனை போன்ற காரண காரியங்கள் எதுவும் இருப்பதில்லை. எடுத்தக்காட்டாக ஒரு தெரு நாய் அங்கும் இங்கும் திரிந்துகொண்டு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நாய் நினைத்தால் ஒரு இடத்தில் காரணமில்லாமல் நின்று கொண்டு இருக்கும். நின்றுகொண்டிருந்த அது திடீரென்று எவ்வித நோக்கமில்லாமல் சிறிது தூரம் ஓடிச்சென்று திரும்பி ஓடி வந்த பாதையையே திரும்பிப் பார்த்து நிற்கும். அது அவ்வாறு ஓடாமல் ஓர் இடத்தில் முடங்கிக்கூடப் படுத்துக்கொள்ளும். அந்த நாயின் செயல்களுக்கு எந்தவிதமான இலக்கு நோக்கம் காரணங்களோ இருப்பது இல்லை. நாய் என்ற அந்த விலங்குக்கு இலட்சியம், இலக்கு சிந்தனை என்றால் என்ன என்பதுகூட தெரியாது.

அதனால்தான் எந்தவித குறிக்கோளும் இலட்சியம் சிந்தனை இல்லாத மனிதனை உலகில் மிருகம் போன்றவன் என்று கருதப்படுகிறான். நாயைப் போன்றுதான் உலகில் உள்ள மற்ற விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களுக்கும் மனிதனைப்போல் எந்தவித இலக்கு லட்சியம், சிந்தனை காரண காரியம் போன்றவை இருப்பது இல்லை. மனிதனைத் தவிர உலகில் வாழும் மற்ற உயிரினங்களுக்கு அதன் செயல்களுக்கு காரணம் காரியங்களும் எதுவும் இருப்பது இல்லை.

பொதுவாக மனிதன் ஒரு செயல் செய்யும்போது அதற்கு ஏதாவது ஒரு காரண காரியம் உறுதியாக இருக்கும். சிந்தித்துப் பார்த்தால் எந்தவிதக் காரணமும் காரியமும் இல்லாமல் மனிதனுடைய செயல்பாடுகள் எதுவும் இருப்பதில்லை. அவனுக்கு காரணம் எதுவுமே இல்லாவிட்டாலும் ஒரு பொழுதுப்போக்குக்காக அந்தச் செயலைச் செய்தேன், ‘நடந்தேன்’ ‘ஓடினேன்’ ‘படித்தேன்’ என்று அவன் ஏதாவது ஒரு காரண காரியத்தினைக் கூறுவான். மனிதனுக்கு மட்டும் இதைப்போன்று காரணம் காரியம் இருக்கும். ஆனால் விலங்குகள் பறவைகள் போன்ற உயிரினங்களுக்கு இதுபோன்று காரணம் காரியம் இருப்பதில்லை. மனிதனைத் தவிர விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களுக்கு உண்பது, நினைத்த இடத்தில் உறங்குவது போன்ற செயல்பாடுகள்தான் இருக்கும். அவைகளுக்கு உண்பது உறங்குவது தவிர வேறு சிறப்பான செயல்பாடுகள் ஏதும் இருப்பதில்லை.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்குள் ஒரு இலக்கு அல்லது இலட்சியம் இருக்கவேண்டும். அது உயர்ந்த லட்சியமாக அல்லது தாழ்ந்த லட்சியமாகக்கூட இருக்கலாம். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவனையும் அறியாமல் மனதுக்குள் ஏதாவது ஒரு குறிக்கோள் இலட்சியம் இருக்கும், இருந்து கொண்டுதான் இருக்கும். ‘உலகில் உள்ள விலங்குகள் பறவைகள் போன்ற உயிரினங்களைப் போன்று மனிதனும் ஒரு இலட்சியம் இல்லாமல் இலக்குகள் இல்லாமல் இருக்கலாமே, விலங்குகள் பறவைகள் போன்று சுதந்திரமாக சுற்றித் திரியலாமே’ என்று மக்களில் சிலர் நினைக்கலாம். ஆனால் இலட்சியம் குறிக்கோள் இல்லாத மனிதர்களை மனிதர்களே இல்லையென்று நமது சாஸ்திரங்கள், வேதங்கள், இதிகாசங்கள் கூறுகிறது.

நமது பேச்சு வழக்கில் ஒருவரைப் பார்த்து ‘இங்கு எதற்கு வந்தீர்கள்’ என்று கேட்டால் ‘சும்மா உங்களைப் பார்க்க வந்தேன்’ என்று பதில் கூறுவான். அதில் ‘பார்ப்பது’ என்ற நோக்கம், காரியம் அவனை அறியாமல் அவனுக்குள் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஒருவன் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது என்ன படித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டால் ‘சும்மா பொழுது போகவில்லை அதான் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறுவான் . இதில் ‘படிப்பது’ என்ற நோக்கம் காரியம் அவனை அறியாமல் அவனுக்குள் இலட்சியமாக அப்போது இருந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். மனிதனுடைய சிந்தனை, செயல்கள் உயர்வாக இருக்கும்போது அவன் தேடும் விரும்பும் அமைதி கிடைக்கும். ( அமைதி தொடரும் )

எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (1-Mar-21, 6:05 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 68

சிறந்த கட்டுரைகள்

மேலே